அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை! (Post No.12,831)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,831

Date uploaded in London –  –  14 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தேவாரச் செல்வம்

அப்பர் கூறும் நரிவிருத்தக் கதை!

ச.நாகராஜன்

அப்பர் பிரான் சிறந்த உவமைகள் மூலமும் கதைகள் மூலமும் ஆன்மீக உயர் சிந்தனைகளைத் தருபவர்.

ஐந்தாம் திருமுறையில் அவர் பாடிய ஆதிபுராணத்

திருக்குறுந்தொகையில் ‘வேதநாயகன்’ என்று தொடங்கும் திருப்பதிகத்தில் ஏழாவது பாடலாக அமைகிறது இந்தப் பாடல்:

எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன


துருவ ருக்கம தாவ துணர்கிலார்


அரிய யற்கரி யானை அயர்த்துப்போய்


நரிவி ருத்தம தாகுவர் நாடரே

எரி என்பது வேள்வித் தீ. இறைவனது அட்டமூர்த்த வர்க்கங்களில் தீயும் ஒன்று.

வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள். அந்த அக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணராதவர்கள் அல்லது உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளான சிவபிரானைக் காண்பதற்கு அயர்த்து நரி விருத்தம் ஆகுவர்.

அது என்ன நரிவிருத்தம்?

 இதில் தான் அப்பர் ஒரு கதையையே விதைக்கிறார்.

கதையோ பழம் பெரும் கதை! 

காட்டில் வேடன் ஒருவன் யானையைக் கொல்ல ஒரு அம்பை எய்து விட்டு மற்றொரு அம்பை வில்லில் பூட்டிக் கொண்டிருந்தான். அந்த வேளையில் பாம்பு ஒன்று அவனைக் கடித்தது. தன்னைக் கடித்த பாம்பை அவன் வாளால் வெட்டிக் கொன்றான். அதே நேரத்தில் பாம்பு விஷம் ஏற அவனும் மூர்ச்சித்து கீழே விழுந்து இறந்தான். ஒரே நேரத்தில் யானையும் பாம்பும் இறந்தன. அதே நேரத்தில் வேடனும் இறந்தான்.

நரி ஒன்று அவ்வழியே வந்தது. நடந்தைப் பார்த்த நரிக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் இறந்து கிடந்த யானை, வேடன்,பாம்பு!

யானையின் உடல் ஆறு மாதத்திற்கு உணவாகும்.

வேடனின் உடல் ஒரு வாரத்திற்கு உணவாகும்.

பாம்பு ஒரு நாளைக்கு உணவாகும்.

இப்படி எண்ணிய நரி,  இப்போதைய பசிக்கு இந்த வேடனின் கையில் உள்ள வில்லில் உள்ள நரம்பாலாகிய நாண் போதும்; அதைக் கடித்துச் சுவைத்து உண்ணலாம் என்ற எண்ணத்துடன் வில்லில் பூட்டியிருந்த நாணை ஆவலோடு கடித்தது. உடனே வில்லில் இழுத்துக் கட்டப்பட்டிருந்த நாண் அறுந்து வில் திடீரென நிமிர்ந்த வேகத்தில் நரியின் வாயைக் கிழித்தது. நரியும் இறந்தது. அதன் எண்ணக் கோட்டைகள் தகர்ந்தன.

ஒவ்வொரு மனிதனும் மனதில் பல கோட்டைகள் கட்டுகிறான். ஒன்று நினைக்க ஒன்றாக முடிகிறது.

பழங்காலத்திலிருந்து இந்தக் கதை வழங்கி வருகிறது.

இந்தக் கதையை அப்பர் இங்கு நன்கு கூறி ஒரு அரிய உண்மையை விளக்குகிறார்.

இதே கதையை திருத்தக்கதேவரும் ஒரு விருத்தப் பாடலால் பின்னால் பாடியுள்ளார்.

திருவதிகை வீரட்டானத்தில் இன்னொரு பாடலிலும் நரியை அவர் உவமையாகக் கூறுகிறார்.

 நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த

தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார்
வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே

நரி ஒன்று வாயில் கவ்விய ஊனுடன் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு வரால் மீனைக் கண்டது. உடனே பேராசை கொண்டது. அதைக் கவ்வ விரும்பிய அது தனது வாயில் இருந்த ஊனையும் இழந்தது. அது போல மக்கள் கிட்டாத பொருள் செல்வத்திற்கு ஆசைப்பட்டு எளிதில் கிடைக்காத சிவச் செல்வத்தை – சிவ பக்தியை இழந்து விடுகின்றனர். சிவபிரான் அத்தகையோருக்கும்  அருள் புரிவார்.

 எரியினாரிரையார் என்ற பாடலில் ‘நரியினார் பரியா மகிழ்கின்றதோர் பெரியனார்’ என்று நரியினைப் பரியாக்கி மகிழும் பெரியவர் என்று மாணிக்கவாசகரைக் கூறுகிறார் அவர். (திருவீழிமலை – கரைந்து எனத் தொடங்கும் பதிகம்)

நரி பிரியாததோர் சுடலையானை என்று நரிகள் சூழ்ந்திருக்கும் சுடுகாட்டில் இருப்பவன் என்று சிவபிரானை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். (தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகையில் விடலையானை எனத் தொடங்கும் பாடலில் காண்க)

 நரியை வைத்து அப்பர் நமக்குக் கூறும் கதையும் உவமையும் சுவை படைத்தவை என்பதில் ஐயமில்லை.

உணர்வோம்; உய்வோம்!

***

Leave a comment

1 Comment

  1. Athmanathan Seetharaman's avatar

    Is Manikavachakar the first of the four Acharyas ? From the Appar Devaram it appears so!

Leave a comment