
Post No. 12,757
Date uploaded in London – – – 24 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
pictures are from wikipedia and trip advisor; thanks.
கோவில் எண் 12 – த்ரிசூர் சிவன் கோவில்

திருச்சூர் என்ற பெயரை கேரள அரசு த்ரிசூர் என்று மாற்றியுள்ளது; இங்குள்ள வடக்குநாதன் சிவன் கோவிலும் வருடம்தோறும் நடக்கும் பூரம் விழாவும் பாரதம் முழுதும் பிரசித்தமானவை. கேரள கோவில் விழாக்களில் மிகவும் பிரசித்தமானது த்ரிசூர் கோவில் விழாதான்
திரு — சிவப் — பேரூர் என்பது சுருங்கி த்ரிசூர் ஆனதாக ஒரு கருத்து உளது
ஒன்பது ஏக்கர் பரப்பில் 4 பெரிய கோபுரங்களுடன் கம்பீரமாக நிற்கிறது. ஒரு காலத்தில் தேக்கு மரக் காட்டுக்கு இடையே நின்றது இப்பொழுது வெற்று மைதானத்துக்கு பெயர் மட்டும் தேக்கின்காடு!
கோவிலுக்குள் வடக்குநாதன் என்ற பெயரில் சிவ பெருமானும், சங்கர நாராயணன், ராமன் ஆகியோரும் மூன்று முக்க்கிய சந்நிதிகளில் இருக்கின்றனர் கோவிலின் வடக்குப் பக்கத்தில் குடிகொண்டதால் சிவனின் பெயர் வடக்கு நாதன்; அவர் மேற்கு திசையை நோக்கி இருக்கிறார். அதே சந்நிதியில் சிவனும் பார்வதியும் கிழக்கு நோக்கி இருக்கும் மூர்த்திகளும் உண்டு . தென் பகுதியில் ராமர் கோவில்; நடுவில் சங்கர நாராயணன் கோவில்.
பரசுராமருடன் தொடர்புடைய கோவில். சிவனுக்குப் பின்பக்கமுள்ள பார்வதியை பரசுராமர் நிறுவியதாக ஐதீகம் (வரலாறு). மரத்தினால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.
மேலும் கேரளத்தில் எல்லா வைணவ கோவில்களிலும் உள்ளது போல விஷ்ணு உருவம்.
சிறப்பு அம்சங்கள்
மஹாபாரதக் காட்சிகளை சித்தரிக்கும் 300 ஆண்டுப் பழமையான ஓவியங்கள் .
சிவன் ஒரு பெரிய நெய் மலை ! காஷ்மீர் அமர்நாத் குகையில் பனிக்கட்டி சிவன்; இங்கு நெய் — டன் கணக்கில் — உறைந்து உருவான சிவ லிங்கம் !
எப்போதும் பசு நெய்யினால் அபிஷேகம் செய்து சிவ லிங்கத்தை மலை போன்ற நெய் மறைத்துவிட்டது. சிவலிங்கத்தின் மீது பத்து அடி (Ten Feet) சுற்றளவுக்கு நெய் உறைந்து நிற்பதால் அர்ச்சகர் சுற்றி வர கர்ப்பக்கிரகத்தில் இடம் கிடையாது.
ஆயுர் வேத சிவன்
ஆயுர்வேதத்தில் நெய் ஒரு முக்கிய மருந்துச் சரக்கு; ஆகையால் இங்குள்ள ஆயிரம் ஆண்டு பழமையான நெய்யினை வாங்குவதற்காக ஆயுர்வேத மருத்துவர்களும் வருகிறார்கள்;
யஜுர் வேதப் பகுதியான ருத்ரம்- சமகம் மந்திரத்தில் சிவ பெருமானை MR DOCTOR திருவாளர் டாக்டர் (பிஷக்), MR MEDICINE திருவாளர் மருந்து (பேஷஜம்) என்று ஒரு மந்திரம் வருகிறது. இங்கு அது உண்மையாகிறது.
சிவன் நெய்ப் பிரியர் ; அவருக்கு நெய் அபிஷேகம்; ஆனால் ராமருக்கு எண்ணெய் அபிஷேகம்; சங்கர நாராயணருக்கு பஞ் சகவ்ய அபிஷேகம் !
கோவிலில் கணபதி, காவல் தெய்வம் வேட்டைக்கொருமகன் சந்நிதிகளும் இருக்கின்றன . வலம் வரும் பிரதட்சிணப் பாதையில் பரிவார தேவதைகள் இடம்பெறுகின்றன . பரசுராமர் வசிப்பதாக கருதப்படும் தரா (தரை– மேடை)வடகிழக்கு மூலையில் இருக்கிறது. கேரளத்தில் வினோதமான ஒரு விஷயம் என்னவென்றால் பரசுராமர் சம்பந்தப்படாத கோவிலே இராது அவர்தான் பல சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார். அவருக்கோ திருவல்லம் என்னும் ஓரிடத்தைத் தவிர வேறு எங்கும் பரசுராமர் கோவில் இல்லை!!!
கோவில் சுவரில் ஒரு முக்கோண துவாரம் இருக்கிறது; இதன் மூலம் மூன்று முக்கிய சந்நிதிகளையும் காணலாம்.
ஆதி சங்கரர் தொடர்பு
இந்தியாவே வியக்கும் வண்ணம் தோன்றிய மாபெரும் தத்துவ வித்தகர் ஆதிசங்கரர் பிறப்பதற்கு வடக்குநாதனே காரணம். அவருடைய பெற்றோர்கள் மகப்பேறு இன்றி தவித்து நல்ல புத்திரன் பிறக்க நோன்பு இருந்தது வடக்குநாதன் கோவிலே; இதனால் சங்கரர் காலத்துக்கும் முன்னரே கோவில் இருந்ததை நாம் அறிகிறோம்.
மேற்குக் கோபுரத்துக்கு வெளிய அரசமரமும் மேடையும் இருக்கிறது. அங்குதான் நம்பூதிரி பிராமணர்களிடம் பரசுராமர் சிலையை ஒப்படைத்தார்

கூத்தம்பலம்
மேலைக் கோபுரம் வழியாக நாம் நுழைந்தால் இடது புறம் அழகிய கூத்து அம்பலத்தைக் காணலாம்; கூத்து முதலிய கலை நிகழ்ச்சிகள் நடப்பதற்கு எல்லா கோவில்களிலும் கூத்தம்பலம் இருந்தாலும் திரிசூர் போல கலை வேலைப்பாடு உடையவை வெகு சிலவே.
கூத்தம்பலம் கட்டுமானம் பற்றிப் ப ல கதைகளும் உண்டு; வெள்ள நாழி நம்பூதிரி என்பவர் கட்டிடக்க கலை நிபுணர் என்றும் அவர் வரைபடம் இல்லாமலேயே சிற்பிகளை வைத்து கட்டிடத்தைக் கட்டி முடித்தார் என்றும் சொல்லுவார்கள். அவரையே மதில் சுவர் கட்டும்படி மன்னர் சொன்னபோது அவர் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் செ ங்கற்களைக் கேட்டாராம் . அதே அளவு கற்களைக் கொண்டு வந்து மதில் சுவர் எழுப்பும்படி மன்னர் சொன்னாராம் அவரைச் சோதிப்பதற்காக இரண்டு செங்கற்களை மட்டும் மன்னர் மறைத்து வைத்தாராம்; ம தில் சுவற்றில் இரண்டு செங்கற்களான இடம் அப்படியே காலியாக இருந்தது; மன்னர் , ஒன்றும் தெரியாதவர் போல நடித்து, என்ன அறிஞரே! இரண்டு ஓட்டை தெரிகிறதே!! என்றாராம்; அவர் உடனே சட்டென்று யாரோ இரண்டு செங்கற்களை ஒளித்து வைத்து இருக்க வேண்டும் அல்லது இரண்டு செங்கற்களினை குறைத்து கொண்டு வந்திருக்க வேண்டும் என்றாராம்; உடனே மன்னர் அவரது திறமையை மெச்சி, அவருக்குத் தங்கக் காப்பு செய்து அணிவித்தாராம் .
வெள்ளை நந்தி கதை
ஒரு காலத்தில் ஒரு இளம் துறவி கோவிலுக்கு வந்து தினமும் தியானம் செய்தாராம்; அவரது தேஜஸில் மயங்கிய பெண்கள் குழந்தை பெற்றபோது அக்குழந்தைகள் அந்த துறவியின் முக ஜாடையில் இருந்தவுடன் பலருக்கும் சந்தேகம் துளிர்விட்டது; வதந்தியும் (Gossip rounds) பரவியது. அப்பாவியான துறவி தமிழ் நாட்டிலிருந்து சிற்பிகளை வரவழைத்து ஒரு அழகிய நந்தியைச் செய்தாராம்; அதைச் சுற்றி தினமும் பசுக்கள் நின்றனவாம்; அவை கன்று ஈன்ற போது அனைத்தும் வெள்ளை நந்தி போலவே இருந்தவுடன் கிசுகிசுப் பேச்சுக்கள் நின்றனவாம்.
எவ்வளவு சுவையான கதைகள் ; ஒரு வேளை கோவிலின் சிறப்பினை நின்று ஆற, அமர இருந்து ரசிப்பதற்காக இப்படிக் கதைகளை எட்டுக்கட்டினாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

உலகப் பிரசித்திபெற்ற பூரம் விழா !
கோவிலில் நடக்கும் ஒரே உற்சவம் சிவராத்திரி உற்சவம்தான் ; அப்போதும் சுவாமி புறப்பட்டு கிடையாது .
மேடம்/ மேஷம் (ஏப்ரல்-மே ) மாத பூரம் விழா நடக்கும். அதை வடக்குநாதன் ஆசீர்வதிப்பார்; கோவில் மைதானத்தில் நடந்தாலும் இது கோவில் விழா அல்ல. எல்லா கோவில் மூர்த்திகளும் சிவ பெருமானை தரிசிக்க வருகை தருவது, பிரமாண்டமான யானைகள் அணிவகுப்பு, மிகப்பெரிய வாண வேடிக்கை , மாபெரும் விருந்து ஆகியன சிறப்பு அம்சங்கள். ஒருகாலத்தில் அருகாமையில் நடந்த ஆறாட்டு விழா மழை காரணமாக தடைபட்டவுடன் மன்னரிடம் மக்கள் முறை செய்தனர். அவர் அந்த வட்டாரத்திலுள்ள கோவில்களை இரண்டாகப் பிரித்து அருகிலுள்ள கோவில் தெய்வங்களுடன் பவனி வர ஏற்பாடு செய்தார் .
நூற்றுக்கணக்கான கலைஞர்கள் விண்ணதிர வாத்ய கோஷங்களை முழக்குவர் . பத்து கோவில் தெய்வங்கள் வருகை தந்து சிறப்பிக்கின்றன 200 ஆண்டுகளுக்கு முன்னர் கொச்சி மகாராஜா சாக்தன் தம்புரான் செய்த ஏற்பாடு இன்றுவரை பின்பற்றப்படுகிறது . ஆண்டுதோறும் புதிய புதிய வண்ண வண்ண குடைகள் தயாரிக்கப்படும். நெய் திலக்கா விலம்மா என்ற தெய்வத்தை ஏந்திய யானை, கோவிலின் கதவைத் திறக்கும் சம்பிரதாயம் இருக்கிறது. காலண்டரில்/ பஞ்சாங்கத்தில் பூர நட்சத்திரம் வருவதற்கு 7 நாட்கள் முன்னதாகவே விழா துவங்கி விடும்; பூரம் நட்சத்திரத்தன்று பெரிய விழா; லட்சக் கணக்கான மக்கள் இதில் பங்கேற்கின்றனர் . கேரளத்தில் இந்து விரோத அரசுகள் ஆட்சி புரியத் துவங்கியவுடன் அரசு உதவி குறைந்ததோடு கோவில் நிலங்களும் அபகரிக்கப்பட்டன ; ஆயினும் பக்தர்கள் ஆதரவில் இறைவன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் .
இது ஆதி சங்கரர் காலத்துக்கும் முன்னாலிருந்தே பக்கதர்களை ஆகர்ஷித்து வருகிறது
–subham–
TAGS– கேரள மாநிலத்தின், புகழ்பெற்ற, 108 கோவில்கள், த்ரிசூர் சிவன் , வடக்குநாதன், கோவில், பூரம் விழா