வைணவ திருச்செங்குன்றூர், திருப்புலியூர் கோவில்கள் -21 (Post.12,790)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,790

Date uploaded in London – –  –  2 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 21

PICTURES ARE TAKEN  FROM WEBSITES; THANKS FOR UR GREAT PICTURES.

கோவில் எண்கள்- 20, 21

திருப்புலியூர்,  திருச்செங்குன்றூர் கோவில்கள் 

மலை நாட்டு 13 விஷ்ணு தலங்களில் திருப்புலியூரும் திருச்செங்குன்றூரும் பாடல் பெற்ற (மங்களாசாசனம் செய்த) தலங்கள் ஆகும்.

108 வைணவ தலங்களில் ஒன்று

செங்கன்னூர்தான்  திருச்செங்குன்றூர் என்ற கருத்தும் உள்ளது. ஆயினும் வைணவ நூல்களில் காணப்படும் விஷயங்கள் பெருமாளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன; கண்ணகியோ பகவதியோ, சிவனோ அங்கு பேசப்படுவதில்லை.

திருவல்லாவிலிருந்து 10 கிலோ மீட்டர் .

திருச்செங்குன்றூர்  சிறப்புகள்

திருச் சிற்றாறு என்ற பெயரும் உண்டு .

மூலவர் – இமையவரப்பன், நின்ற திருக்கோலம்,மேற்கே திருமுக மண்டலம்

தாயார்- செங்கமலவல்லி

தீர்த்தம் – சங்க தீர்த்தம் , திருச் சிற்றாறு

விமானம் – ஜகஜ்ஜோதி விமானம்

ப்ரத்தியட்சம் ஆனது – ருத்த்ரன்/ சிவன் முன்னால் .

நான்கு அடி உயர பெருமாளின் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், தாமரை உளது; ஒரு கையில் ஒன்றும் இல்லை.

திருவோணம், வைகுண்ட ஏகாதசி ஆகியன முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன .

கேரள பாணியில் அமைந்த கோவில் இது.

கோவிலின் பிற சந்நிதிகளில் சாஸ்தா, நாகர், யக்ஷி, பகவதி ஆகியோரை தரிசிக்கலாம்

கோவிலில் பிற்கால சேர மன்னர் கல்வெட்டு உளது

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய 108 திருப்பதி அந்தாதியிலும் இந்த ஸ்தலம் இடம்பெறுகிறது .

கோவிலின் தோற்றம்

இதை தர்மபுத்திரர் பிரபலப்படுத்தியதாக ஐதீகம் . தருமன், மஹாபாரத யுத்தத்தில் , ஒரு பொய் சொன்னார்; கிருஷ்ணன் சொன்னபடி, அஸ்வத்தாமா ஹதஹ என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, குஞ்சரஹ (யானை) என்பதை தாழ்ந்த குரலில் சொன்னார். உண்மையில் அஸ்வத்தாமா என்ற பெயர் யானைக்கும் உண்டு; துரோணர் மகனுக்கும் அதே பெயர்; மகன் மீது பேரன்பு கொண்ட துரோணருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு வில்லைக் கீழே போட்டார் ; தர்மன், அந்த பிராமணனைக் கொன்றார். இது தர்மரின் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆகையால் வனவாச காலத்தில் இங்கு வந்து ஆலயத்துக்கு திருப்பணி செய்து , நதியில் குளித்து பூஜைகளையும் செய்தார் என்பது நம்பிக்கை.

பெருமாளை  தேவாதி தேவன் என்பர்; அதாவது கண் இமைக்காத தேவர்களுக்கு இறைவன் என்பதால் இமையவர் அப்பன் என்று பெருமாளுக்குத் திருநாமம்.

நம்மாழ்வார் பாடிய கோவில் என்பதால் இது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்று விளங்கியதை அறிய முடிகிறது

கேரளத்தில் செங்கன்னூரிலும் அருகிலும் நிறைய புகழ்பெற்ற கோவில்கள் இருப்பதால் அது புண்யபூமி என்பதை விளக்கத் தேவை இல்லை .

நம்மாழ்வார் பாடிய பாசுரத்திலிருந்து சில பாடல்கள்

3596.  

வார்கடா அருவி யானை மாமலையின்*  மருப்புஇணைக் குவடுஇறுத்துஉருட்டி*

ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து*  அரங்கின்  மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்*

போர்கடா அரசர் புறக்கிட*  மாடம்மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த*

சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில்*   திருச்சிற்றாறு எங்கள் செல்சார்வே 

3597.  

எங்கள் செல்சார்வு யாமுடைஅமுதம்*   இமையவர் அப்பன் என்அப்பன்*

பொங்குமூவுலகும் படைத்துஅளித்துஅழிக்கும்*   பொருந்துமூவுருவன் எம்அருவன்*

செங்கயல் உகளும் தேம்பணைபுடைசூழ்*   திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு

அங்கு அமர்கின்ற*  ஆதியான் அல்லால்*   யாவர்மற்றுஎன்அமர் துணையே? 

3605.  

அமர்ந்த நாதனை அவர்அவர்ஆகி*  அவர்க்குஅருள் அருளும் அம்மானை*

அமர்ந்ததண்பழனத் திருச்செங்குன்றூரில்*  திருச்சிற்றாற்றங்கரையானை*

அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள்*   தம்பதி அவனிதேவர் வாழ்வு*

அமர்ந்தமாயோனை முக்கண்அம்மானை*   நான்முகனை அமர்ந்தேனே.

XXXX

திருப்புலியூர்

குட்ட நாட்டில் உள்ள தலம்

செங்கன்னூரிலிருந்து 5 கிலோமீட்டர்.

108 வைணவ தலங்களில் ஒன்று

நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் பாடிப்பரவிய (மங்களாசாசனம் செய்த) கோவில் இது.

மூலவர் – மாயப்பிரான் , நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய கர்ப்பக்கிரகம்

தாயார் – பொற்கொடி  நாச்சியார் (ஸ்வர்ணலதா என்பதன் அருமையான தமிழ் மொழிபெயர்ப்பு)

தீர்த்தம் – பூஞ்சுனை தீர்த்தம், ப்ராக்ஞா சரஸ்

விமானம் – புருஷோத்தம விமானம்

பிரத்தியட்ச மானது – சப்த ரிஷிகள் முன்னால்

கோவிலின் வரலாறு

கேரளத்தில் உள்ள ஐந்து தலங்கள் பஞ்ச (5) பாண்டவர்களால்  திருப்பணி செய்யப்பட்டதை அறிகிறோம். அவ்வகையில் இது பீம சேனனால் திருப்பணி செய்யப்பட இடம் ஆகும்.

சிபி என்ற மன்னனின் மகன் பெயரை விருஷாதர்பி.அவன் அரசா ண்டபோது  பஞ்சம் ஏற்பட்டது அப்போது அங்கு வந்த சப்த ரிஷிகளுக்கு அவன் தானம் செய்ய வந்த போது அவர்கள் அதை ஏற்க மறுத்தனர். கோணல் புத்திகொண்ட மந்திரிகள் , பழங்களுக்குள் தங்க காசுகளை வைத்து ரிஷிகளிடம் கொடுக்க, அதை ரிஷிகள் ஞான திருஷ்டியால் அறிந்தனர். அவர்கள் அதை ஏற்கவில்லை.

பின்னர் மன்னன் ஒரு யாகம் செய்து க்ருத்யை என்ற மாயப்பெண்ணை உண்டாக்கி முனிவர்களை அழிக்க ஏவினான். அவர்களை இந்திரன் புலி உருவத்தில் வந்து  வீழ்த்தினான் . அப்போது 7  ரிஷிகளும் இறைவனைப் பாடித் துதித்தனர்  நாராயணனும் மாயப்பிரானாக வந்து காட்சி கொடுத்தார்.

xxxx

மங்களா சாசனம் – நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்

3651.  

கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்*

திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*

திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்*

அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)

3661.  

நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்*  நாயகன் தன்அடிமை*

நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன் சொல்*

நேர்பட்ட தமிழ்மாலை*  ஆயிரத்துள் இவை பத்தும்

நேர்பட்டார்*  அவர் நேர்பட்டார்*  நெடுமாற்கு அடிமை செய்யவே.   (2)

—சுபம்—

TAGS -கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 21திருப்புலியூர் திருச்செங்குன்றூர்  , கோவில்கள் , தர்மன், பீமன், திருப்பணி

Leave a comment

Leave a comment