
Post No. 12,756
Date uploaded in London – – 24 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 100
தவம் நிதம் நோற்கும், அவநிதன் முதலிய அரசர் ஆளும் கொங்கு மண்டலம்!
ச.நாகராஜன்
நூறு பாடல்களைக் கொண்ட கொங்கு மண்டல சதகத்தில் இறுதிப் பாடலான 100வது பாடலை இங்கு பார்ப்போம்.
நாளும் தவம் புரிகின்ற புண்ணியவான்கள் பொருந்தி இருக்கும் நாடு; வளர்ச்சியுற்றுக் குடிகள் நவநிதியும் பொருந்தி இருக்கும் நாடு; பகைவர் வணங்க, இன்பமோங்க அவநிதன் முதலிய அரசர்கள் வடநாட்டையும் வென்று மகுடம் புனைந்து அரசு புரிந்த நாடு – புகழ் வாய்ந்த கொங்கு மண்டலமே ஆகும்.
இப்படிக் கூறும் பாடல் தான் நூறாவது பாடல்.
தவநித நோற்கு மறவாணர் மேவத் தழைகுடிகள்
நவநிதி யோங்கத் தரியலர் தாழ நலம்பொருந்தி
அவநித னாதியரசர் வடக்கு மடங்க மணி
மவுலி தரித்துப் புகழ்நீண் டதுகொங்கு மண்டலமே
அவநிதன் முதலிய அரசர்கள் என்று இந்தப் பாடலில் மூன்றாவது வரி கூறுகிறது.
அவநிதன், கொங்கணி, பிரதிவி, கொங்கணி முதலிய கொங்கு அரசர்களை இந்தச் சொற்றொடர் குறிக்கிறது.
அவநிதன் என்ற அரசன் பொன்னாடு என்ற கேரளத்தைச் சார்ந்த நாட்டை வென்று ஆண்டிருக்கிறான்.
ஐந்தாம் நூற்றாண்டில் கொங்கணி என்ற அரசன் தானம் செய்த நிலம் வடக்கே நந்திதுர்க்கத்தில் இருக்கிறது.
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவநிதன் தானம் செய்த நிலம் அதற்கு வடக்கே உள்ளது.
எட்டாம் நூற்றாண்டில் துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஊரில் பிரிதிவி கொங்கணியின் தான நிலம் இருக்கிறது. ஆகவே அது வரை கொங்கு மண்டல அரசர்கள் ஒரு காலத்தில் அந்த பிரதேசங்களை வென்று ஆண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.
சங்க நூல்கள் கொங்கு – கொங்கர்கள் என்றும் சேரர்- கேரளம் என்றும் இரு விதமாகப் பிரித்துக் கூறுகின்றன.
சேர அரசர் கொங்கு நாட்டை வென்றதும், கொங்கு அரசர் கேரளத்தை வென்றதும் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன.
பலநாடுகளை ஒரே அரசன் வென்று ஆண்டுமிருக்கிறான்.
கேரள அரசுக்குத் தலைநகர் கள்ளிக்கோட்டை, வஞ்சி.
கொங்குநாட்டிற்குத் தலைநகரம் ஸ்காந்தபுரம் -தவலன புரம் அல்லது குவலாலபுரம்.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழப்பேரரசு வலிமையான ஒரு பெரும் அரசாக உருவெடுக்கும் வரை ஸ்காந்தபுரத்திலிருந்து தான் அவநிதன் உள்ளிட்ட அரசர்கள் புகழோங்கி அரசு செய்து வந்தனர்.
எட்டுத்தொகையுள் ஒன்றான ஐங்குறுநூறு மருதம் – 1- வேட்கைப்பத்தில் கூறும் அவிநி என்பவனோடு பொன்னாடு உள்ளிட்ட சேர ராஜ்யத்தை ஆண்ட அவநிதன் என்னும் அரசனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
வாழீயாதன் வாழீ யவினி
நெற்பல பொலிக பொன் சிறிது சிறக்க
வென வோட்டேளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாண ரூரன் வாழ்க
பாணனும் வாழ்க வெனவேட் டோமே
என வேட்கைப்பத்து கூறுகிறது.
இந்த வேட்கைப்பத்தில் வரும் பத்து பாடல்களிலும் முதல் அடி வாழியாதன் வாழியவினி என்றே வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படிப் பலவிதங்களிலும் கொங்குமண்டலம் சிறப்புற விளங்கியதை கொங்குமண்டல சதகம் நூறு பாடல்களிலும் காணலாம்.
இதைத் தக்க முறையில் விரிவாக அழகுற அனைவரும் படிக்கும்படி பெரும் நூலாக வெளியிட வேண்டியது தமிழரின் கடமை.
செய்வோம்; சிறந்து வாழ்வோம்!
கொங்கு மண்டல சதகம் முற்றும்.
ஒரு சிறு குறிப்பு: விநாயகர் காப்பு உள்ளிட்ட காப்புப் பாடல்கள், அவையடக்கப் பாடல், ஆக்கியோன் பற்றிய பாடல் ஆகியவற்றுடன் நாடு, எல்லை, இணைநாடு, தலம், மலை, நதி, குடிவளம் ஆகிய பாடல்களை இன்னும் இரு கட்டுரைகளில் காண்போம். அத்துடன் இந்தத் தொடர் முற்றுப் பெறும்.
***