பசுவைப் போற்றி வணங்கிய துகாராம் (Post No.12,628)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,628

Date uploaded in London –  24 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

மகான்கள் வாழ்வில் ..

பசுவைப் போற்றி வணங்கிய துகாராம்!

ச.நாகராஜன் 

பஹினாபாய் ஒரு பெரும் பக்தை. அவரது கணவர் கங்காதர ராவும் அப்படியே ஒரு சிறந்த பக்தர்.

இருவரும் மிகுந்த ஆசையுடன் ஒரு பசுவை வளர்த்து வந்தனர்.

ஒரு நாள் துகாராம் யாத்திரையாக வரும் போது தங்கள் ஊருக்கு வந்திருப்பதைக் கேட்ட அவர்கள் அவரது தரிசனத்திற்காக அவர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.

மாம்பாஜி என்ற பணக்காரர் வழியிலே கங்காதரரைப் பார்த்தார். 

‘எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்க கங்காதரர் துகாராமின் புகழ் பாடி அவரை தரிசிக்கச் செல்வதாக கூறினார். 

துகாராம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த மாம்பாஜிக்கு அவரைச் சற்றும் பிடிக்கவில்லை.

அவரை இகழ்ந்து ஏளனமாகப் பேசத் தொடங்கினார்.

இதைப் பொறுக்க மாட்டாத கங்காதரர், “ஒரு பெரும் மகானைப் பற்றி இப்படி இழிவாகப் பேசாதீர்கள். இதனால் மாபெரும் பாவத்தைச் செய்தவராவீர்கள்” என்றார்.

மாம்பாஜிக்கு கோபம் இன்னும் அதிகரித்தது.

நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் கங்காதரர் பஹினாபாயுடன் துகாராமின் வழிபாட்டில் முழுமனதுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

சமயம் பார்த்துக் கொண்டிருந்த மாம்பாஜி அவரது பசுவைக் கவர்ந்து கொண்டு சென்று தனது இல்லத்தில் பாதாள அறை ஒன்றில் அடைத்தார்.

அத்தோடு மட்டுமல்லாமல் அதை அடி அடி என்று அடிக்க பசுவோ அலறியது.

வழிபாடு முடிந்தவுடன் தன் பசுவைக் காணாத கங்காதரர், அதைத் தேட ஆரம்பித்தார். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

தனது கிராமம் மட்டுமல்லாமல் அயல் கிராமங்களிலும் பசுவைத் தேடலானார் கங்காதரர். பயனில்லை.

பின்னர் துகாராம் மஹராஜிடம் தனது இழப்பைக் கூறி வருந்தினார்.

துகாராம் மஹராஜும் வருந்தினார். இதைப் பற்றியே அவர் சிந்திக்கலானார்.

அன்று இரவு அவர் கனவில் வந்த பசு, தான் அடிபட்டு அலறுவதைக் காட்சியாகக் காட்டியது.

துகாராம் மஹராஜும் அலறியவாறே எழுந்தார்.

இறைவனை நோக்கி ஆழ்ந்து துதிக்க ஆரம்பித்த துகாராம், “பசுவைக் காக்குமாறு” வேண்டினார்.

இறைவனும் மனமிரங்கினார்.

திடீரென்று மாம்பாஜியின் பெரிய வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

மாளிகை இடிந்து தரைமட்டமாகியது. அப்போது பசு ஒன்றின் ஓலம் பெரிதாகக் கேட்க அனைவரும் அது எங்கிருந்து வந்தது என்பதை ஆராய ஆரம்பித்தனர். பாதாள அறையைக் கண்டு, பசுவை உடனடியாக விடுவித்தனர்.

துகாராம் இதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து பசுவின் முன் வந்து வணங்கினார்.

பஹினாபாயும், கங்காதரரும் துகாராம் மஹராஜின் தவ வலிமையைக் கண்டு போற்றிப் புகழ்ந்தனர்.

மக்கள் அனைவரும் இந்த அதிசய சம்பவத்தால் பசுவின் மீது துகாராம் மஹராஜ் வைத்திருந்த பக்தியைக் கண்டு வியந்து போற்றினர்.

பசு ஹிந்துக்களின் தெய்வம்! அதை எந்நாளும் எங்கும் போற்ற வேண்டும் என்பது ஹிந்துக்களின் ஒரு அடிப்படை நம்பிக்கை!

***

Leave a comment

Leave a comment