
Post No. 12,753
Date uploaded in London – – – 23 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
WIKIPEDIA IMAGES; THANKS.
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 12
கோவில் எண் 11 – திருமூழிக்களம் லட்சுமணன் கோவில்
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள லட்சுமணன் கோவில் நாலம்பலங்களில் (One among Four Temples) ஒன்று; 108 வைணவ தலங்களில் ஒன்று; ஆழ்வார்கள் பாடி, மங்களாசனம் செய்த கோவில் .
எங்கே இருக்கிறது ?
கூடல் மாணிக்யம் பரதன் கோவிலிலிருந்து 32 கி.மீ; கொச்சி விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. திருசூரிலிருந்து 50 கி.மீ. . இங்கிருந்தும் ஆலவாயிலிருந்தும் பஸ்ஸில் வரலாம்.
சாலக்குடி நதியின் கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவில் மூலஸ்தானத்தில் இருப்பது விஷ்ணுவானாலும் அவர் லெட்சுமணனாக வழிபடப்படுகிறார்.
.jpg)
மூலவர் – திருமூழிக்களத்தான் அப்பன், ஸ்ரீ ஸூக்தி நாதப் பெருமாள்
நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய சந்நிதி
தாயார் – மதுர வேணி நாச்சியார்
தீர்த்தம் – பெருங்குளம், சங்க தீர்த்தம் சிற்றாறு
விமானம் – செளந்தர்யா விமானம்
ரிஷி / முனிவர் தொடர்பு – ஹரீத மகரிஷி
கோவிலின் சரியான பெயர் என்ன?
திரு மொழிக் களம் என்பதே மருவி திருமூழிக்களம் ஆனது. அதாவது ஹரித மகரிஷி நீண்ட காலம் தவமிருந்ததன் பயனாக ஸ்ரீ ஸூக்தியை பெருமாளிடம் இருந்து பெற்றதால் இறைவனை ஸ்ரீ ஸூக்திநாதன் என்றும் தலத்தை ஸ்ரீ சூக்தி புரம் = திரு மொழிக் களம் என்றும் அழைப்பர் .
ஸ்ரீ ஸூக்தி= திரு மொழி என்றால் என்ன?
பகவான் பிரத்தியட்சமாகி (நேரில் தோன்றி), வர்ணாசிரம தர்மங்களையும் ஐந்து காலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் சொன்னதை திரு மொழி = ஸ்ரீ ஸூக்தி என்பார்கள்.
தலம் தொடர்பான மற்றும் ஒரு சுவையான கதை
ராமன் காட்டில் தங்கியிருந்தான்; அவனை அழைத்துப் போக பரதன் படைகள் சூழ வந்தான்; அதைப் பார்த்தவுடன் முன் கோபக்காரனான லட்சுமணன், அடப்பாவீ ?அண்ணனைக் கொல்வதற்காக காடு வரை படைகளுடன் வந்து விட்டானே என்று எண்ணினான்; குகனும் முதலில் இப்படித்தான் நினைத்தான் என்பதை நாம் அறிவோம்.. பின்னர்தான் தெரிந்தது- அன்பே உருவானவன் பரதன் என்பது; முதலில் தான் நினைத்ததே பாவம் என்பது லட்சுமணனுக்கும் புரிந்தது. ராமனை தழுவிய பரதன் லட்சுமணனையும் தழுவி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினான் ;
இந்துக்களின் கணக்கு உலகில் ஏனைய கலாசாரங்களில் இருந்தும் வேறுபட்டது; மனோ, வாக் , காயம் , அதாவது சொல், செயல் சிந்தனை மூன்றில் தவறு செய்தாலும் அது பாபம் தான் ; தான் தவறாக எண்ணிய பாபத்தைப் போக்க இங்கு லட்சுமணனே விஷ்ணுவை வணங்கியதால் இது லட்சுமணன் கோவில் ஆயிற்று. மேலும் பக்தர்களும் இங்குள்ள பெருமாளை விஷ்ணுவாகவே காண்கின்றனர் .
ஆழ்வார் பாடல்கள் (மங்களாசாசனம் )-
திருமங்கை ஆழ்வார் – 1553, 2061, 2674, (திவ்வியப் பிரபந்தம்)
நம்மாழ்வார் – 3623- 33 பாடல்கள்
நம்மாழ்வாரால் பாடப்பெற்றதால் குறைந்தது 1200 ஆண்டுப் பழமையானதாக இருக்க வேண்டும்.
இந்தக் கோவிலில் மற்ற கோவில்களில் உள்ளது போல வாத்திய சங்கீதம் கிடையாது
திப்பு சுல்தான் எரித்த கோவில்
1790ம் ஆண்டில் திப்பு சுல்தானின் படைகள் கோவிலுக்குத் தீ வைத்தது .பின்னர் மூலம் திருநாள் மஹாராஜா, சித்திரைத் திருநாள் மஹாராஜா ஆகியோர் கோவிலை மீண்டு ம் எழுப்பினர் . கோவிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இதன் பழமையை பறைசாற்றுகின்றன.
திருவிழா
மேடம் / மேஷம் (சித்திரை) மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறும்; பூர்ணா நதியில் ஆராட்டு நடக்கும். சாக்கியர் கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
மகர மாதத்தில் நடக்கும் 41 நாள் திருவிழாவில் வேறு வகையான கூத்துக்கள் இடம்பெறும்.

கோவிலின் தோற்றம்
ஐந்து ஏக்கர் பரப்பில் மதில் சுவர் களுடன் அமைந்த கோவில் இது; நான்கு பெரிய வாசல்கள் இருக்கின்றன; நமஸ்கார மண்டபம் மிகப்பெரியது; தேக்கு மர சிற்பங்கள் நிறைந்தது அவைகளில் ராமாயணக் காட்சிக ளை காணலாம். இரண்டு அடுக்கு கோபுரம் உடையது; கேரளத்தில் இவ்வாறு இருப்பது அபூர்வம்; கோவில் உட்புறமும் கூம்பு வடிவ தாமிர/ செப்புத் தகடுகளால் மூட்டப்பட்டுள்ளது அழகான நடன மண்டபம் இருக்கிறது; த்வஜஸ்தம்பத்தை குலசேகர வர்மன் நிறுவினான்; பாஸ்கர வர்மன் திருப்பணிகள் செய்தான் .
இங்குள்ள லட்சுமணப்பெருமாள் நான்கு கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை, இடதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர் ஏந்தி விஷ்ணு வடிவமாகக் காட்சி தருகிறார் . கோவிலில் சாஸ்தா, சிவன்; பஞ்ச லோகத்தால் ஆன பகவதி சிலை ஆகிய மூர்த்திகளும் வழி படப்படுகின்றன.
-SUBHAM–
TAGS- திருமூழிக்களம், லட்சுமணன் கோவில்