சாமியே! சபரி மலை சாஸ்தாவே ! சரணம் ஐயப்பா!! -34 (Post No.12,837)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,837

Date uploaded in London – –   15 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 34

கோவில் எண்–33

33.சபரிமலை சாஸ்தா / ஐயப்பன் கோவில்

சபரிமலை எங்கே இருக்கிறது?

கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது; செங்கன்னூர் ரயில் நிலயத்தில் இறங்கி பக்தர்கள் செல்வர். எருமேலியிலிருந்து காட்டு வழியாகச் சென்றால் 61 கி.மீ ; வண்டிப்பெரியாரிலிருந்து சென்றால் 13 கிமீ. சாலக்காயத்திலிருந்து 8 கி.மீ; தற்போது பம்பா நதி வரை சாலை வசதிகள் இருப்பதால் பலரும் அதுவரை சென்று பின்னர் மலையில் ஏறி ஐயப்பனை தரிசிக்கின்றார்கள் .

சிறப்பு அம்சங்கள்

கேரளத்தில் அதிகம் பேர் விஜயம் செய்யும் கோவில் இது ; ஆண்டுக்கு 2 கோடி பக்தர்கள் வருவதால் உலகிலேயே அதிகம் பக்தர்கள் வரும் பட்டியலில் இருக்கிறது.

ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் வரலாம்; ஆனால் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்ல முடியாது .

41 நாள் விரதம் அனுஷ்டித்து மாலை அணிந்து இரு முடி தாங்கி பக்தர்கள் செல்கிறார்கள்.

ஐயப்பன்  யார் ?

பெரிய தத்துவத்தை பாமர மக்களுக்குப் புரிய வைக்க வேடிக்கையாக கதை சொல்லுவார்கள்; விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துக்கொண்ட காலத்தில் சிவ பெருமான் அவளைக் காதலித்து பெற்ற பிள்ளை என்பது பாமர மக்கள் சொல்லும் கதை; ஆனால் காஞ்சி மஹா சுவாமிகள் போன்றோர் உண்மைப் பொருளை விளக்கியுள்ளனர் ; நாராயணனின் வசீகர கருணா சக்தியும் சிவனின் ஞான சக்தியும் இணைந்து ஏற்பட்ட தேஜோ மய ஒளியில் தோன்றியது ஹரி ஹர புத்ரன் ; அதாவது இரண்டு சக்திகளின் இணைப்பு .

மணிகண்டன் கதை

இன்னும் ஒரு கதையும் உண்டு ; பந்தள மகாராஜா பம்பா நதிக்கரைக்குச் சென்றபோது கழுத்தில் மணி கட்டப்பட்ட (மணிகண்டன் ) குழந்தையைக் கண்டு அரண்மனைக்குக் கொண்டுவந்தார் ; அதற்குப் பின்னர் மகாராணிக்கு ஒரு குழந்தை பிறந்தது; இருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர்.யாருக்கு அடுத்த பட்டம் சூட்டுவது என்ற பிரச்சனை வந்தபோது ராணி ஒரு தந்திரம் செய்தாள் ; தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் புலிப்பால் கொண்டு வந்தால் அதைச் சாப்பிட்டு நோயைத் தீர்க்க முடியும் என்றும் சொன்னாள் ; முதல் பிள்ளையான மணிகண்டன், கானகம் ஏகினார்; புலிப்பாலை எடுத்துக்கொண்டு புலி மீது சவாரி செய்து பந்தளத்தில் நுழைந்தார்; அவர்  தெய்வீக சக்தியை அறிந்த மக்களும் மன்னரும் என்றும்  அருள் பாலிக்க வேண்டியதால் நீலி மலையில் அமர்ந்து தவம் செய்தார்.

அந்தக் காலத்தில் உதயணன் என்ற மலைக்கள்ளன் ஒவ்வொரு ஊரையும் கொள்ளையடித்து மக்களை அச்சுறுத்தவே எல்லோரும் ஊர்தோறும் ஐயப்பனை — ஐயனாரை — ஆர்யனை — காவல் தெய்வமாக நிறுவினார்கள் . தர்ம சாஸ்தா என்பவர் தருமத்தை நிலைநாட்டி ,உதயணனை கொன்றுவிட்டு சபரிமலையில் சென்று மறைந்தார்;அந்த இடத்தில் தான் தற்போதைய கோவில் இருக்கிறது .

ஐயப்பன் என்னும் தர்ம சாஸ்தா புலி மீது வந்தபோது இருமுடி தாங்கி வந்தார்; அதை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் தோளில் அல்லது தலையில் இரு முடி தாங்கிச் செல்கிறார்கள் ; ஒரு பக்கம் அய்யப்பன் மீது அபிஷேகம் செய்வதற்கு தேங்காயில் நெய்யும் மறு பக்க முடிச்சில்  வழிநடைக்குத் தேவையான உணவுப் பண்டங்களும் இருக்கும் .

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

அந்தக் காலத்தில் காட்டு வழியாக நடந்த வந்த பக்தர்கள் கோவிலுக்குச் செல்லுகையில் காலணி அணிய மாட்டார்கள்; ஆகையால் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்ததை ; சாமி சரணம், ஐயப்ப சரணம், சாமியே ஐயப்பா என்று ஆடியும் பாடியும் செல்லுவார்கள்.

18 படிகள்

தங்கத்தால் மூடப்பட்ட சாஸ்தா கோவிலை நெருங்கியவுடன் 41 நாள் விரதம் இருந்தோர் மட்டும் 18 படிகளில் ஏறி சந்நிதியை அடைவார்கள் . இந்த 18 படிகளுக்கும் தத்துவ விளக்கங்கள் உண்டு.

சுருக்கமாக சொல்ல  வேண்டுமானால், இறைவனை அடைய ஆத்மா செய்யும் பயணத்தை விளக்க வந்தது சபரிமலை யாத்திரை; அப்படி இறைவனை அடைய 41 நாள் விரத காலத்தில் எப்படி தூயவர்களாக இருந்தார்களோ அப்படி தினமும் இருக்க வேண்டும் ; இரு முடிகளில் ஒன்று பிராரப்த கர்மா ; அதாவது நாம் செய்த வினை; அதை அழித்தால் முன் முடியிலுள்ள தேங்காயை கழற்றி எறிவது போல  உடலையும் நீக்கிவிடலாம்..

XXXXX

பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய சொற்களின் பொருள்

ஆர்ய = பண்பாடு மிக்கவன்; அஜ்ஜ = பிராகிருத திரிபு= ஐயர் / ஐயன் = தமிழ் வடிவம் ;

அவனே எனது அப்பன்/ குரு = ஐயப்பன்

XXXX

 ஐயப்பனின் உருவம் 

அமர்ந்த நிலையில் ஐயப்பன் காட்சி  தருகிறார்  அவரது முழங் கால்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும் ; இரவில் சந்நிதியை மூடுகையில் ஹரிவராசனம் என்னும் தாலாட்டுப் பாடலைப் பாடுவார்கள் . இது சம்ஸ்க்ருத மொழியில் உள்ளது 

xxxxx

5 முக்கிய ஐயப்பன் கோவில்கள்

குளத்துப்புழையில் பாலன் வடிவம்

ஆரியங்காவில்  பிரம்மசாரி வடிவம்

அச்சன்கோவிலில் கிரஹஸ்த வடிவம் ; பூர்ணா, புஷ்கலா தேவியருடன்

சபரிமலையில் வானப் பிரஸ்த வடிவம்

பொன்னம்பல மேடு என்னும் காந்த மலையில் யோகி வடிவம்

XXXX

மகர ஜோதி

கார்த்திகை மாதம் விரதத்தை துவங்குவோர் மகர சங்கராந்தி அன்று மகர ஜோதியைத் தரிசித்துவிட்டு விரதத்தை முடிப்பர்; இப்போது கோடிக்கணக்கானோர் வருவதால், 41 நாள் முழுதும் தர்சனம் நடைபெறுகிறது.

மகர ஜோதி ஒரு காலத்தில் இயற்கையாக சூரியன் மறையும் போது ஏற்பட்டது; தற்போது  பழங்குடி மக்கள் தீ மூட்டி ஜோதியை உண்டாக்கி பழைய வழக்கத்தைக் காப்பாற்றி வருகின்றனர் .

Xxxx

மாளிகைபுரத்து அம்மன்

சபரிமலை ஐயப்பனின் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் மாளிகைபுரத்தம்மன் கோயிலுக்குச் சென்று பக்தர்கள் வணங்குவார்கள். 100 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மஞ்சள் மாதா என்பது இன்னும் ஒரு பெயர்..பந்தளம் அரச குடும்பத்தின் குல தெய்வம் ஆவார்.

கன்னி அய்யப்பன், குருசாமி

முதல் தடவை விரதம் இருந்து செல்லும் ஐயப்ப பக்தரை கன்னி ஐயாப்பன் என்பர் ; அதிக காலம் சபரிமலைக்குச் சென்றுவரும் முதிர்ந்த பக்தரை  குரு வாக ஈற்றுஞ் அவர் கையில் மாலை, ஆடைகளை வாங்கி அணிவர். குரு சாமி தனது அனுபவத்தாலும், பக்தி முதிர்ச்சியினாலும் கன்னி ஐயப்பனை வழிநடத்துவார் ; பொதுவாக அவர் ஒழுக்கம் உடையவராக இருப்பார் .

–SUBHAM—

TAGS- கன்னி அய்யப்பன், குருசாமி ,மாளிகைபுரத்து அம்மன் ,மகர ஜோதி ,

5 முக்கிய ஐயப்பன் கோவில்கள் ,18 படிகள் மணிகண்டன்,  ஐயப்பன் கதை , சபரிமலை, சாஸ்தா

Leave a comment

Leave a comment