
Post No. 12,786
Date uploaded in London – – – 1 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 20
கோவில் எண்கள்- 17 & 18 தொடர்ச்சி
குமாரநல்லூர் பகவதி கோவில், உதயணபுரம் முருகன் கோவில்
இரண்டு கோவில்களின் சிறப்பு அம்சங்கள்
உதயண புரத்திலுள்ள சுப்பிரமணிய சுவாமி, வைக்கத்திலுள்ள தந்தையை – மகாதேவனை– சந்திக்க ஆண்டு தோறும் வைக்கத்து அஷ்டமி உற்சவத்தின் போது வருகிறார் ; மதுரை சித்திரைத் திருவிழாவின் போது அருகிலுள்ள திருப்பரங்குன்ற முருகன், மதுரை பஸ் நிலையம் அருகிலுள்ள பெருமாள், அழகர் கோவிலில் உள்ள பெருமாள் எல்லோரும் வருவதைப் போல இது ஒரு பெரிய வைபவமாக நடக்கிறது. முருகன் வரும்போதும் திரும்பிச் செல்லும்போதும் நாடகம் போல காட்சிகளைக் காணலாம் .
வைக்கத்திலிருந்து 3 கிலோ மீட்டரில் இருப்பதால் இரண்டு தலங்களையும் சேர்த்து தரிசிப்பது ஒரு சம்பிரதாயம்.
வைக்கம் போலவே வட்ட வடிவ கருவறை; கனத்த மதில் சுவர்கள். பழனி சுப்பிரமணிய சுவாமி போலவே இவருக்கும் கேரள மக்கள் முக்கியம் தருகிறார்கள்; கார்த்திகை நாள், சஷ்டி திதி ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகள் உண்டு .
மகர மாத (ஜனவரி) தைப்பூச திருவிழாவில் ஏராளமான காவடிகள் அணிவகுத்து வரும்.; 7 நாள் விரதம் இருக்கும் பக்தர்கள், முதலில் வைக்கத்துக்கு சென்று சிவனை தரிசித்துவிட்டு இங்கு வந்து, காவடியில் கொண்டுவந்த அபிஷேகப் பொருட்களால் கார்த்திகேயனனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
உதயண புரத்தின் அழகான சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்தால் இதன் பழமை புரியும். மண்டபத்தில் ராமாயணக் காட்சிகள் நிறைந்திருப்பதால் கலை ரசிகர்கள் அவைகளைக் காண வருகின்றனர் இந்தக் கோவில் பகவதிக்காக அமைக்கப்பட்டு, பின்னர் மன்னரின் கனவால் குமார நல்லூருக்கு மாற்றப்பட்டதால் இன்றும் பகவதி சேவை இந்த முருகன் கோவிலில் நடக்கிறது.
xxxx

குமாரநல்லூர் பகவதி கோவில்
கோட்டயத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் பகவதி கோவில் இருக்கிறது
சேரமான் பெருமாள் கனவில் கண்டபடி, முந்திய திட்டத்தை மாற்றி , குமரநல்லூரில் பகவதியையும் உதயணபுரத்தில் சுப்பிரமணியனையும் பிரதிஷ்டை செய்தார். இதில் 1000 நாயர் குடும்பங்களையும் 28 நம்பூதிரி குடும்பங்களையும் ஈடுபடுத்தினார்.
இந்த ஊருக்கு மஞ்சூர் என்ற பெயரும் வந்தது; மஞ்சு என்றால் மேகம். சேரமன்னனின் முதல் திட்டத்தை தேவி ஏற்காததால், அதைக் காண்பிக்க தேவியே மூடு பனியால் இந்த ஊரை மூடவே சேராமானும் தேவியின் மஹிமையை உணர்ந்தான்.
மதுரை மீனாட்சியுடன் (மூக்குத்தி கதை) தொடர்பு கொண்டதாலோ என்னவோ தெரியவில்லை, இந்தக் கோவில் தமிழ்நாட்டுக் கோவில்கள் போல வடிவமைக்கப்பட்டுள்ளது
பொதுவாக விக்கிரகங்களைச் செய்வதற்கு கிருஷ்ண சிலா என்னும் கருப்பு நிறக் கல்லை பயன்படுத்துவார்கள். இங்குள்ள சிலை அஞ்சனக் கல்லால் (ஆன்டிமணி சல்பேட்) ஆக்கப்பட்டுள்ளது . சங்கு சக்கரத்துடன் அழகே உருவெடுத்து வந்தாற்போல இறைவி காட்சி தருகிறாள்.
விருச்சிக மாதத்தில் (நவம்பர்- டிசம்பர்) கொண்டாடப்படும் த்ரி கார்த்திகா உற்சவம், இந்தக் கோவிலின் முக்கிய திருவிழா ஆகும். அந்த உற்சவத்தில் வடக்குநாதன் கோவில் மதில் சுவருக்கும் உதயண புரம் கோவில் மதில் சுவருக்கும் பூஜையும் நைவேத்தியமும் படைக்கப்படும் . இதற்கு ஒரு விநோதக் காரணத்தையும் சொல்கிறார்கள் .
கார்த்திகை மாத குளியலை முடித்துவிட்டு, அம்மன் திரும்பி வருகையில் மிகவும் அழகாக காட்சி தருவாளாம் . இந்தக் காண்பதற் காக கோவிலில் குடிகொண்டுள்ள கடவுளர், மதில் மேல் ஏறி காத்திருப்பார்களாம்.. சந்நிதிகளில் இறைவனைக் காணவில்லையே என்று தேடிய அர்ச்சகர்கள், அந்த தெய்வங்கள் மதில் சுவரில் நிற்பதைக் கண்டு சுவர்களுக்கே வழிபாடு செய்தனராம் .
இவ்வாறு இரண்டு கோவில்களையும் சுற்றி பல கதைகள் இருப்பது, கோவிலை நினைவு வைத்துக்கொள்ள பேருதவி செய்கிறது.
xxxx


கோவில் எண் 19 பெருவனம் இரட்டையப்பன் கோவில்
பூரம் ஆறாட்டுப்புழா ,108 இறைவன்கள் மகாநாடு
திருச்சூர் நகரிலிருந்து திருப்பிரையார் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாயம்குளங்கரா எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இரட்டையப்பன் கோவிலை அடையலாம் . ஒரு காலத்தில் இங்கு நடந்த ஆறாட்டுப்புழா பூரம் விழாதான் எல்லா பூரம் விழாக்களுக்கும் தோற்றுவாயாக இருந்தது. 108 தேவ, தேவியர் யானை மீதேறி இங்கு பவனி வந்து ஆற்றின் இருபுறங்களிலும் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒரு சமயம் மழை வெள்ளம் காரணமாக திருச்சூர் வடக்குநாதன் வர முடியாமல் பாதி வழியில் திரும்பிச் செல்ல நேரிட்டது பின்னர் திருச்சூரிலும் தனி பூரம் விழா துவங்கியது.
பெருவனம் கோவிலின் சிறப்பு அம்சங்கள்
இங்கு இரண்டு சிவன் சந்நிதிகள் இருப்பதால் இரட்டையப்பன் கோவில் என்று பெயர் ஏற்பட்டது .
ஏன் இரண்டு கருவறைகள்? என்ற கேள்வி எழும் .
பரசுராமர், கேரளத்தில் மக்கள் வாழாததைக் கண்டு பிடித்தார். மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக்க கடலுக்கும் இடைப்பட்ட பூமியில் மக்களைக் குடியே ற்ற திருவுளம் கொண்டு 64 கிராமங்களை அமைத்தார் ; இதில் பெருவனம் என்னும் இடமே தலைமைப் பதவி வகித்தது. தமிழ் நாட்டில் பிராமணர் ஊர்களை மங்கலம் என்ற பெயரால் அழைப்பர்; கேரளத்தில் கிராமம் என்று அழைப்பர்
பூரு முனிவர் என்பவர் அடர்ந்த காட்டுக்குள் — அதாவது பெரிய வனத்துக்குள் – தவம் செய்தவுடன் சிவனும் பார்வத்தியும் தோன்றி அருள் செய்தனர் இருவரையும் இறைவன் பாதி இறைவி பாதி என்னும் அர்த்தநாரி கோலத்தில் தரிசிப்பதே தனக்கு பிடித்தது என்று சொல்லவே சிவனும் ஒரு லிங்கத்தைக் கொடுத்து அவ்வாறே காண்பாய் என்கிறார். பின்னர் அவர் லிங்கத்தை ஒரு ஆலமரத்துக்கு அடியில் பிரதிஷ்டை செய்தார். அபிஷேகம் செய்வதற்காக நிலத்தில் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை வெட்டினார். அதை தொடு குளம் என்பார்கள் அர்த்த நாரீ சொரூபத்தையும் கோவிலில் நிறுவினார். இவ்வாறு லிங்கமும் அர்த்த நாரீ யும் இரண்டு சந்நிதிகளில் இருந்து அருள் பாலிப்பதால் இரட்டையப்பன் என்று அழைக்கப்பட்டனர்.
.jpg)
108 கோவில் யானைகள் பவனி
மார்ச்- ஏப்ரலில் 28 நாள் உற்சவம் நடக்கும் ; உற்சவத்துக்கு 108 கோவில்களின் இறைவன்கள் 108 யானைகள் மீது பவனி வந்த காலம் உண்டு . பின்னர் காட்டுக்குள் வருவதை விட ஆங்காங்கு பூரம் ஆராட்டு விழாவினை நடத்த தொடங்கினர். பெருவனம் பெயர் மங்கி, திருச்சூர் பூரம் பெயர் பெற்றது இப்போது பெருவனம் ஆராட்டுக்கு 23 கோவில் தேவ தேவியர் மட்டுமே வருகின்றனர் சாஸ்தா கோவில் அருகில் இருக்கும் பரந்த வயல் வெளியில் இந்த கடவுளர் சந்திப்பு– மகாநாடு நடக்கும். திருப்பரையார் ராம பிரான் தலைமை வகிப்பார்.
பார்வதி தேவி, கணபதி,, தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் இருக்கின்றன. கோவிலின் சுற்றுப் பகுதியில் கோசாலை கிருஷ்ணன் சந்நிதி இருக்கிறது . நான்கு புறங்களில் நாங்கு சாஸ்தா கோவில்கள் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர் குதிரை மலை, அக மலை , எடத்துருத்தி , வழுத்துக் காவு என்பன நான்கு சாஸ்தா கோவில்கள் ஆகும் .
—–SUBHAM—
TAGS- கேரள மாநில கோவில்கள், PART 20, குமாரநல்லூர் பகவதி உதயணபுரம் முருகன், கோவில், பெரு வனம் , இரட்டையப்பன் , விழா,