கொடுங்கல்லூர் பகவதி கோவில்/ கண்ணகி கோவில் – 33 (Post No.12,832)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,832

Date uploaded in London – –   14 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 33

கோவில் எண்–32 

32.கொடுங்கல்லூர் பகவதி கோவில்

கொடுங்கல்லூர் எங்கே இருக்கிறது?

திருச்சூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. மத்திய கேரளம் என்று சொல்லவேண்டும். கேரளத்தின் தென் கோடியில் திருவனந்தபுரமும் வட கோடியில்  காஸர்கோடும் இருக்கின்றன. மத்தியில் திருச்சூர் இருக்கிறது. கொச்சியிலிருந்து 50.கி.மீ. ஒரு தீவின் நடுவில் 7 ஏக்கர் பரப்பில் கோவில் வியாபித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

கொடுங்கல்லூர் பகவதி என்றே அழைக்கப்பட்டாலும் இதையும் திருச்செ

ங்குன்றூர் போல கண்ணகி கோவில் என்று சொல்லுவார்கள்; ஆயினும் இதற்கு ஆதாரம் ஏதுமில்லை .

இங்கு முதலில் இருந்தது சிவன் கோவில்; பின்னர் பகவதி சிலையும் வந்தது என்பார்கள்.

இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் காமன் பண்டிகை போலவே ஆபாச பாடல்களுடன் நடந்து வந்த பரணி விழாவில் இப்போது ஆபாச அம்சங்கள்  தடை செய்யப்பட்டுவிட்டன .

அதே போல ஏராளமான கோழிகளைப் பலியிட்டு வந்ததும் தடுக்கப்பட்டுவிட்டன.

கோவில் வரலாறு

சிவன் கோவில் உள்ள திருவஞ்சிக்குளம் அருகில் உள்ளது; இதைத்தான் கிரேக்கர்கள் முசிரிஸ் என்று அழைத்த னராம் . ஆங்கிலத்தில் கிராங்கனூர் Cranganore என்றே எழுதுவார்கள். ஆயினும் சேரர் தலைநகர் வஞ்சி என்பது கரூர் என்று பேரறிஞர் டாக்டர்  இரா. நாகசாமி போன்றோர் எழுதியதையும் மறந்துவிடக்கூடாது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் முசிரிஸ், வஞ்சி, கொடுங்கல்லூர் , திருச்செங்குன்றூர் , கண்ணகி கோவில் என்பதெல்லாம் முடிவில்லா வாதப்  பிரதிவாதங்களில் சிக்கித்  தவி க்கின்றன.

கொடுங்கல்லூர் பகவதி தோற்றம்

இங்கு சிவன் சந்நிதி கிழக்கு நோக்கியும் காளி ரூபத்திலுள்ள பகவதி வடக்கு நோக்கியும் உள்ளன. கேரள கோவில்களில் பக்தர்கள் அமரும் மேடையும் மண்டபமும் சிவனுக்கு முன்னால் இருப்பதால் அதுதான் முதல் கோவில் என்பது ஒரு கருத்து. மேலும் இதை உறுதி செய்யும் வகையில் முதல் அபிஷேகமும் நைவேத்தியமும் சிவ பெருமானுக்கே செய்கின்றனர்.

குரம்ப காவு என்பது கோவிலின் வட்டாரப் பெயர்.

தேவியின் உயரம் 6 அடி ; அவளுக்கு 8 கரங்கள்.இந்த உருவம் பலா மரத்தால் செய்யப்பட்டது; எட்டு  கரங்களிலும் ஆயுதங்கள்; உடல் முழுதும் தங்க, இரத்தின நகைகள் தேவியை அலங்கரிக்கின்றன.அமர்ந்த நிலையில் உள்ள தேவியின் உருவம் அச்சத்தையும் பக்தியையும் ஒருங்கே தோற்றுவிக்கும்.

ஒரு கதை

தாருகன் என்ற அசுரனையும் அவனது கும்பலையும் தேவி அழித்தாள் ;

இது பற்றிய கதை பின்வருமாறு

அசுர அணியில் தனமதி , தாருமதி என்ற இரண்டு பெண்மணிகள் மட்டும் எஞ்சினர்; அவர்கள் வம்சம் தழைக்க பிரம்மாவின் அருளை வேண்டவே அவர் கயிலாயம்  செல்லும்படி கட்டளையிட்டார் இரு பெண்களும் சிவ லோகத்தில் இருந்த இருவரை மணந்து காரகன் , தாருகன் என்ற இருவரைப் பெற்றனர். அவர்களில் தாருகன் பெண்களைத் தவிர வேறு எவரும் கொல்ல முடியாத வரத்தை வாங்கிக்கொண்டான்.

தாருகன் ஆணவம் பெருகவே, அவனை ஒடுக்க 6 தேவிகள் படைக்கப்பட்டனர் . அவர்களுடன் சிவன் நெற்றிக் கண்ணில் உதித்த காளி / பகவதியும் சேர்ந்து தாருகனை அழித்தார்கள்.  தற்போது கர்ப்பகிரகம் அருகில் சப்த மாத்ரிகா உருவங்கள் 4 கைகளுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள் .

ரகசிய அறை

இந்தக் கோவிலுக்கு சிறப்பூட்டும்  இன்னும் ஒரு அம்சம் ரகசிய  அறை  SECRET CHAMBER ஆகும். இங்கு ஒரு அறையும் அதன் கீழ் சுரங்கமும் உள்ளன. அதைக் கருங்கல் சுவர், கூரை மூலம் பாதுகாக்கின்றனர் ; சுரங்கப் பாதையின் முடிவு 100 கஜ தூரத்தில் முடிவடைகிறது அந்த இடத்தையும் கருங்கல் பலகைகளால் மூடியுள்ளனர். யானைகள் அணிவகுப்பு வரும்போதும் கூட இதைத்தாண்டிச் செல்லாமல் திரும்பிவிடும். நிலத்தடி அறைக்கு சேதம் ஏற்படாமலிருக்க இப்படிச் செய்கிறார்கள் இது இறந்தோர் புதைக்கப்பட்ட பெருங் கற்காலச் சின்னம் என்பது சிலர் கருத்து . உள்ளே மந்திர சக்கரங்கள் இருப்பதாக மேலும் சிலர் கூறுவார்கள் .

கோவிலைக் காக்கும் க்ஷேத்ர பாலர் உருவம் 12 அடி உயரம் கொண்டது இது தவிர நோய் தீர்க்கும் வைசூரிமாலை சிலையும் இருக்கிறது; ஒவ்வொரு சிலை பற்றியும் கதைகள் இருக்கின்றன.

XXXX

இரண்டு திருவிழாக்கள்

தால பொலி , பரணி ஆகிய இரண்டு திருவிழாக்களும் மிகவும் பிரபலமானவை .

தால பொலி திருவிழா மகர சங்கராந்தி அன்று துவங்கி  4 நாட்களுக்கு நடக்கும் ஜனவரியில் நடக்கும் இந்த விழா தமிழ் நாட்டின் பொங்கல் பண்டிகை போன்றதே ; போகிப் பண்டிகையில் இந்துக்கள் பழையானவற்றை  எரிப்பது போல எரிப்பார்கள்;  புத்தரிசியை இறைவனுக்குப்  படைப்பார்கள்

மகர சங்கராந்தி அன்று, கொங்கணி பேசும் குடுமி ஜாதியினர் ஒன்று கூடி  வாண வேடிக்கைகளுடன் 4 நாள் விழாவினைத் தொடங்குவர். பின்னர் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் யானை ஊரவலங்கள் நடக்கும்

அரை கி.மீ தொலைவிலுள்ள குரும்பயம்மா கோவிலில் துவங்கும் ஊர்வலத்தில் தாலம் (தட்டு) ஏந்தி பெண்கள் வருவர். ஒரு யானையின் மீது குடை ஏந்திய தாலம் /தட்டு இருக்கும் .

திகைப்பூட்டும் பரணி விழா

பிப்ரவரி- மார்ச்சில் நடக்கும் பரணி திருவிழா மூலமாகத்தான் இந்தக் கோவில் பிரசித்தமானது. இதே காலத்தில் வடக்கில் ஹோலி பண்டிகை, தமிழ் நாட்டில் காமன் பண்டிகைகள் நடக்கின்றன ; தமிழ் நாட்டில் காமன் பண்டிகையின்போது காம சம்பந்தமான  நடனங்கள் ஆடல், பாடல்கள் நடக்கும்; இறுதியில் சிவன் எல்லோருடைய காம வெறியை அடக்க மன்மதனை எரிப்பார் .. அது போல இங்கும் பரணி விழாவில் பலர் குடிபோதையில் கும்மாளம் அடித்து காமக் காட்சிகளை அரங்கேற்றுவர் ; இப்பொழுது இந்துக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு இவைகளை அடக்கிவிட்டனர்; அதே போல எண்ணற்ற கோழிகளை பலியிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டன  இது சம்பந்தமான சடங்குகள் மிகவும் விரிவானவை. பலிகளுக்கு மறுநாள் கோவில் சுத்தம் செய்யப்பட்டவுடன் நம்பூதிரிகள் மீண்டும் கோவிலுக்குள் வருவார்கள்.

பரணி விழாவில்  பழங்குடி  மக்களும் கலந்துகொண்டு  மஞ்சள் உடை அணிந்து மஞ்சள் பொடி பூசி ஊர்வலமாகச் செல்லுவார்கள் . இடுப்பில் மணிகள் கட்டிய பெரிய பெல்ட்டுகள் இருக்கும். கையில் வாளேந்தி தலை முடியை பறக்கவிட்டு ஆக்ரோஷமாக வருவார்கள்.; வெளிச்சப்பாடு என்னும்  ஆருடங்களை  சிலர் மொழிவர் ; தேவியின் மீது தங்களுக்குள்ள அசைக்க முடியாத பக்தியைக் காட்ட, பலரும் வாளால் நெற்றியில் காயம் ஏற்படுத்தி ரத்தத்தை தேவிக்கு அர்ப்பணிப்பார்கள்.லட்சக் கணக்கானோர் விழாக் காலங்களில்  இங்கே கூடுவர்; இந்தக் காட்சிகளைக் காண்போர் வியப்பிலும் பிரமிப்பிலும் திகைப்பிலும் மூழ்கிவிடுவார்கள்

–subham—

Tags- பரணி விழா, தாலப்பொலி , கொடுங்கல்லூர், பகவதி, கண்ணகி , கோவில்,

Leave a comment

1 Comment

  1. Raj Rajaraman's avatar

    Raj Rajaraman

     /  December 14, 2023

    Is this the same as ” Thiru VanchaikkaLam” where Sundara murthi Nayanar took of to Kailayam on Airavatham ?

Leave a comment