
Post No. 12,760
Date uploaded in London – – 25 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
22-11-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
26-11-23 அன்று திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்படும். கட்டுரை இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!
முதல் பகுதி
ச.நாகராஜன்
கந்தனும் கார்த்திகையும்
தமிழர் தம் வாழ்வில் தனி இடம் பெறும் மாதம் கார்த்திகை மாதம். தனி இடம் பெறும் நட்சத்திரம் கார்த்திகை.
தமிழர் துதிக்கும் தனிப் பெரும் வெற்றித் தெய்வமான கந்தனையும் கார்த்திகையையும் இணைத்துப் பேசும் புராணக் கதைகள் ஏராளம் உண்டு.
முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் விளக்குகின்றன.
அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப்பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு பேரும் மகிழும் வண்ணம் தனித்தனி உருவம் எடுத்து அவர்களை மகிழ்வித்தான் கார்த்திகேயன்.
முருகனுக்கு ஒரு தனிச் சிறப்பு, அவன் செல்லும் பாதையில் அவனுக்கு முன்னால் வெற்றி தேவதை செல்லும். எடுத்ததெல்லாம் வெற்றி. எப்போதும் வெற்றி.
அதி உஷ்ண நட்சத்திரமான கார்த்திகை (ஆங்கிலத்தில் plieades) அனைத்து தீமைகளையும் சுட்டுப் பொசுக்கி விடும்.
ஆகவே தான் திருக்கார்த்திகை தினத்தில் ஒளி விளக்கேற்றி கந்தனை துதித்தல் மரபு.
துதி, வாணி, வீரம், விஜயம், சந்தானம், துணிவு, தனம், தானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு, அறம், குலம், நோயின்மை, வயது (ஆயுள்) ஆகிய பதினாறு பேறுகளையும் தரும் தெய்வமாக இருக்கும் முருகனை தமிழர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கிப் போற்றித் துதிக்கின்றனர்.
இதை சங்க இலக்கியம் உள்ளிட்ட பழைய நூல்களில் பரக்கக் காணலாம்.
அறுமீன், ஆரல், ஆல் என கார்த்திகை நட்சத்திரத்தை நற்றிணை, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை உள்ளிட்ட நூல்கள் குறிப்பிட, கார்த்திகை மகளிர் அறுவர் என்று கார்த்திகை மகளிரை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. முருகனைப் பல்வேறு பெயர்களால் போற்றுகின்றன.
இலக்கியம் காட்டும் விளக்கொளி
விளக்கின் வகைகளையும் அவற்றைத் தமிழ் மகளிர் போற்றித் துதித்து இல்லங்களிலும் கோவில்களிலும் ஏற்றி வந்ததையும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் காணலாம். விளக்கு அணைந்தால் அது அபசகுனம் என்று கருதப்பட்டதை ‘நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா’ என்ற புறநானூற்று வரி (பாடல் 280) விளக்குகிறது.
அருளாளர்கள் அனைவரும் விளக்கைப் போற்றுவதை சமய இலக்கியத்தில் காணலாம்.
நூற்றுக் கணக்கான பாடல்களில் சில எடுத்துக்காடுகள் இதோ :
மாணிக்கவாசகர் : “ஜோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே”
ஞானசம்பந்தர் : “விண்களார் தொழும் விளக்கு” என்று சிவபிரானைத் தொழுது ஞான விளக்கினை ஏற்றுவோம் என்ற அறைகூவலை விடுக்கிறார்.
சுந்தரர்: “பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்”
அப்பர் : “இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமச்சிவாயவே”
இப்படி 22 இடங்களில் அப்பர்பிரான் விளக்கைச் சுட்டிக் காட்டுகிறார்.
திருமூலர் : “விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்”.
காலத்தினால் பிற்பட்ட கவியரசர் கண்ணதாசனும் இல்லத்தரசி ஏற்றும் விளக்கை தன் திரைப்படப் பாடலில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதோ அவர் இயற்றிய பாடலில் ஒரு பகுதி:-
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன பனியாலே என்ற பாடலில் வருவது)
விளக்கை எப்படி எப்போது ஏற்றுவது?
குத்து விளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளையும் குறிப்பதாக ஆகிறது.
ஒரு முகம், இரு முகம், பஞ்ச முகம் என பலவகை விளக்குகள் உண்டு. அனைத்தும் நன்மைகளையே தரும். பசு நெய் உத்தமம், அடுத்து நல்லெண்ணெய் பயன்படுத்தப்படலாம். பருத்தியால் ஆன பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு ஏற்றுதல் உத்தமம். கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.
தீபத்தை வீட்டின் வாயிலில் இரு புறமும் கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றுவது மரபு.
அன்றாடம் காலையிலும் மாலை சந்தியா வேளையிலும் தீபம் ஏற்றுவது நமது மங்கையரின் வழி வழி வந்த மரபுப் பண்பாகத் திகழ்கிறது. கிராமங்களில் இன்றும் பழைய வீடுகளின் திண்ணைச் சுவரில் இரு புறமும் தீபம் ஏற்றுவதற்கான பிறை மாடங்களைக் காணலாம்.
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்கள்
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்களைப் பட்டியலிடவே முடியாது. மஹாலட்சுமி வாசம் புரியும் இடம் என்பதால் செல்வச் செழிப்பு ஏற்படும். துன்பங்கள் தொலையும். கடன் தொல்லை போகும். திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். சகல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர். இப்படி உலகியல் வாழ்க்கைக்கான பல அம்சங்களில் நலம் பெறுவதோடு ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து அரிதான முக்திக்கும் வழி வகை செய்யும் ஒரு வழிபாடே திருவிளக்கு ஏற்றும் வழிபாடாகும்.
‘தமஸோ மா ஜோதிர் கமய’ – இருளிலிருந்து என்னை ஒளிக்கு இட்டுச் செல் என்பதே அனைவருக்குமான வேத முழக்கம்.
‘தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று தீப ஜோதியை இறைவனாகக் காண்கிறார் அருணகிரிநாதர்,
To be continued…………….
***
tags -kartikai 1