
Post No. 12,665
Date uploaded in London – – – 2 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 46
105.நாகர் கோவில் கப்பல் திருவிழா
தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் மரத்திற்குக் கீழே நாகர் சிலைகள் இருப்பதைக் காணலாம். இலங்கையில் நாகர் / பாம்பு சிலைகள் தனி சந்நிதிகளிலேயே காணப்படுகின்றன. இலங்கையில் நாகர் வழிபாட்டுக்குப் புகழ்பெற்ற ஊர் நாகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில் போலவே ஊர்பெயரும் கோவிலும் உடைத்து.
இந்த ஊர் ஒரு காலத்தில் நாகர் ஆட்சியின் தலைநகராக இருந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு; இதை மெய்ப்பிக்கும் வகையில் பழங்காலக் காசுகளும் இந்த ஊரில் கிடைத்துள்ளன.
பருத்தித்துறை நகரிலிருந்து 12 மைல் தொலைவில் நாகர்கோவில் இருக்கிறது இதன் அருகில் இருக்கும் வல்லிபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தங்க கல்வெட்டில் நாகர் ஆட்சி பற்றியும் குறிப்பு உளது. அருகில் செம்பியன்பட்டு முதலிய ஊர்கள் இருப்பது ஒரு காலத்தில் நடந்த சோழர் ஆட்சிக்கும் சான்று பகர்கின்றன .
நாக தம்பிரான் சந்நிதியில் பாம்புடன் சிவன் இருக்கிறார். தம்பிரான் என்ற சொல்லை சிவபிரானுக்கும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பயன்படுத்துகிறார். கோவிலைச் சுற்றி நான்கு தீர்த்தங்கள் இருக்கின்றன அவை பல வியாதிகளைக் குணப்படுத்தும் என்று பக்தர்கள் நினைக்கிறார்கள். பாம்புக்கடிக்கும் பலவியாதிகளுக்கும் கைகண்ட மருந்தான மூலிகையும் இங்கே வளருகிறது

நாகர்கோவிலில் கப்பல் திருவிழா
புரட்டாசி மாதத்தில் இங்கு வரலாற்றுச் சம்பவம் ஒன்றினை நினைவுகூறும் கப்பல் திருவிழா நடக்கிறது பத்து நாள் உச்சவத்தில் முக்கிய விழா ஏழாம் நாள் இரவில் நடக்கும்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வந்து பொருட்களை விற்றனராம். தங்களுக்கு ஊழியம் செய்ய 100 இளைஞர்கள் வேண்டும் என்று சொல்லி பொருள் ஆசை காட்டினராம். அதற்கு ஊர் மக்கள் இணங்கவில்லை. உடனே அவர்கள் வலுக்கட்டாயமாக 100 இளைஞர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றினர். உடனே அவர்கள் இறைவனை வேண்ட , ஆண்டவனே பாம்பு உருவத்தில் வந்து அதிசயம் நிகழ்த்தி பறங்கியரை அடி பணிய வைத்தார்.
கப்பல் தலைவன் பாய் மரத்தை அவிழ்த்து கப்பலை ஓட்டுவதற்கு முனைந்தபோது, விரித்த பாய் மரத்தில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது. அதனை அவன் கத்தியால் வெட்டியவுடன் நூற்றுக்கணக்கான பாம்புகள் அங்கே நெளிந்து அவனை அச்சுறுத்தின. உடனே கப்பலில் இருந்த இளைஞர்கள் இது நாக தம்பிரானின் செயல் என்றும் தங்களை விடுவித்தால் பிரச்சினை தீரும் என்றும் அறிவுரை சொன்னார்கள். கப்பல் மாலுமியும் அதற்கு இணங்கியபோது பாம்புகளும் மறைந்தன. அப்போது முதல், பக்தர்கள் நூற்றாண்டுக் கணக்கில் இவ்விழாவினைக் கொண்டாடிவருகின்றனர்.
இந்த தல புராணத்தில் சுவையான கூடுதல் செய்திகளும் உண்டு. நாகர்கோவில் இளைஞர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மாலுமி கேட்டபோது, அவர்கள் வெள்ளை நிற விபூதியை நெற்றியில் அணிந்திருப்பார்கள் என்று மக்கள் சொன்னார்கள். அதுமட்டுமின்றி அவ்வாறு வெண் பொட்டு ஆட்களை விடுவித்த பின்னரும் கப்பல் நகரவில்லையாம். கப்பல் அறை எண் 18-ல் ஒரு முதிய மாதுவை வேலை செய்ய பிடித்து அடைத்துவைத்துள்ளார்கள். அந்த மாது இந்த ஊரைச் சேர்ந்தவள் என்று ஊர் மக்கள் சொல்லவே அந்தப் பெண்மணியயையும் பறங்கியர் விடுவித்தனர். கப்பலும் நகர்ந்தது.
கப்பல் உற்சவம் பற்றிய 2023 அறிவிப்பு
24.09.2023 ஆரம்பமாகி , .11 தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில் , 29 ஆம் திகதி பாம்பு திருவிழாவும், 30ஆம் திகதி கப்பல் திருவிழாவும், முதலாம் திகதி வேட்டைத் திருவிழாவும், இரண்டாம் ஆம் திகதி சப்பர திருவிழாவும், மூன்றாம் திகதி சமுத்திர தீர்த்தமும், புதன்கிழமை பட்டுத் தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.
இது விழாவில் வரிசைக்கிரமத்தில் என்ன என்ன நிகழும் என்பதை அறிவிக்கிறது தற்காலத்தில் பல ஊர்களில் நாக தம்பிரான் உற்சவங்கள் நடக்கின்றன.
xxx
இலங்கையில் 52 ராமாயண தலங்கள்
இலங்கையில் கன்னியா வெந்நீர் ஊற்றுகள், வில்லூண்டி தீர்த்தம், திருகோணமலை ராவணன் பாறை , பல அனுமார் தலங்கள் , சீதை கோவில், ராமர் பூஜித்த லிங்கங்கள் என 52 ராமாயண திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைக் காண்போம். முதலில் அனுமார் கோவில்களில் துவங்குவோம் .
106.இலங்கையில் ஆஞ்சனேயர் கோவில்கள்
106.கொழும்பு நகர ஆஞ்சனேயர் கோவில் Panchamuga Anjaneyar Temple
கொழும்பு நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் கல்கிசை பகுதியில் ஒரு அனுமன் கோவில் கட்டப்பட்டுள்ளது 1996ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தக் கோவிளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ராமர், அனுமன், விநாயகர், முருகனுடன் சமண மதத்தைச் சேர்ந்த பார்ஸ்வநாதர் சிலையும் இருப்பது ஒரு சிறப்பு.
இரண்டாவது சிறப்பு ஆஞ்சனேயருக்கு தனியாக தேர் உள்ள கோவில் இது. இங்கு நின்று அருள்புரியும் ஆஞ்சனேயர் , பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆவார் .
Panchamuga Anjaneyar Temple location / access
No 3/11, Sri Bodhirukkarama Road, (Vihara Lane) Kalubowila, Dehiwela,
Xxxx
107 .இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்

நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இலங்கை சின்மயா மடாலயத்தினரால் நிருவகிக்கப்படுகிறது. ராம- ராவணன் யுத்தத்தில் ராமருக்கு உதவ ஒரு படை இங்கே இருந்தது. ராமர் படை என்பது இறம்பொடை என்று மருவி விட்டது.
இந்த ஆலயம் சுவாமி சின்மயானந்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் சுவாமிகள் இலங்கை வந்திருந்த போது, இந்த இறம்பொடையில் உள்ல வெவண்டன் மலைப் பகுதியைக் கண்டு, அதற்கு “இராம்போதை” (இராமர் பற்றிய அறிவு) என்ற பெயரையும் சூட்டி, மும்பையில் உள்ள குருகுல வேதாந்தக் கல்வி நிலையம் போன்று இலங்கையிலும் அதுபோன்ற ஆசிரமத்தை இவ்விடத்தில் அமைக்க வேண்டினார்..
1996 -ஆம் ஆண்டில் சுவாமி தேஜோமயானந்தர் இலங்கைக்கு வந்தபோது இவ்விடத்தில் பக்த அனுமன் ஆலயம் அமைக்க ஆசி வழங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஆலயத்துக்கான பூமி பூசை நடைபெற்றது. மகாபலிபுரத்தில் 18 அடி உயர அனுமர் சிலை வடிவமைக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது. பின்னர் 2001 ஏப்ரல் 8 ஆம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது. பெளர்ணமி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆன்மீகப் பணிகளுடன் கல்வி, சமூகப்பணிகளையும் ஆலயத்தினர் செய்து வருகின்றனர்.
To be continued…………………….
—subham—
Tags- கப்பல் திருவிழா , நாகர்கோவில், நாக தம்பிரான், இலங்கை,part 46, இராமாயண, தலங்கள் , அனுமார், கோவில், ஆஞ்சனேயர்