கொங்குமண்டல சதகம் – பாடல்கள் 6 & 7 (Post No.12,785)



WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,785

Date uploaded in London –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

கொங்குமண்டல சதகம் –  பாடல்கள் 6 & 7

ச.நாகராஜன்

கொங்கு மண்டல சதகத்தில் ஆறு மற்றும் ஏழாம் பாடல்களைப் பார்ப்போம்:

நதி 

திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி

தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்

குருமணி பாலை நதிவாழை காரி குடவனதி

வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே.

–    பாடல் 6

  (க-ரை) திருமணிமுத்தாறு – தொப்பையாறு – பவானியாறு -
செய்யாறு – நொய்யலாறு – ஆம்பிராவதி – நள்ளாறு – சண்முக நதி -
பாலையாறு – வாழையாறு +பாரத்துவாசநதி – குடவனாறு – சண்பக நதி -
சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.

குடிவளம்

நீடுந் தமிழ்மன்னர் மூவர்க்கு மம்பொனெடு மகுடஞ்

சூடும் பெருமை படைத்துயர் மக்களின் சோர் வகற்றிக்

கூடும் பலவுண வூட்டுவே ளாளக் குடிசிறந்து

மாடும் பெருகி வளர்வதன் றோகொங்கு மண்டலமே.

                                         –    பாடல் 7

 (க-ரை) சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் வேந்தர்
மூவர்க்கு மகுடஞ் சூடும் பெருமையை அடைந்து, எல்லா உயிர்க்கும்
உழவுத்தொழிலாற் பல உணவுப்பொருள்களை யுண்டாக்கி ஊட்டி
வளர்க்கும், வேளாண்மைக்குடிச் சிறப்புற்றுப் பசு முதலியன நன்கு
வளர்ச்சியுறுவது கொங்குமண்டலம் என்பதாம்.

வேளான்மாக்கள் எந்தெந்த பெயர் கொண்டு விளங்கினர் என்பதைக் கீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன:

புலிக்கொடி கயற்கொடி பொருவிற் கொடியுடை


வேந்தர் நாட்டுறை வேளாண் மாக்கள்


சோழிய ரென்றும் பாண்டிய ரென்றுங்


கொங்கரென் றும்பெயர் கொண்டன ரவருள்

முன்னமுரைத்த முத்தமிழ் வேந்தரும்


எங்கள்மூ வருக்கு மியன்முடி சூட்டுதற்


குங்களை யமைத்தன முயர்ந்து கொள்வீரெனக்


கொண்டு மகிழ்ந் தனையர் கோத்தன்மையரே

                                      (நீதிநூற் சிறப்புப்பாயிரம் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை)

இது வரை கொங்குமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களையும் அதில் கூறப்பட்டுள்ள சரிதங்களையும் விளக்கமாக இந்தத் தொடரில் பார்த்தோம்.

www.tamilandvedas.com -இல் கொங்குமண்டல சதகத்தில் உள்ள பாடல்களும் விளக்கங்களும் கட்டுரையாக வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவற்றை  www.pustaka.co.in நிறுவனம்

இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது.

மூன்றாம் பாகம் விரைவில் வெளி வரும்.

அன்பர்கள் இந்த மூன்று பாகங்களையும் படித்தால் கொங்கு மண்டலப் பெருமை பற்றி நன்கு அறிந்தவர்களாவோம்.

இந்த நூலின் சிறப்பைப் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை.

வெறும் கட்டுக்கதையாகவோ, புனைந்து புகழ் ஏற்றியோ  கொங்குமண்டலத்தின் பெருமை இதில் நிறுவப்படவில்லை.

அனைத்து சரிதங்களும் ஆதாரபூர்வமானவை; அற்புதமானவை.

சரிதங்களில் கூறப்பட்டுள்ள பரம்பரையினர் இன்றும் அதே நல்ல குணங்களோடு கொங்குமண்டலத்தில் வாழ்ந்து வருவது கண்கூடு.

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்’ என்ற பழைய காலத்துப் பழமொழி இன்றளவும் உயிர்த்துடிப்போடு இலங்கும் படி கொங்கு மண்டல மக்கள் வாழ்ந்து வருவது அற்புதமானது.

இந்த நூலை கொங்குமண்டலம் மட்டுமல்லாது தமிழ் தெரிந்த அனைவரும் படித்து மகிழலாம்.

 நூலுக்கு இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

***

Leave a comment

Leave a comment