
Post No. 12,728
Date uploaded in London – – – 17 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 6
கோவில் எண் 5 – வற்கலை ஜனார்த்தனர் கோவில்
வற்கலையின் உடையானை
மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன
நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
விம்முற்று நின்று ஒழிந்தான்.
என்ற மிகவும் படிக்கப்படும் கம்ப ராமாயணப் பாடலில் வற்கலை வருகிறது. அதாவது மரவுரி. ; முனிவர்கள் மரத்தின் பட்டையால் ஆன ஆடையையே அணியவேண்டும் என்பது விதி. கைகேயி சொற்படி ராமனும் அப்படித்தான் முனிவர் வாழ்க்கை வாழ்ந்தான் . அண்ணனைக் காட்டில் சந்திக்கச் சென்ற பரதனும் அப்படி வற்கலை உடை அணிந்து சென்றதை பார்த்த குகன் கண்ணீர் விட்டு அழுதான்; இப்படி ஒரு தம்பி உலகில் இருந்தால் அவன் ஆயிரம் ராமனுக்குச் சமம் என்று கம்பன் புகழ்கிறான். நிற்க
இப்போது வற்கலை என்றால் மரப்பட்டையால் ஆன ஆடை என்பது உங்களுக்குத் புரிந்திருக்கும் . அதுதான் இந்த ஊருக்குப் பெயர். அதன் பின்னால் ஒரு கதை உள்ளது
வற்கலை என்னும் ஸ்தலம் எங்கே உள்ளது ?
திருவனந்தபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
முதலில் சுவையான செய்திகளைக் காண்போம் :
அரபிக்கடல் அலை புரளும் காட்சிக்கு இடையே , அந்தக் கடற்கரையில் உள்ள குன்றில் ஜனார்த்தன சுவாமி என்ற பெயரில் விஷ்ணு குடி கொண்ட, கோவில் கொண்ட, க்ஷேத்ரம் .வற்கலை.
ஆசமனம் செய்யும் நிலையில் விஷ்ணு காட்சி தருகிறார். அவர் ஆசமனம் செய்யும் கை , வாயை நெருங்கினால் உலகமே பிரளயத்தில் அழிந்து விடுமாம். இது பக்தர்களின் நம்பிக்கை !
ஆசமனம் என்றால் என்ன ?
இது ஸம்ஸ்க்ருதச் சொல். உண்மையான பிராமணர்களுக்கு மட்டுமே விளங்கும் சொல்; ,அதாவது ஒரு வேளையாவது, பஞ்ச பாத்திர உத்தரணியை வைத்துக்கொண்டு பிராமணர்கள் தினமும் இதைச் செய்கிறார்கள் . வலது கையில் ஒரு ஸ்பூன் ஜலத்தை விட்டுக்கொண்டு அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று மூன்று முறை ஜலத்தை (WATER) குடித்துவிட்டு பிள்ளையார் வழிபாட்டுடன் காயத்ரீ உபாஸனையைத் துவங்குவர் ( அப்படிக் குடிக்கும் போது வாயில் எச்சில் படாமல், உறிஞ்சாமல், ஒரு உளுந்து மூழ்கும் அளவுக்கு மட்டுமே ஜலத்தை (WATER) அருந்த வேண்டும் ; இது ஹோமியோபதியின் அடிப்படை; உலகுக்கு இந்துக்கள் இதைக் கற்பித்தது பற்றி முன்னரே எழுதிவிட்டேன் )
வேறு என்ன சிறப்பு ?
இந்தத் தலத்தைச் சுற்றி மலையில் நிறைய ஊற்றுகள் இருக்கின்றன. மூலிகைகள் நிறைந்த இடத்திலிருந்த நீரைச் அவை சுரப்பதால் மருத்துவப் பயன்கள் மிக்கது. இதனால இந்தக் கடலில் குளித்தால் கூட நோய்கள் போய்விடும் என்ற நம்பிக்கையும் உளது .
இன்னும் ஒரு சிறப்பு
16-1-1937ம் ஆண்டில் மஹாத்மா காந்தி இந்தக் கோவிலை தரிசித்துவிட்டு அருகிலுள்ள புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவின் ஆஸ்ரமத்துக்கு மூன்றாவது முறையாகச் சென்று சொற்பொழிவு நிகழத்தினார். இதை எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் திருவனந்த புரம் சென்று அன ந்த பத்ம நாப சுவாமியைத் தரிசிப்போர் வற்கலை செல்லும்போது ராம நாமம் அகண்ட பராயணம் ஒலிக்கும் அபேதானந்த ஆஸ்ரமத்தையும் , நாராயண குரு மடத்தினையும் தரிசிக்க வேண்டும் (முடிந்தால் மதுமுரளி பத்திரிகையில் முரளீதர சுவாமி விஜயம் செய்த அபேதானந்த் ஆஸ்ரமக் கட்டுரையை வாசியுங்கள். சுவாமி அபேதானந்தா, மதுரைக்கு விஜயம் செய்தபோது நான் பள்ளிச் சிறுவன். அவருக்கு எனது தந்தை தினமணிப் பத்திரிகையில் நல்ல வரவேற்பு கிடைக்க வழிசெய்தார் . சுவாமி அபேதானந்தா,. பல ராகங்களில் ஹரே ராம நாமத்தைப் பாடி பக்கதர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்..)

மேலும் ஒரு சிறப்பு
வற்கலை ஜனார்த்தன சுவாமி (விஷ்ணு) கோவிலில் டச்சுக்காரர்கள் (ஹாலந்து நாட்டினர்) கொடுத்த லத்தீன் மொழி எழுதப்பட்ட ஒரு பெரிய மணியும் உள்ளது . அவர்கள் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கிய போதும் எல்லோரும் உயிர்தப்பினார்கள்; இதற்கு ஜனார்த்தனன் அருளே காரணம் என்பதைக் கேள்விப்பட்டு அந்த மணியை கோவிலுக்குக் கொடுத்தனர்.
வற்கலை — பெயரின் கதை
பிரம்மா ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த வைஜயந்தி சபையில் த்ரிலோக சஞ்சாரி நாரதர் (INTER GALACTIC TRAELLER NARADA) நுழைந்தார்; வழக்கம் போல நாராயண, நாராயண என்ற நாம ஸ்மரணம் செய்துகொண்டே நுழைந்தார். அதைக்கேட்ட பிரம்மாவுக்கு விஷ்ணுவே அங்கு வந்ததாகத் தோன்றியது; நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்து நாராயணனே நமக்கே பறை தருவான் (பறை = விரும்பிய பொருள் 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி ) என்று போற்றினார். சபையில் இருந்தவர்கள் கொல் என்று சிரித்தனர்; பிரம்மரே ! வந்திருப்பவர் விஸ்ணு அல்ல ; நம்ம ஊரு நாரதன்தான்; அவருக்கென்ன இவ்வளவு கும்பிடு? மதி மயக்கமோ என்று எள்ளி நகையாடினர்; பிரம்மாவின் உயர் நிலை அவர்களுக்குப் புரியவில்லை; கொடுத்தார் ஒரு சாபம்;!! பூ லோகத்தில பொறந்து பாடம் கற்று வாருங்கள் என்று சபித்தார்; அனைவரும் குய்யோ, முறையோ என்று அழுது புரண்டு சாப விமோசனம் வேண்டினர்..உடனே நாரதரே பதில் சொன்னார். நான் என் பழைய வற்கலையை (மரவுரி ஆடை old bark clothe ) தூக்கி எரிகிறேன் . அது எங்கு விழுகிறதோ அதுவே உங்கள் சாப விமோசன இடம்; அங்கே தவம் செய்யுங்கள்; உங்களுக்கு பிரம்ம லோக்த்துக்குத் திரும்பி வருவதற்கு return ticket ரிட்டர்ன் டிக்கெட் கிடைக்கும் ; ஒரு பாஸ்போர்ட், விசா neither passport nor visa required தேவை இல்லை என்றார் . அவர்களும் பூவுலகிற்கு வந்து விடுதலை பெற்றனர் . அந்த இடமே புனித வற்கலை . அங்கே அவர்கள் எழுப்பிய கோவில் கடலினால் மூழ்கடிக்கப்பட்டது. இப்போதுள்ள கோவில் கரையில் அமைக்கப்பட்ட புதுக் கோவில் அங்கு 1252- ம் ஆண்டு கல்வெட்டு கோவில் கட்டிய செய்தியைக் கூறுகிறது.. பாண்டிய மன்னன் ஒருவன் தற்போதுள்ள சிலையைக் கடலிலிருந்து மீட்டுப் பிரதிஷ்டை செய்த கதையும் உண்டு.
புரந்தர தாசரால் பாடப்பட்ட இறைவன்; பலராமன் மகா பாரதப் போரில் வெறுப்பு கொண்டு கண்ணனுடன் டூ போட்டுவிட்டு (போ, உன்னுடன் நான் பேச மாட்டேன் என்று சொல்லி கோபித்துக் கொண்டு போவதை டூ போடுதல் என்று பள்ளி மாணவர்கள் பகர்வார்கள் ) நாடு முழுதும் யாத் திரை சென்ற பல ராமன் ( கண்ணனுடைய அண்ணன் ) இங்கும் வந்ததாக இந்துமத நூல்கள் செப்பும்.

கடவுளின் தோற்றம்
கையில் சாட்டை வைத்துள்ள விஷ்ணுவின் பார்த்தசாரதி தோற்றத்தை அம்பலப்புழா கோவிலில் சென்ற கட்டுரையில், கண்டோம் . இங்கு வற்கலையில் ஜனார்த்தன சுவாமி கும்பம்/பாத்திரம் ஏந்திய கையுடன் ,ஒரு கை ஆசமனம் செய்யும் நிலையில் இருப்பதைக் காண்கிறோம் ; மற்ற மூன்று கைகளில் சங்கு , சக்கரம், ‘கதை’ யுடன் இருப்பார் சுதர்சன சக்கரத்தால் கங்கை நீரை க் கொண்டு வந்ததாகவும் அதுவே இங்கு சக்கர தீர்த்தமாக இருப்பதாகவும் ஐதீகம் (வரலாறு).. அங்கிருந்தே கோவிலுக்குத் தேவையான தண்ணீர் எடுக்கப்படுகிறது. பூதேவி ஸ்ரீ தேவி சஹிதம் ஜனார்த்தன சுவாமி இருக்கிறார்
மூர்த்திக்கு சந்தனத்தால் முகச் சார்த்தும் , முழுக் காப்பும் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மீன மாத்தில் (சூரியன் மீன ராசியில் இருக்கும் மார்ச் ஏப்ரல்) பத்து நாள் ஆராட்டு உற்சவம் நடக்கிறது .
இங்குள்ள பாபநாசம் ஊற்று புகழ்பெற்றது ஆரோக்கியத்தை அளிக்க வல்லது . நோய் குணமாவதற்காக வெளிநாட்டிலிருந்தும் மக்கள் வருகிறார்கள் .
17ம் நூற்றாண்டில் உமையம்மா ராணி 1677- 1684 என்பவர் கோவில் திருப்பணி செய்த கல்வெட்டு ஒன்று இருக்கிறது. மேலும் இங்கு நம்பூதிரிகள் பூஜை செய்யாமல் துளு பிராமணர்களே பூஜை செய்வது தனித்துவத்தைக் காட்டுகிறது வட்ட வடிவில் அமைந்துள்ள கர்ப்பக்கிரகத்தைக் காண, படிகள் ஏறிச் செல்ல வேண்டும் .
சதுர வடிவில் அமைந்துள்ள முன் மண்பத்தில் மரச் சிற்பங்கள் இருக்கின்றன. கூரையில் நவக்கிரகங்கள் செதுக்கப்பட்டுள்ளன கோவிலில் கணபதி, சிவ பெருமான் மூர்த்திகளும் வழிபாட்டில் உள்ளன.
இங்கு பித்ருக்களை கரையேற்றும் சடங்குகளும் செய்யப்படுகின்றன
ஆராட்டு விழாக்காலத்தில் இரவு முழுதும், புராணக் காட்சிகளை சித்தரிக்கும் கதகளி நடனம் நடைபெறுகிறது புதிதாக கதகளி கற்றோர் அரங்கேற்ற வைபவங்களும் அதில் இடம்பெறுகின்றன
BOOKS USED
TEMPLES AND LEGENDS OF KERALA, K R VAIDYANATHAN, B V BHAVAN, 1982, BOMBAY
THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937
TEMPLE WEBSITES; PICTURES FROM WIKIPEDIA AND WEBSITES
—- SUBHAM —
TAGS- வற்கலை , ஜனார்த்தன சுவாமி, ஆசமனம், பிரம்மா, நாரதர், மரவுரி, வற்கலையில் உடையானை , நாராயண குரு , அபேதானந்தா , சிவகிரி, கேரள கோவில்கள் – Part 6