வைக்கம் சிவன்  கோவில் – Part 8 (Post No.12,736)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,736

Date uploaded in London – –  –  19 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PICTURES ARE FROM FACEBOOK AND WIKIPEDIA

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 8

கோவில் எண் 7 –    வைக்கம் மஹாதேவன் கோவில்

வைக்கம் சிவன்  கோவில் ஆன்மீக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் புகழ்பெற்ற சிவன் கோவில். 18-1-1937-ல் மஹாத்மா காந்தி விஜயம் செய்த கோவில். திருவாங்க்கூர் மஹாராஜாவும் மஹாராணியும் இந்து மதத்தின் அங்கமான ஹரிஜனங்களும் கோவிலுக்குள் வரலாம் என்ற புரட்சிகர பிரகடனத்தை வெளியிட்டு இந்துமதத்தைக் காப்பாற்ற உதவியது வைக்கம் சத்தியாகிரகம் .

வைக்கம் சிவன்  கோவில்  எங்கே இருக்கிறது?

எர்னாகுளத்திலிருந்து 33 கி.மீ ; கோட்டயத்திலிருந்து 40 கி.மீ. தூரத்தில் வைக்கம் இருக்கிறது. .

வைக்கத்தின்  சிறப்புகள்

வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் ஸ்தாபித்த லிங்கம் இங்கே இருக்கிறது; வியாக்ரபாத புரம் என்ற ஊர்ப்பெயர் மருவி வைக்கம் ஆக சுருங்கி விட்டது

வ்யாக்ர என்ற ஸம்ஸ்க்ருத்சச் சொல்= புலி; பாத = கால்; புலிக்கால் முனிவர் = வியாக்ரபாதர்

கரண் என்ற அசுரன் சிவ பெருமானை வேண்டி 3 லிங்கங்களைப் பெற்று 3 இடங்களில் கொடுத்தான். அதில் வியாக்கிரபாதர் வாங்கிய ஒரு லிங்கம் போக, மீதி இரண்டை எட்டுமானூர், கடுத்துருத்தி என்ற இடங்களில் பிரதிஷ்டை செய்ய உதவினான். மூன்று மஹா தேவர்களும் பக்தர்களை ஆகர்ஷித்த வண்ணம் இருக்கின்றனர்.

வைக்கத்து மகா தேவனை மக்கள் வைக்கத்தப்பன் என்றே அழைப்பர். மலையாளிகளுக்கு குருவாயூரப்பன், ஐயப்பன் என்ற அப்பன் பெயர்களும் நெய்யப்பம் என்ற அப்பம்  பெயர்களும் மிகவும் பிடிக்கும்

தங்க த்வஜஸ்தம்பம் தங்க கோபுரம்

கோள வடிவில் அமைந்த இந்தக் கோவிலில் கூம்பு வடிவ தங்க கோபுரம் இருப்பதாலும் தங்கத் தகடு போர்த்திய  317 அடி த்வஜ ஸ்தம்பம் இருப்பதாலும் தொலை தூரத்திலிருந்து தரிசனம் கிடைக்கும்

1000 ஆண்டு வரலாறு

இந்தக் கோவில் பற்றிய வரலாறு குறைந்தது 1000 ஆண்டுகளுக்குக் கிடைக்கிறது . கோவிலின் அமைப்பு ஆறாம் நூற்றா ண்டு  வரை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது.

வைக்கத்து அஷ்டமியும் அன்னதானமும்

இந்தக் கோவிலிலின் தனிச் சிறப்பு அன்னதானம் ஆகும். ஆயிரக்கணக்கானோருக்கு நாள் தோறும் அன்னம் வழங்குவதால் இந்தக் கோவிலுக்கு  மக்கள் நெல்லையும் அரிசியையும் வாரி வழங்கினார்கள்; 2 மாடி அன்னதானக் கூட்டத்தில் நூறு பந்திகள் வரை நடக்கும்

ஆட்சிகள் மாற மாற , கோவில்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதால் நிலைமை மாறிக்கொண்டே வருகிறது.

ஊட்டுப்புரா என்னும் DINING HALL டைனிங் ஹால், ஆயிரம் அடி நீளம் கொண்டது. மனம் போல மாங்கல்யம்; மக்களின் தாராள மனத்தைக் காட்டும் அன்னதானக் கூடம்!!

மஹாராஜா பிறந்த தினம் மற்றும் பண்டிகை நாட்களில் பலாப்பழ, தேங்காய்ப் பால் உள்ள உணவு வகைகளும் கிடைக்கும்

வைக்கத்து அஷ்டமி என்ற பண்டிகை பெயரைக் கேட்டிராத மலையாளி இந்து இருக்கமுடியாது. விருச்சிக (கார்த்திகை) மாத அஷ்டமியில் பெரிய விழா நடக்கும். 13 நாள் உற்சவத்தில் 12 ஆவது நாள் விழா அஷ்டமி திதியில் வரும்.. கேரளம் முழுதும் வைக்கத்து அஷ்டமியைக் கொண்டாடுகிறார்கள் 13 நாட்களும் சுவாமி புறப்பாடு, யானைகள் பவனி, அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.

அஷ்டமி தினத்தில்தான் வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால்  முனிவருக்கு பார்வதியும் பரம சிவனும் தரிசனம் தந்தனர் ; காலையில் இது முடிந்த பின்னர் பெரிய விருந்து நடக்கும்  இரவில் உதயண புர த்திலிருந்து ஊர்வலம் வரும் சிவன் மகன், அசுரர்களுடன்  யுத்தம் செய்து வெற்றி கண்டு வந்து வைக்கத்தப்பனை சந்திக்கும் நிகழ்ச்சி இது. அருகாமைக் கோவில்களில் உள்ள தேவ, தேவியரும் யானைகள் மீது பவனி வருவார்கள்; மேளதாளங்களும் தீவட்டி ஊர்வலங்களும் காணக் கண் கோடி வேண்டும்.

நேரில் கண்ட ஒருவர் எழுதிய தகவல் இதோ :-

உதயண புரத்திலிருந்து வரும் இறைவன் வந்து  சேர 3 மணி நேரம் ஆகும் இரு புறமும் 300 தீவட்டிகள்/ தீப்பந்தங்கள் சூழ ஊர்வலம்  இரவு 1-30 க்கு வைக்கத்தை அடையும். பிரபல வித்துவான்களான காருக்குறிச்சி  அருணாசலம், ராஜரத்தினம் பிள்ளை, வீராசாமி பிள்ளை ஆகியோரின் நாதஸ்வர இசையில் மதி மயங்கி பக்தர்கள் நிற்பார்கள். முத்துசாமி தீட்சிதரின்  ஸ்ரீ சுப்ரமண்யாய  நமஸ்தே கிருதியைக் கேட்க பக்தர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.. சிவனைச் சந்திக்கும்போது திருவடி சரணம் ம்  தேவாதி தேவ என்ற பாட்டு வரும் ; பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் விடுவதை எவரும் பார்க்கலாம் ; அப்பன் கடவுளும் மகன் கடவுளும் கோவிலை வலம் வருவார்கள் பின்னர் பிரியாவிடை நிகழும்; மகன் திரும்பிச் செல்லுகையில் நீலாம்பரி ராகம் பாடி சோகத்தை வெளிக்காட்டுவர்.

மறு நாள் ஆராட்டு உற்சவத்துக்கும் உதயணபுர இறைவன் வந்தவுடன் கூடி / ஒன்று கூடி/ பூஜை நடக்கும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அன்னப் ராசனம்,  துலாபாரம் காணிக்கைகளை வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

வைக்கத்து அஷ்டமியில் இறைவன் உண்ணாவிரதம் இருப்பார் ; பக்தர்கள்  வயிறு புடைக்க தின்பார்கள்; அன்று கிடைக்கும் அறுசுவை உணவை எவரும் மறவார் .

சந்த்யா வேளை

அஷ்டமி உற்சவத்துக்கு முன்னால், 40 நாட்களுக்கு சந்த்யா வேளை  என்ற சடங்கு நடக்கும். வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்வார்கள்; சீவேலி / ஸ்ரீ பலி  பவனி நடக்கும். மதியத்தில் பெரும் விருந்து; இரவில் லட்ச தீபம் ஏற்றப்படும்

மாணிக்க வாசகர்

நால்வரில் ஒருவரான , திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகரைக் குதிரை வாங்குவதற்காக பாண்டிய மன்னன் அனுப்பியதும் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளும் எல்லாத் தமிழர்களும் அறிந்ததே அவர் மேலைக் கடற்கரைக்கு வந்து குதிரை வாங்கினார் என்ற ஐதீகம் உண்டு; அந்தக் காலத்தில் வைக்கத்தை ஒட்டிக் கடல் இருந்தது. இப்போது பின்னுக்குப் போய்விட்டது. அராபிய வணிகர்கள் குதிரைகளைக் கொண்டு வந்து குவித்த ஊர் இது..

சாப்பிட்ட இலையில், சில பக்தர்கள் சிலர் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் உருண்டு நேர்த்திக்கடனும் செலுத்துவர்.

மாதந்தோறும் அஷ்டமி வரும். நாள்தான் / திதிதான் பைரவருக்கு விசேஷம் . ஆனாலும் கார்த்திகை மாத அஷ்டமி சிறப்பு வாய்ந்தது. இதை மகாதேவாஷ்டமி என்பார்கள்.  பைரவாஷ்டமி, வைக்கத்து அஷ்டமி என்றெல்லாம் போற்றுகிறார்கள்.

பரசுராமர்

கேரளத்தில் பரசுராமர் சம்பந்தப்படாத கோவிலோ ஊரோ இராது. ஏனெனில் கேரளத்தில்  கடல் பின்னே செல்லச் செல்ல மக்களைக் குடியமர்த்தி புதிய பூமியை உருவாக்கினார். பிராமணர்களை அழைத்துச் சென்று குடியமர்த்தினார். இதனால் கோவில்களும் வழிப்பாடுகளும் உருவாகின .

3 வித தரிசனம்

வைக்கத்தில் சிவ பெருமான் காலையில் தட்சிணாமூர்த்தியாகவும்  உச்சி வேளையில் அர்ஜுனனுக்கு அருளிய கிராட (வேடர்)  மூர்த்தியாகவும் இரவில் பார்வதியுடன்  அமர்ந்து ஆனந்தமாக தரிசனம் தருவதாக்வு ம் ஒரு நம்பிக்கையும் இருக்கிறது .ஞானத்தை நாடுவோர் காலையிலும், வெற்றியை வேண்டுவோர் உச்சி வேளையிலும் ஆனந்த வாழ்வினை வேண்டுவோர் இரவிலும் தரிசனம் செய்யலாம் .

வில்வமங்கள் சாமியார்

கேரளத்தில் பிரபலமான வில்வ மங்கள சாமிகள் ஒரு முறை  வைக்கம் மூலஸ்தானத்தில் சிவனைக் காணாததால் தேடிவந்த போது , அவர் பக்தர்களின் பந்தியில் , உணவுக்கூடத்தில் இருந்ததாகவும் பக்தர்கள் சொல்லுவார்கள்

சாம்பல் பிரசாதம் அன்னதானப் பிரபு

சிவ பெருமானே  நேரில் வந்து பக்தர்களுக்குச் சாப்பாடு போடுவதால் அவரை அன்னதானப்பிரபு என்று இங்கே அழைக்கின்றனர் ; அன்ன தானம் செய்யப் பயன்படுத்திய அடுப்பின் சாம்பல்தான் இங்கு  விபூதி பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

நம்பூதிரி பாம்பு விஷம்

வைக்கத்தில் ஒரு காலத்தில் 108 நம்பூதிரிகள் கோவிலை நிர்வகித்து வந்ததாகவும் ஒரு முறை உணவில் விஷப்பாப்பாம்பு விழுந்தது தெரியாமல் சாப்பாட்டினை  உண்டத்தில் பல குடும்பங்கள் அழிந்தததாகவும் சொல்லுவர்.

எச்சில் இலைகளில் உருளும் பக்தர்கள்

மகாதேவனே பரிமாறிய சாப்பாட்டினை உண்ட பக்தர்களின் எச்சில் இலைகளில் உருண்டு புரள்வதால் செய்த பாபங்களை அனைத்தும் போய்விடும் என்ற நம்பிக்கை இருப்பதால் பல பக்தர்கள் இந்தச் சடங்கினையும் செய்வார்கள் ; இது இப்போது பைரவர் வழிபாடு நடைபெறும் கோவில்களுக்கும் பரவிவிட்டது . தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில், சாப்பிட்ட இலையில் உருண்டு நேர்த்திக்கடனும் செலுத்துவர்.

வன துர்கா

கோவிலின் தென்புறத்தில் பஞ்சிக்கல் வானதுர்கா சிலை உளது. ஒரு காலத்தில் யக்ஷியாக உலவி மக்களை அச்சுறுத்தி வந்தவளை விக்னேஸ்வரர் இப்படி வனதுர்காவாக மாற்றினாராம்.

2 தந்திரிகள்

இங்கு இரண்டு தந்திரிகள் இருக்கின்றனர்  ஒவொன்றுக்கும் பின்னால் ஒரு கதை இருக்கிறது

xxxx

காந்திஜி சென்ற (Year 1937) கோவில்கள்

கேரளா மாநிலத்தில் நான் சென்ற கோவில்களை போல வேறு எங்கும் நான் சென்றதில்லை என்று 25,000பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜி சொன்னார். அவருடன் சென்ற மஹாதேவ் தேசாய் ஒவ்வொரு கூட்டத்திலும் காந்திஜி பேசியதை  திருவாங்க்கூர் இதிகாசம் என்ற ஆங்கில நூலில் எழுதியுள்ளார் .

The Epic of Travancore, Mahadev Desai, Navajivan Karyalaya, Ahmedabad, 1937

கேரளத்தில் காந்திஜி சென்ற கோவில்களின் பட்டியல் (தற்போது கன்யாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டுவிட்டது. முன்னர் அது கேரத்தில் இருந்தது..

அனந்த பத்மநாப சுவாமி கோவில் , திருவனந்தபுரம் ;நெய்யாற்றின்கரா கிருஷ்ண சுவாமி கோவில்;

திருவட்டாறு கோவில்; பத்மநாபபுரம் கோவில்; நாகர்கோவில் கோவில்; கன்யாகுமரி கோவில்,; சுசீந்திரம் கோவில்; ஜனார்த்தனர் கோவில், வற்கலா ; சிவகிரி நாராயண குரு மடம் ;அனந்த வாலீ ஸ்வரம் கோவில்; ஸ்ரீ ராமாவிலாசம் பஜனை மடம் ;  ஹரிபாட் சுப்ரமண்ய சுவாமி கோவில்; அம்பலப்புழா கிருஷ்ணன் கோவில்; தகழி  கோவில்; வைக்கம் கோவில்;  ஏ த்தமானூர் கோவில்; குமாரநல்லூர் கோவில்; திருவார்ப்பு 

கோவில்; திருநக்கரா கோவில்;  பெருனா ; திருவல்லா, செங்கானூர் கோவில்கள்; தாழ மன்  மடம் ; ஆரன்முளா கோவில்; கொட்டாரக்கரா கோவில்

இந்த 24 ஊர்களிலும் காந்திஜி சொற்பொழிவு ஆற்றினார் ஒவ்வொரு இடத்திலும் அவரது சொற்பொழிவுக்கு பெரிய கூட்டம் வந்தது ; அருகாமையிலுள்ள கிராமம்ங்களில் இருந்து மக்கள் நடந்தும் , கட்டை வண்டிகளிலும் வந்தனர்.

–subham —

கேரள மாநில கோவில்கள், Part 8, வைக்கம், மஹாதேவர் கோவில், , வைக்கத்து அஷ்டமி, அன்னதானம் , காந்திஜி விஜயம்

Leave a comment

Leave a comment