
Post No. 12,818
Date uploaded in London – – 10 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 29
கோவில் எண்–30 திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில்
மஹாத்மா காந்தி மஹா கிண்டல் பேர்வழி; ஜோக் JOKE அடிப்பதில் மன்னன் ; வைக்கம் புரட்சி விழாவில் கலந்துகொள்ள திருவாங்கூர் மன்னரும் சத்தியாகிரக வீரர்களும் காந்திஜியை அழைத்தனர் ; அதில் ஒருவர் ஹரிஜன தலைவர். காந்திஜியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் ; காந்திஜி, எங்கள் ஹரிஜன பாய்ஸ்/ பையன்கள் ஹாஸ்டலுக்கு இரண்டு பசுமாடுகளை குஜராத் மாநிலத்திலிருந்து அனுப்புங்களேன் என்றார். பொக்கைவாயில் நமட்டுச் சிரிப்பு நெளிய காந்திஜி சொன்னார்; ஓ கே , பணத்தைக் கொடு ;
ஹரிஜன தலைவர் சொன்னார்- நல்லாப் போச்சு ; பணத்துக்கு நான் எங்க போவேன்?
பொக்கை வாய் அதிரடிச் சிரிப்புடன் சொன்னது- திருவனந்தபுரம் கோவிலிலிருந்து திருடிக்கொண்டுவா.
இன்று காலை என்னை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, சுற்றிக் காட்டினார்கள்; எங்கு பார்த்தாலும் தங்கக் குடங்கள் !!
இது 1937-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த சம்பாஷணை ; வெளியில் இருந்த தங்கக் குடங்களைத்தான் காந்தி பார்த்தார்; அவை நித்திய பூஜையில் உள்ளவை; திறக்கப்படாத அறைகளைத் திறந்தவுடன் அம்புலிமாமா கதைகளைத் தோற்கடிக்கும்படி ரத்தினக் குவியல், பழங் காசுக் குவியல்; தங்க நகைகள் குவியல் தங்கப் பாத்திரக் குவியல் ; இந்தப் பெருமாள் பெத்த பெருமாள் ; திருப்பதி பாலாஜி கோவிலைச் சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு பணக்காரர் ; ஆனால் பொக்கிஷத்தின் , பாதுகாவலர்களான கேரள மன்னர் வம்சத்தினர், கோர்ட்டில் வாதாடுகையில், ரகசியம் காக்க வேண்டும் என்று கோரிய பின்னர் ,சுப்ரீம் கோர்ட்டே வெளி உலகுக்குச் சொல்ல வேண்டாம். கணக்கு மட்டும் எழுதி வையுங்கள் என்று சொல்லிவிட்டது
உலகிலேயே அதிக வருவாய் உள்ள கோவில் திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவில்; உலகிலேயே அதிக பொக்கிஷமுள்ள கோவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் .
கோவிலின் பொக்கிஷ, புதையல் கதைகளை பின்னர் பார்ப்போம்; முதலில் பெருமாளை தரிசனம் செய்வோம்
கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம் ;நாட்டின் பெரிய நகரங்களிலிருந்து விமானமும் ரயிலும் செல்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து செல்லுவோர் கன்யாகுமாரியிலிருந்து தேசீய நெடுஞ்சாலையில் செல்லலாம் .

மூலவர்- அனந்த பத்மநாபன் அநந்த சயனம், புஜங்க சயனம், கிழக்கு நோக்கிய சந்நிதி
தாயார் – ஹரி லக்ஷ்மி
தீர்த்தம் – மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்
விமானம் ஹேமகூட விமானம்
பிரத்தியட்சம் — இந்திரன், சந்திரன், ஏகாதச ருத்திர்கள் முன்னிலையில் தோன்றி காட்சி அளித்தார்
சிறப்பு அம்சங்கள்
பெருமாளின் உயரம், நீளம் மிகப் பெரியது ; ஆகையால் மூன்று வாசல்களின் வழியாக தலை, உடல், திருவடிகளை சேவிக்க வேண்டும் .
சிலையின் நீளம் 18 அடிகள்; பெருமாளின் வலது கைக்கு கீழே சாளக்ராம கல்லில் ஆன சிவலிங்கம் இருக்கும்; பெருமாளின் மத்தியப் பகுதியில் மூன்று அபிஷேக மூர்த்திகளைக் காணலாம். இவை பூதேவி ஸ்ரீ தேவிகள் ஆவர்
தென்புற பிரகாரத்தில் யோக நரசிம்மனும்,சந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் , சந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகிறார்கள் ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணை உருகுவதில்லை; எவ்வளவு ஆனாலும் கெடுவதில்லை.
லட்சுமி வராகர் கோவிலும்ஸ்ரீ நிவாசர் கோவிலும் தெற்குப்பக்கத்தில் இருக்கின்றன
நம்மாழ்வார் பாடிய திருத்தலம் — மங்களாசாசனம் 3678-3688 (திவ்வியப் பிரபந்தம்)
சுவையான கதைகள்
கேரள மன்னர்கள் தங்களை பத்மநாப தாஸ= இறைவனின் அடிமை என்று அழைத்துக் கொள்ளுவார்கள் ; திருவாங்கூர் மஹாராஜா அவரது ஆட்சி எல்லைக்கு வெளியே போகும்போது இந்தக் கோவிலுக்கு வந்து விடை பெற்றுக்கொள்ளுவார் ; தனது சாம்ராஜ்யத்துக்த் திரும்பி வந்தபின்னர் கோவிலுக்கு வந்து பெருமாளிடம் ஆஜர்= உள்ளேன் ஐயா சொல்லுவார்.; இதை காந்திஜியே திருவனந்தபுரம் சொற்பொழிவில் குறிப்பிடுகிறார் .
பிராமணர்களை வாழ்வித்த பெருமாள்
அந்தக்காலத்தில் அனாதைகள், விதவைகள், போக்கற்ற பிராமணர்கள்; சோம்பேறிப் பார்ப்பான்கள் ஆகியோர் பிழைப்புக்கு வழிதேடி திருவனந்தபுரத்துக்கு வந்துவிடுவார்கள்; ஏனெனில் பிராமணர்களுக்கு கோவில் ஊட்டுப் புரா வில் இருவேளை போஜனம் இலவசம்; விள க்கடியில் படித்து, கோவில் உணவினை உண்டு பெரிய நிலைக்கு வந்த பார்ப்பனர்களும் உண்டு; சோம்பேறிகளாகி சமுதாயத்துக்கு சுமையான பார்ப்பனர்களும் உண்டு; திருவாங்கூர் மகாராஜாக்கள் இவ்வாறு பல ஊட்டுப் புராக்களை மாநிலம் முழுதும் அமைத்தனர் .
நல்லார் ஒருவர் உளரேல்
இந்த அன்னதானங்கள், சோம்பேறிகளை உருவாக்காதா என்ற கேள்விகளை எழுப்பியோருக்கு காஞ்சி பரமாசார்யார் பதில் சொல்லி இருக்கிறார். அப்படி அன்னதானம் சாப்பிடுவோரில் பல நல்லவர்கள் இருப்பார்கள்; அவர்கள் வாழ்த்தும் வாழ்த்து எல்லோருக்கும் க்ஷேமத்தைத் தரும் என்று; தமிழ் கவிஞர்களும் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பாடியது காஞ்சிப் பெரியவர் சொன்னதை உறுதி செய்கிறது .
மலையாள புலவர்கள் இந்த பிராமணர்களைக் கிண்டல் செய்து கவி பாடி இருக்கிறார்கள் குஞ்சசன் நம்பியார் என்ற கவிஞர் ஒவ்வொரு ஜாதி பற்றி விமர்சித்தும் கவி பாடினார் ; சாப்பாட்டு ராம பிராமணர்களை கொஞ்சசம் ஸ்ட்ராங் strongly ஆகவே வசை பாடி விட்டார்
இரண்டு கூடை பப்படத்தை அரைக்கும் வாய்
இரண்டு கூடை வாழைப்பழத்தை கலக்கும் வாய்
அவ்வாறு கலந்து, நல்ல நாட்டு சிமெண்ட் போல ஆக்கும் அது ;
இயன்றதை எல்லாம் உள்ளே தள்ளும்
இயலாதவற்றை இலையில் விடும் ;
அவர் விழுங்கும் வேகம் வியப்புண்டாக்கும் ,
பார்ப்போர் விழிகளை வெளியே தள்ளும் .
இதுபோதாது என்று 56 நாட்களுக்கு பிராமணர்களுக்கு விருந்து படைக்கும் வைபவமும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்; அரசு செங்கோல் தழைக்க , செழிக்க எல்லா நம்பூதிரி பிராமணர்களும் இந்தக் கோவிலுக்கு வந்து ஜபம் செய்யும் வைபவம் அது
மேலும் பல கதைகளை தொடர்ந்து காண்போம் .
—சுபம்—
உலகிலேயே , பணக்கார பெருமாள் கோவில் ,
புகழ்பெற்ற கேரள, கோவில்கள், PART 29, அனந்த பத்மநாப சுவாமி கோவில்