மேலும் 3 ஐயப்பன் கோவில்கள் – 35 (Post No.12,841)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,841

Date uploaded in London – –   16 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 35

கோவில் எண்கள் –34, 35, 36

34.குளத்துப் புழை சாஸ்தா / ஐயப்பன் கோவில்

கேரளத்தில் குளத்துப் புழை , ஆரியங்காவு , அச்சன் கோவில் ஆகிய மூன்று ஐயப்பன் கோவில்களும் புகழ்மிக்கவை. நிறைய பக்தர்கள் சபரி மலைக்குச் செல்வதோடு அங்கும் சென்று சுவாமியை தரிசிக்கிறார்கள் ; ஐந்தாவது ஐயப்பன் கோவில், காந்த மலை என்ற இடத்தில் இருப்பதாகவும் அதை மனிதர்கள் அணுக முடியாதென்பதும் ஐதீகம் .

குளத்துப் புழை எங்கே இருக்கிறது?

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் குளத்துப் புழை உளது; தமிழ்நாட்டிலுள்ள செங்கோட்டையிலிருந்து 50 கிமீ. கொல்லத்திலிருந்து 64 கி.மீ

சிறப்பு அம்சங்கள்

குளத்துப் புழையில் ஐயப்பன் குழந்தை வடிவில் இருப்பதால் பால சாஸ்தா என்று சொல்லுவார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலின் நுழைவாயில் மிகச் சிறியதாக இருக்கும். கேரள பாணியில் கட்டப்பட்ட இக்கோவில் மரத்தினால் கட்டப்பட்டது .

அங்குள்ள சந்நிதிகள்- யட்சியம்மன், நாகர், கணபதி,  மாம்பழத்துறையம்மன், பூதத்தார் .

இந்தக் கோவிலின் ஒரு சிறப்பு அம்சம் குழந்தை வரம் கிடைப்பதாகும் ; குழந்தை வேண்டுவோர் இங்கு தொட்டில் கட்டி சுவாமியை வேண்டுகிறார்கள் .

எட்டு கற்களின் கதை

இந்த ஊரில் ஓடும் நதியின் பெயர் கல்லடை ஆறு . இந்த வட்டார அரசன் தனது சேவகர்களுடன் வந்து உணவு சமைக்க அடுப்பு அமைத்தான். மூன்று கற்களை வைத்து அடுப்பு அமைக்கும்போது ஒரு கல் சற்று பெரிதாக இருந்ததால் சேவகர்கள் அதை உடைத்தார்கள்; அது 8 துண்டுகளாக உடைந்தது ;அப்பொழுது ரத்தம் வெளிப்படவே மலையாள ஜோதிடமான பிரஸ்னம் போட்டுப் பார்த்தார்கள்; அது பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் கோவில் இடம் என்று அதில் தெரியவந்தது ; உடனே குழந்தை வடிவத்தில் ஐயப்பனை மன்னர் நிறுவினார் ; உடைபட்ட எட்டுக் கற்களும் கர்ப்பக்கிரகத்தில் உள்ளன

மச்ச கன்னி கதை

இங்குள்ள கல்லடை ஆற்றில் ஏராளமான மீன்கள் வளர்கின்றன ; அவைகளுக்கு பக்தர்கள் பொரி வாங்கிப் போடுகிறார்கள் ; இதன் பின்னுள்ள சுவையான கதை:–ஒரு மச்சகன்னி ஐயப்பன் மீது காதல் கொண்டு அவரை மணக்க விரும்பினாள் . அவர் மறுக்கவே இங்கு மீனாக இருக்கவாவது அருள்புரிய வேண்டும் என்றாள் ; அவ்வாறே மீனாக வளர்ந்தாள் . அதன் நினைவாக மீன்கள் போற்றப்படுகின்றன .

இவை எல்லாம் கட்டுக்கதை அல்ல; பக்தர்கள் இப்படி வேண்டி அதை அனுபவித்தது உண்டு என்பதை ஆழ்வார் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன

திருவேங்கட மலை சுனையில் மீனாக இருக்க குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார் ; அவர் சேரநாட்டு மன்னர் ; ஆயினும் திருப்பதி மலையில் நாரை, மீன், மலர் என்று பல பிறவிகளை வேண்டி பாடுகிறார். ஆகையால் மச்ச கன்னி கதையில் பசை உள்ளது

பெருமாள் திருமொழி 

ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*

வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*

தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*

மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே குலசேகர ஆழ்வார்

XXXX

35.ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

ஆரியங்காவு எங்கே இருக்கிறது?

கொல்லம் மாவட்ட த்தில் , தமிழ் நாட்டின் எல்லையில் உள்ளது; தென்காசியிலிருந்து 21 கி.மீ; புனலூரிலிருந்து 33 கி.மீ  தொலைவில் ஆரியங்காவு ஐயப்பன் கோவில் இருக்கிறது ; ஆர்யன் என்பது ஐயப்பனையும் காவு என்பது அதமைந்த தோப்பையும் குறிக்கும்

சிறப்பு அம்சங்கள்

கேரள பாணி கோவில் ஆனாலும் தமிழ்நாட்டுப் பாணியில் பூஜைகள் நடைபெறுகின்றன .மதுரை செளராஷ்டிர சமூகத்தினருடன் தொடர்புடைய கோவில்!

ஐயப்பன்  புஷ்கலை என்ற பெண்ணை மணந்த தோற்றத்தில் தரிசனம் தருகிறார். யானை மீதமர்ந்து காட்சி தரும் ஐயப்பன் அருகில் புஷ்கலா தேவி நிற்கிறாள். ஆரியங்காவு ஐயனே என்று பக்தர்கள் கோஷம் எழுப்புவர்

கோவிலில் உள்ள மூர்த்திகள் — பார்வதி, லிங்க வடிவில் சிவன், நடுவில் ஐயப்பன் ; பரசுராமர் ஸ்தாபித்ததாக ஐதீகம்.

இங்கு கருப்பா நதி ஓடுகிறது ; வலிய கேட்டுத்தன், கருப்பசாமி , கருப்பை அம்மா ஆகியோரும் கோவிலில் வழிபடப்படுகின்றனர்

சபரிமலை போலவே 18 படிகள் இருக்கின்றன .

கோவில் நிலமட்டத்திற்கும் கீழே அமைந்துக்ள்ளது;  நல்ல ஓவியங்கள் உள்ளன

xxxx

கோவில் பற்றிய கதை

திருவிதாங்க்க்கூர் அரச வம்சத்தினருக்கு ஆடை நெய்து தரும் பொறுப்பு மதுரை செளராஷ்டிர பட்டுநூல்காரர்களிடம் இருந்தது. பெரிய வணிகர், தன் மகள் புஷ்கலையை அழைத்துக்கொண்டு துணிமணிகளுடன் புறப்பட்டார். ஆரியங்காவு வந்தபோது யானை, புலி உலவும் காட்டு வழியாகச் செல்ல மகள் அஞ்சியதால் அர்ச்சகர் வீட்டில் தங்கவைத்துவிட்டுச் சென்றார்; திரும்பி வருகையில் அவரை யானை துரத்தவே ஓடினார் ; ஒரு வேடன் வந்து அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு தான் அணிந்த பட்டு வஸ்திரத்தை அளித்தார். அவன் அதை அணிந்தபோது  பேஷ்பேஷ்; மாப்பிள்ளை போல இருக்கிறாயே என்று வியந்தார்; அப்படியானால் உங்களுக்கு பெண் இருந்தால் எனக்கு  கல்யாணம் கட்டுங்களேன் என்றவுடன் புஷ்கலையிடம் அழைத்துச் சென்றார்; அவள் ஏற்கனவே கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு சேவை செய்ததால் , அவரைப்போலவே இருக்கவே அவரை மணந்தாள் ; உண்மையில் வேடனாக வந்தது ஐயப்பன்தான் என்பது ஐதீகம் ; இப்பொழுதும் மார்கழி மாதத்தில் திருமண விழா மதுரை செளராஷ்டிர சமூக சீர்செட்டுகளுடன் நடத்தப்படுகிறது .

திருமண வைபவங்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் செளராஷ்டிர சமூக முறைப்படி நடக்கும் .

xxxx

36 அச்சன் கோவில் ஐயப்பன் கோவில்

ஆரியங்காவில் ஐயனாக இருந்த  ஐயப்பன் அச்சன் கோவிலில் அரசனாக வீற்றிருப்பதால் பக்தர்கள் அச்சன் கோவில் அரசனே என்று கோஷம் எழுப்பி வழிபடுகிறார்கள் .

எங்கே இருக்கிறது ?

தமிழ்‌நாட்டின், செங்கோட்டையிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ; புனலூரிலிருந்து 50 கிமீ. ஆரியங்காவுக்கு அருகில் இருக்கும் கோவில் இது . 14 கி.மீ.

அச்சன்கோவில் ஆற்றின் கரையில் அமைந்த இந்தக்கோவிலையும் பரசுராமரே நிறுவினார்

சிறப்பு அம்சங்கள்

இங்கு பூர்ணாபுஷ்கலா ஆகிய இரண்டு மனைவியருடன் ஐயப்பன் கல்யாண கோலத்தில் கிரஹஸ்தனாக காட்சி தருகிறார்..

பகவதி, மாளிகைபுரத்தம்மா , துர்கா, நாக யக்ஷி , நாகராஜா, கணேசர், கார்த்திகேயன், கருப்பசாமி, கறுப்பி அம்மா, சப்பாணி மாடன் முதலிய  தெய்வங்களும் கோவிலில் இருக்கின்றன ; கோவிலின் பின்புறத்தில் சர்ப்ப காவு இருக்கிறது; அங்கு நாகர் வழிபாடு நடக்கும்.

பாம்புக்கடி வைத்தியம்

பாம்புக்கடி வைத்தியத்துக்கு பெயர்   பெற்ற இடம் அச்சன்கோவில் ; இரவு நேரத்திலும் திறந்திருக்கும் கோவில் இது; இறைவன் மீது சார்த்தப்பட்ட சந்தனமும் தீர்த்தமும் பாம்புக்கடி விஷத்தை இறக்கி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ; எந்த நேரமானாலும் கோவில் மணியை அடித்தால் அர்ச்சகர் வந்து பிரசாதம் வழங்குவார்.

தனுர் மாதத்தின் முதல் பத்து நாட்கள் மண்டலபூஜை நடைபெறும். மகர மாதத்தில் ரேவதிபூஜையும் நிகழும். மண்டலபூஜையில் தேரோட்டமும் ரேவதிபூஜையில் புஷ்பாபிஷேகவும் முதன்மையான சடங்குகள்.

அச்சன்கோவில் புஷ்பாஞ்சலி

தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெறும் . மதியம் களபாபிஷேகம் . மாலையில் யானை மீது டன்  கணக்கில் பூக்கள் ஊர்வலம்  நடக்கும் ; அச்சன்கோவில் புஷ்பாஞ்சலிக்கு முன்னர் மதுரை முதலிய பூ மார் க்கெட்டுகள் காலியாகிவிடும். பக்தர்கள் டன்  கணக்கில் பூக்களை வாங்கி கோவிலுக்கு அனுப்புவார்கள்.

—subham—-

Tags-  அச்சன்கோவில் ,புஷ்பாஞ்சலி ,பாம்புக்கடி வைத்தியம் ,பூர்ணா, புஷ்கலா ,ஆரியங்காவு ,ஐயப்பன் கோவில், குளத்துப் புழை ,சாஸ்தா,எட்டு கற்கள், மச்ச கன்னி, கதை

Leave a comment

Leave a comment