ஆயுர்வேதம் : வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அறிவு (Post No.12,722)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,722

Date uploaded in London –  –  16 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஹெல்த்கேர் நவம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆயுர்வேதம் : வாழ்க்கைக்குத் தேவையான ஒரு அறிவு!

ச.நாகராஜன்

ஆயுர்வேதம் – அடிப்படை உண்மைகள்

ஆயுர்வேதம் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒரு அறிவு.

ஏன்?

இந்த கேள்விக்கான பதிலை சரக சம்ஹிதை தெளிவாகச் சொல்கிறது.

மனம், ஆத்மா, உடல் – இந்த மூன்றும் ஒரு முக்காலி போல.  உலகமே இந்த மூன்றின் சேர்க்கையால் தான் இருக்கிறது. இதுவே அனைத்திற்கும் அடித்தளமாக அமைகிறது.

மனம் உடல் ஆத்மா – இந்த மூன்றின் சேர்க்கையே புருஷா. இதுவே சித். ஆயுர்வேதத்தின் அடிப்படையே இது தான். இதற்காகவே தான் இந்த ஆயுர்வேதம் மஹரிஷிகளால் உலகிற்குத் தரப்படுகிறது.

இதுவே சரக சம்ஹிதை தரும் பதில்!

ஆயுர்வேதம் மனம், ஆத்மா, உடல் ஆகியவற்றுடன் குணங்களையும் இணைக்கிறது.

உலக வாழ்க்கை முழுவதும் இதைப் பொறுத்தே அமைகிறது.

இவை பொருள்கள், புத்தி, அகங்காரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது, புத்தி மற்றும் அகங்காரம் ஆத்மாவுக்குள் அடங்குகிறது. பொருள்கள் உடலில் அடங்குகிறது.

இப்படி நுட்பமான பல விஷயங்களை ஆயுர்வேதம் கொண்டுள்ளது.

ஆனால் ஏனைய மருத்துவ சிகிச்சைகளோ இவற்றைக் கொண்டிருக்கவில்லை.

அவை உடலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு மருந்துகளையும் சிகிச்சைகளையும் அளிக்கிறது.

ஆயுர்வேதம் பாரத நாட்டில் 5000 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பண்டைய காலத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்து வந்த மனிதர்கள் திருப்தியுடனும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த ஆயுளுடன் வாழக் காரணமே இந்த ஆயுர்வேதம் தான்!

ஆயுர்வேதம் வாயு, பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களை இனம் கண்டு வகுக்கிறது.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இந்த மூன்று தோஷங்களின் கலவையாகவே பிறந்துள்ளனர். ஆனால் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்றில் ஒன்றே சற்று அதிகமாக இருக்கும்.

ஆயுர்வேத வைத்தியர்களுக்குப் பல அடிப்படை குணாதிசயங்கள் தேவை.

வியாதிகளைப் பற்றிய அடிப்படை அறிவு ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது.

ஒரு மனிதனின் வாழ்க்கை முறையும், உடல் அமைப்புமே வியாதி வருவதற்கான அடிப்படைக் காரணம். ஆகவே அவற்றை ஆராய்கிறது ஆயுர்வேதம் முதலில்.

ஒரே வியாதிக்கு ஒரே மருந்து என்பது ஆயுர்வேதத்தில் இல்லை. ஒவ்வொரு தனி மனிதனை – ஆணோ, பெண்ணோ – அலசி ஆராய்ந்த பின்னரே ஆயுர்வேத சிகிச்சை மருந்தைப் பரிந்துரைக்கிறது.

மருத்துவரும் நோயாளியும்

இதில் மருத்துவருக்கும் நோயாளிக்குமான தொடர்பு மிக மிக முக்கியமானது.

தனது வியாதியைத் தீர்த்துக் கொள்வதில் அதிக பங்கு நோயாளிக்கென்றால் எதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பது மருத்துவரின் கையிலேயே உள்ளது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழும் போது நோயைப் பற்றியோ மருத்துவரைப் பற்றியோ சாதாரணமாக நினைப்பதில்லை.

நோய் வந்த போது மட்டுமே சிகிச்சை பற்றியும் மருத்துவரைப் பற்றியும் நினைக்கிறான். ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் நோயைப் பற்றியும் டாக்டர்களைப் பற்றியும் எப்போதும் ஒரு எதிர்மறை – நெகடிவ் எண்ணமே இருக்கிறது.

ஆயுர்வேதம் நோய் வந்த போது மட்டும் நாடவேண்டிய ஒரு வேதம் இல்லை.

அது சாதாரணமாக நடைமுறையில் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்ந்தால் வியாதி வராத வாழ்க்கை அமையும் என்பதைச் சொல்கிறது.

ஆகவே வருமுன் காப்போம் என்ற உத்தியின் அடிப்படையில் ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்தால் தான் அதன் வழிமுறைகளைக் கற்று நோயற்ற வாழ்வை வாழ முடியும்.

ஆயுர்வேதம் இறைநம்பிக்கையின் அடிப்படையில் சில பரிந்துரைகளையும் வழங்குகிறது.

இந்த மந்திரத்தைச் சொன்னால் இந்த வியாதி போகும் என்பது வேறு எந்த வைத்திய சிகிச்சை முறையிலும் இல்லாத ஒன்று.

அத்துடன் அது ப்ராரப்த கர்மாவையும், ஜன்ம பாவ புண்ணியத்தையும் நம்புகிறது.

ஆக இந்தக் காரணங்களினால் ஆயுர்வேதத்தின் மீது ஒரு எதிர்மறை எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை.

மேலைநாடுகள் மதிக்கும் ஆயுர்வேதம்

ஆயுர்வேதத்தின் பக்கம் மேலைநாட்டு வைத்தியர்களின் பார்வை கடந்த பல வருடங்களாகத் திரும்பி இருப்பது வரவேற்கத்தக்க  ஒரு மகிழ்ச்சியான விஷயம்.

ஆயுர்வேத அறிவானது 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு விலை மதிப்புள்ளது என்று மதிக்கப்படுகிறது. ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி, ஆக நூறு நூறு கோடி அளவு நமது ஆயுர்வேத அறிவு மதிக்கப்படுகிறது.

36000 ஸ்லோகங்களை இந்திய அரசு ஆயுர்வேத இணையதளத்தில் Traditional Knowledge Digital Libraryஇல் வெளியிட்டுள்ளது.

550 மருந்துகளின் தயாரிப்பு முறைகள் ஜப்பானிய, ஆங்கிலம் ஸ்பானிய, பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளில் விளக்கப்பட்டுள்ளன.

220 நாடுகள் ஆயுர்வேத சிகிச்சை முறைகளைக் கையாண்டு ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துகின்றன என்பது அதிசயமான செய்தி தானே!

நம்பமறுத்தாலும் இது தான் உண்மை!

ஆயுர்வேத மருந்துகள் பக்க விளைவை ஏற்படுத்தாதவை. என்றாலும் ஆயுர்வேத வைத்தியர்களின் பரிந்துரைகளின் படி எடுக்க வேண்டிய மருந்துகளின் அளவு, நேரம் உள்ளிட்ட முறைகளை அறிந்து கொண்டு உட்கொள்ள வேண்டியது அவசியம்.

 அறுவை சிகிச்சை உட்பட்ட அல்லோபதி வைத்திய முறைகளைக் கையாளும் நமது டாக்டர்கள் ஆயுர்வேத முறைகளையும் தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் வியாதி அற்ற ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான திருப்தியுள்ள இந்தியர்களைக் கொண்ட பாரதத்தை வெகு விரைவில் உருவாக்கலாம்!

செய்வார்கள் என்று நம்புவோம்!!

***

Leave a comment

Leave a comment