எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீ சத்யசாயிபாபா! (Post No.12,752)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,752

Date uploaded in London –  –  23 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவான் ஶ்ரீ சத்யசாயிபாபாவின் பிறந்த தினத்தை ஒட்டிய சிறப்புக் கட்டுரை (நவம்பர் 23)

ஶ்ரீ சத்யசாயிபாபா அவதாரம் – தோற்றம் : 23-11-1926 சமாதி : 24-4-2011

எங்கும் நிறைந்திருக்கும் ஶ்ரீ சத்யசாயிபாபா!

ச.நாகராஜன்

ஶ்ரீ சத்யசாயிபாபா ஷீர்டி சாயிபாபாவைத் தொடர்ந்து பூமியில் எழுந்தருளிய இரண்டாவது அவதாரமாகும்.

நாம் வாழும் காலத்திலேயே லக்ஷக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்த அவதாரமாக விளங்கியது இந்த அவதாரம்.

ஆயிரக்கணக்கான அற்புதங்கள்! அவற்றில் பெரும்பாலானவை நன்கு பதிவு செய்யப்பட்டவையாக இருப்பது இந்த அவதாரத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

பகவானின் அணுக்கத் தொண்டரான திரு என். கஸ்தூரி பகவானின் வரலாற்றை ‘சத்யம், சிவம், சுந்தரம்’ என எழுதி நன்கு ஆவணப்படுத்தியுள்ளார்.

அவர் தனது சொந்த சரிதத்தையும் ‘LOVING GOD : EIGHTY FIVE YEARS UNDER THE WATCHFUL EYE OF THE LORD’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதில் அடியோடும் இழை நாதமாக அமைவது ஒரு பெரும் கருத்து!

பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற கருத்தே அது.

இதை விளக்கும் பல சம்பவங்களை அவர் தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.

அதில் ஒரு சிலவற்றைக் காண்போம்;

நார்வேயை சேர்ந்த ஒரு எஞ்ஜினியர். அவரது பெயர் டைட்மான் (Tidemann). பங்களாதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தில் புனர்நிர்மாணம் செய்யப்படவிருந்த ஒரு பெரும் திட்டத்தில் அவர் சென்று சேரவேண்டும். அங்கு செல்வதற்கு முன் பாபாவின் ஆசியைப் பெற்று விடை பெற வந்தார் அவர்.  அப்போது அவருக்கு தனது ஆசியை அளித்த பாபா அவரது வலது கையில் ஆட்காட்டிவிரலில் ஒரு மோதிரத்தை தன் அங்கை அசைவினால் சிருஷ்டித்து அணிவித்தார்.

ஆறு மாதங்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் பெங்களூரில் ஒய்ட்ஃபீல்டில் பிருந்தாவனத்தில் பாபாவின் பங்களா வாசலில் வந்து அவர் நின்றார். பஜனை ஆரம்பமாகவிருந்த தருணம்.

அவர் கஸ்தூரிக்கும் டாக்டர் எஸ்.பகவந்தத்திற்கும் இடையில் வந்து அமர்ந்தார்.

பாபா அவர் அருகில் வந்து அவரைப் பார்த்தார். “மோதிரம் எங்கே?” என்று அவர் கேட்டார்.

டைட்மான் சற்று வெட்கத்துடன் “அது தொலைந்து விட்டது” என்றார்.

“எங்கே?” என்று கேட்டார் பாபா.

“சிட்டகாங்கில் கப்பலின் முகப்பில் ஒரு கயிறில் தொங்கியவாறே கீழே இறங்கிய போது அது தவறி ஆற்றில் விழுந்து விட்டது” என்றார் டைட்மான்.

‘எப்போது?” என்றார் பாபா.

“பிப்ரவரி, 23ஆம் தேதி” என்றார் டைட்மான்.

அருகிலிருந்த கஸ்தூரி அது மூன்று மாதங்களுக்கு முன்னால் என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.

உடனே பாபா தனது கையைச் சுழற்றினார். அதிலிருந்து விழுந்த ஒன்றைத் தனது இரு விரல்களால் அவர் பிடித்துக் கொண்டார். அது ஒரு மோதிரம்.

அது பழைய மோதிரம் தானா என்று கஸ்தூரி நினைக்க அதே எண்ணம் ஓட பகவந்தமும் அப்படியே நினைத்துக் கொண்டிருந்த தருணம் பாபா அவரைப் பார்த்து, “இன்னும் உனக்கு நம்பிக்கை பரிபூரணமாக வரவில்லையா?” என்று கேட்டார்.

“அதே மோதிரம் தான்! அது என் கையில் வந்து விழுந்தது. அந்த ஆற்றில் நான் இருந்தேன். நான் எங்கும் இருக்கிறேன். எனது கண்கள், எனது காதுகள், எனது முகம் எங்கும் உள்ளது. நான் அவை அனைத்தையும் சுற்றி உள்ளேன்” என்றார் பாபா.

கஸ்தூரிக்கு புரிந்தது; அவர் கூறுகிறார் – “கண்களில் மூடி இருக்கும் மாயத்திரையை விலக்க வந்தவரே பாபா என்று அன்று மாலை நடந்த உபநிடத உரைகளிலிருந்து அறிந்தோம்.”

பாபா தனது உரை ஒன்றில் மிக அழகாக விளக்கியுள்ளார் இப்படி:

“இந்த உடலில் முதல் 16 வருடங்கள் பால லீலைகளில் கழியும். அடுத்த 16 ஆண்டுகள் மஹிமாவில் கழியும். அதற்குப் பின்னர் உபதேசங்களில் ஈடுபடும். இதை நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

அப்படியே நடந்தது.

பின்னொரு காலத்தில் அவர் கூறியது இது:

“நான் பூமியைச் சுற்றி இருக்கிறேன். ஒவ்வொரு அங்குலத்திலும் இருக்கிறேன். கர்நாடகத்தில் ஜோக் நீர்வீழ்ச்சியில் 800 அடி ஆழத்தில் வீழ்ந்திருந்த ஒரு மனிதரையும் பார்த்திருக்கிறேன். ஆகாயத்தில் விமானம் விபத்திற்குள்ளாக 24000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துகொண்டிருந்தவரையும் பார்த்திருக்கிறேன்.” என்றார்.

அவர் ஹவாய், ரோம், மலாசியா, பிஜி போன்ற இடங்களில் இருப்பதை ஏராளமான சம்பவங்கள் நிரூபித்துள்ளன. பக்தர்கள் தமது அனுபவங்களை விளக்கமாகக் கூறி அதிசயித்துள்ளனர்.

வேதங்கள் அறைகின்ற, “ஏகோஹம் பஹுஸ்யாம் – நான் ஒன்றே – பலவாறாக ஆகிறேன்” என்பதை நிரூபிக்கும் அவதாரமாகத் திகழ்ந்தார் ஶ்ரீ சத்யசாயிபாபா.

அவரது ஜயந்தி தினத்தில்  அவரைத் தொழுது வணங்கி அவரது அருளாசி பெறுவோமாக!

***

ஆதாரம் : என். கஸ்தூரி அவர்கள் எழுதியுள்ள ‘LOVING GOD : EIGHTY FIVE YEARS UNDER THE WATCHFUL EYE OF THE LORD’ என்ற புத்தகம்.

பக்கங்கள் 202,,206, 425

Leave a comment

Leave a comment