
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,731
Date uploaded in London – – 18 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கொங்குமண்டல சதகம் பாடல் 46
பவணந்தி முனிவரை நன்னூல் இயற்ற வேண்டிய சீயகங்கன்!
ச.நாகராஜன்
தமிழ் இலக்கியங்கள் ஏராளம். தமிழ்க் காப்பியங்களின் ஒப்பு தப்புகளைத் தெரிந்து கொள்வதற்கு – அதாவது குண தோஷங்களைத் தெரிந்து கொள்வதற்கு – ஒரு வழி இல்லையே என நினைத்த போது தொல்காப்பியம் தமிழ் இலக்கணத்தை மிகத் தெளிவாக விளக்கியது.
ஆனால் இப்பெரும் நூலை சுருக்கி ஒரு நூல் வேண்டும் என்று நினைத்த சீயகங்கன் என்னும் மன்னன் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்று பெருமைப்பட்டு தனது 46வது பாடலில் கொங்குமண்டல சதகம் அவனைப் புகழ்ந்து சொல்கிறது.
மைசூர் ராஜ்யத்தை சேர்ந்த ஊர் கோலார் பட்டணம். அதை தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் கங்க வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் அரசாண்டு வந்தனர். தங்கள் மெய்கீர்த்திகளில் குவளாலபுர பரமேசுரர்கள் என்றும், நந்திகிரிநாதர் என்றும் அவர்கள் தம்மைக் கூறிக் கொள்கிறார்கள்.
குவளாலபுரம் என்பதே கோலார் என்று மருவி இப்போது அப்படி அழைக்கப்படுகிறது.
இதை ஆண்ட மன்னர்களில் ஒருவன் சீயகங்கன். அவன் தமிழ்ப் புலவர்களின் ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாக அமையும் தொல்காப்பியத்தை முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்து அறிந்து கொள்ள சிலரால் மட்டுமே முடிகிறது; ஆதலால் அந்த நூல் கூறும் எழுத்து முதலிய ஐந்திலக்கணங்களை அனைவரும் எளிதாகக் கற்க ஒரு நூலை இயற்ற வேண்டும் என்று எண்ணினான்.
அதற்குத் தக்கவர் பவணந்தி முனிவரே என்பதை நிச்சயித்த அவன் அவரை அணுகி தன் எண்ணத்தைச் சொல்லி அவரை வேண்டினான்.
அவரும் நன்னூல் என்னும் சிறந்த இலக்கண நூலை இயற்றினார்.
“தமிழ்க் கடலுள்
அரும்பொருளைந்தையும் யாவரு முணர
தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார்
இகலற நூறி யிருநில முழுவதுந்
தனதெனக் கோலித் தன்மத வாரணந்
திசைதோறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க்
கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத்
திருந்திய செங்கோற் சீய கங்கன்
அருங்கலை விநோதன் அமராபரணன்
மொழிந்தனன்”
என நன்னூல் சிறப்புப் பாயிரம் இப்படிக் கூறுவதால் இந்த வரலாற்று உண்மையை நன்கு அறிய முடிகிறது.
சீயகங்கனுக்கு அமராபரணன், திருவேகம்பன் என்ற பெயர்களும் உண்டு.
கி.பி. 1178 முதல் 1216ஆம் ஆண்டு முடிய அரசு புரிந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தவன் இவன்.
சீயகங்கனின் மனைவியான அரியபிள்ளை திருவல்லத்தில் திருவல்லமுடைய நாயனார் கோவிலில் நந்தாவிளக்கு வைத்ததை ஒரு சாஸனம் குறிப்பிடுகிறது.
“ஸ்வஸ்தி ஶ்ரீ குலோத்துங்க சோழற்கு ஆண்டு 34வது அமராபரண சீயகங்க நம்பிராட்டியான அரியபிள்ளை திருவல்லமுடைய நாயனார்க்கு வைத்தௌ சந்தி விளக்கு ஒன்று நாச்சியார்க்கு வைத்த விளக்கிரண்டுக்கும் …..” என்று இப்படி சாஸனம் விளக்குகிறது.
ஆதாரம்: S.I.I.Vol III Part I Page 122-123.
இந்த வரலாற்றை விளக்கும் கொங்குமண்டல சதகப் பாடல் இது தான்:
சொல்காப்பியத்தின் குணதோடந் தேர்ந்து சொலுவதற்குத்
தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை
யொல்காப் பெரும்பவ ணந்தீயென் றோதி யுபகரித்த
வல்கா வலன்சீய கங்கனுந் தான் கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : தமிழ்க் காப்பியங்களின் குண தோஷங்களைத் தெரிந்து கொள்வதற்கு தொல்காப்பியம் விரிந்து கிடக்கின்றது. அதை தொகைவகையால் சுருக்கி ஒரு நூல் செய்தருள்க என்று பவணந்தி முனிவரைக் கேட்டுக் கொண்ட சீயகங்கனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனேயாம்.