WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,671
Date uploaded in London – – 4 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 3
பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:
1. ஆறு செல் படலம்
2. கங்கை காண் படலம்
3. திருவடி சூட்டு படலம்
பிற்சேர்க்கை
இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் நான்காவது நூலாக அமைகிறது.
தூத்துக்குடியில் பாரம்பரிய மிக்க பெரும் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். வயது 73. யூனியன் வங்கியில் பெரும் பொறுப்பை முப்பது வருடங்களுக்கும் மேலாக வகித்தவர் இவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய பல மொழிகளில் வல்லுநர். இராமாயண, மஹாபாரத இதிகாசங்களையும் புராணங்களையும் ஆழ்ந்து படித்ததோடு அவற்றின் மீது கொண்ட தீவிரப் பற்றால் அவற்றை நன்கு ஆராய்ந்து அதில் உள்ள நுட்பங்களையும் ரகசியங்களையும் தொகுத்து வருபவர். அதை தம் புத்தகங்கள் வாயிலாக உலகிற்குத் தந்து வருகிறார். இராமாயணம் பற்றிய சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நூலில் என்னுரையாக இவர் கூறுவது :-
“கம்பர் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் கூழாங்கற்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் நான். அந்த சமுத்திரத்தில் இறங்கி எளிதாக முத்தெடுக்க முடியாது. அதற்கு அனுபவம் நிறைந்தோர் உதவி தேவை. அந்த வரிசையில் நாமக்கல் கவிஞர், ஐயா கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தன், சுந்தர சண்முகனார், கணபதிப் பிள்ளை போன்ற சான்றோர்களின் உதவியோடும் நலுங்கு மெட்டு இராமாயணம், வீரபத்திர இராமாயணக் கும்மி, இராமாயண அம்மானை, அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனைகள் போன்ற நூல்களின் துணையோடும் கம்பன் என்னும் கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன்.”
இராமாயண வெண்பாவிலிருந்து அழகிய பாடல்களை அந்தந்த இடத்திற்குத் தக்கபடி நூலில் தரப்பட்டதைக் காண்கிறோம்.
எடுத்துக்காட்டு:
பரதனுடன் சென்ற சேனையின் வர்ணனை:
கார் உற்ற வண்ணக் கடல்போல் வரும்சேனை
பேர் உற்றி டுங்கால் பெரும் குணத்தோன் -சீரை உடை
சுற்றினான் தம்பியொடும் தோன்றினான் பொன் தேர் மன்
முற்றினான் சேனை முகம்.
கூனியும் கூடப் போகிறாள். அவளை சத்ருக்னன் காண்கிறான்.
“செல்லும் கால் மந்தரையாம் தீயவளைக் கண்(டு) இவளைக்
கொல்வன் எனச் சென்றான் கொதித்து.”
குகன் பரதனை நீ வந்த காரணம் யாது? எனக் கேட்க பரதன் பதில் நவில்கிறான் இப்படி:
அண்ணனை நாடாள வாக்கி அவனடிக் கீழ்
நண்ணிப் பணிபுரிய நாடுகின்றேன் – புண்ணியனே!
நின்னையர சாக்கினேன் நீயாள்வாய் என்றெனக்கே
அன்னைதரு கீழ்மை யற
– (கவிஞர் ஆதிமூலப் பெருமாளின் குஹவெண்பா)
பரதன் அயோத்தி திரும்பி அரசப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இராமன் பரதனிடம் அன்புக் கட்டளை இடுகிறான்.
அதை அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனையில் உரைக்கிறார் இப்படி:
“இன்னஞ் சிறு பிள்ளை போலே என்னை அழைக்கிறாய் உன்னை
என்ன சொல்வேன் பரதா என் கண்ணின் மணியே!
முன்னதாக நான் கொண்டு பின்னாக அரசுனக்கு
முறையாலே தந்தேன் என் உரை பெய்யாமல்
உன்னாலும் எந்நாளும் சொன்னபடி நடக்கும் என்று
உசரப்போன தசரதற்கு வசை வையாமல்….
சின்னாபின்னங்களாய்ப் பட்டணமும் பரிசனமும்
சேற்றில் நட்ட கம்பம் போலே தொய்யாமல்
என் ஆனாய் தம்பி உன் நாட்டை ஆளடா
எப்படி நான் சொன்னாலும் அப்படி நீ செய்யாமல்
இன்னஞ் சிறுபிள்ளை போலே என்னை அழைக்கிறாய்….
இப்படி நூல் முழுவதும் பல நூல்களிலிருந்து எடுத்தாளப்படும் பகுதிகளைப் படித்து மகிழலாம்.
காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.
அவர்தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.
இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்க, டிஜிடல் வடிவத்தில் நூலைப் பெற, அச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.
***