கேரளத்திலும் ஒரு மூகாம்பிகை கோவில் -36 (Post No.12,844)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,844

Date uploaded in London – –   17 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 36

கோவில் எண்கள் –37, 38

37.பரவூர் மூகாம்பிகை கோவில்

கர்நாடகத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை  கோவில் புகழ் ஆதி சங்கரரால் பரப்பப்பட்டது ; ஸ்ரீ சக்கரத்துடன் சரஸ்வதி தேவி அங்கே கொலு வீற்றிருக்கிறாள் ; அவளது புகழை எம். ஜி. ஆரி.ன் வைர வாளும் ஜெயலலிதாவின் தங்க நகைகளும் தமிழர்களிடையே பரப்பியதை முன்னரே ஒரு கர்நாடக  கோவில் கட்டுரையில் தந்துள்ளேன் .

எங்கே இருக்கிறது ?

எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது வடக்கு பரவூர். இதை தட்சிண மூகாம்பிகை கோவில் என்று  சொல்லுவார்கள். இதுவும் சரஸ்வதி கோவில்தான் .

கோவில் வரலாறு

முன்னர் பரவூர், கொச்சி சமஸ்தானத்தில் இருந்தது; பரவூரில் இருந்த சிற்றரசர் பரவூர்  தம்புரான் கர்நாடகத்திலுள்ள மூகாம்பிகையை வணங்க அடிக்கடி செல்லுவார். அவருக்கு வயது ஆக ஆக, கர்நாடகம் வரை செல்லுவது இயலாது போயிற்று . ஒரு நாள் மிகவும் வருத்தம் அடைந்து கண்ணீர் விட்டபோது அன்று இரவு அவருக்கு மூகாம்பிகையே கனவில் தோன்றினாள் . இறைவி இவ்வளவு அருகில் வந்ததை எண்ணி மகிழ்ந்து பரவூரில் தாமரைக் குளத்துக்கு நடுவில் கோவில் கட்டி மூகாம்பிகையை அமர்த்தினார்.

கொச்சி மன்னர் , இந்தக்கோவிலை திருவாங்கூர் தேவஸ்வம்போர்டுக்கு மாற்றினார்

துர்கா லட்சுமி சரஸ்வதியைக் கொண்டாடும் 9 நாள் நவராத்ரி உற்சவம் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது ; மலையாளிகள் இந்துக்களின் 40 ஸம்ஸ்காரங்களில் ஒன்றான வித்யாரம்பத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்; விஜய தசமியன்று நெல்லில் அல்லது தானியத்தில் ஹரியின் பெயரை எழுதி குழந்தையின் கல்வியைத் துவக்குவது வித்யாரம்பம்.

சரஸ்வதி என்பதால், அறிவு நாட்டம் உடைய சிறுவர்களும் பெரியோரும் எப்போதுமே மூகாம்பிகையை வணங்குவர் . இந்தக் கோவிலில் கணபதி,கார்த்திகேயன் மஹாவிஷ்ணு, ஹனுமான், யக்ஷி, வீரபத்ர மூர்த்திகளும் வழிபாட்டில் இருக்கின்றன.

கோவில் கேரள கட்டிடக் கலை பாணியில் இருக்கிறது.

xxxx

38.எர்ணாகுளம் சிவன் கோவில்

எர்ணாகுளம் நகருக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது என்பது பற்றி ஒரு சுவையான கதை இருக்கிறது ;ரிஷி நாகர்குளம் என்பதே பேச்சு வழக்கில் எர்ணாகுளம் ஆக மருவிவிட்டது . இதோ அந்தக் கதை :-

தேவல என்ற சீடன் இமய  மலையில் தன் குருவுக்குப் பணிவிடைகள் செய்துவந்தான் ; ஒரு நாள் யாக யக்ஞங்களுக்கு மரங்களையும் சுள்ளிகளையும் (சமித்து) சேகரிக்கையில், ஒரு பாம்பினைக் கண்டு பயந்துபோய் அதைக் கொன்றுவிட்டான்.இதை அறிந்த ரிஷி, கோபத்தில் அவனை நீயும் பாம்பாகிப் போ என்று சபித்தார்; அவன் முகம் பாம்புபோல மாறியது ; மன்னிப்புக் கேட்டு கெஞ்சியவுடன் பல்லாண்டுகளுக்கு சிவாய நம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து வா; உன் முகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என்றார் . அவனை எல்லோரும் நாக ரிஷி என்று அழைத்தார்கள் அவனும் பல சிவன் கோவில்களுக்கு யாத்திரை மேற்கொண்டு வருகையில் ஒரு நாள் பஹுலாரண்யம் என்னும் இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் காண்பாய் என்று கனவில் செய்தி வந்தது . அது அர்ஜுனன் செய்த லிங்கம்.

அதைக் கண்டுபிடித்து எடுத்த்துக்கொண்டு சென்றபோது எல்லோரும் பாம்பு முக ரிஷியைக் கண்டு கற்களை வீசித் துன்புறுத்தினர்; லிங்கத்தை எடுத்துக்கொண்டு போக முயற்சித்தபோது சிவலிங்கம் பூமியில் ஒட்டிக்கொண்டது . உடனே அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றார் . ஆனால் குளத்திலிருந்து வெளியே வரவில்லை ; இதனால் மக்கள் அந்தக்குளத்தைத் ரிஷி நாகர் குளம் என்றழைக்க அது எர்ணாகுளம் என மருவியது .

சிவலிங்கம் இருந்த இடத்தில் துச்சத்து கைமல் என்பவர் கோவில் கட்டினார் . மகர சங்கராந்தி காலத்தில் எட்டு நாள் உற்சவம் நடைபெறுகிறது  மக்கள் எர்ணாகுளத்தப்பன் என்று பக்தியோடு வழிபடுவர் .தர்பார் ஹால் மைதானத்திற்குள் கோவில் அமைந்துள்ளது. இது கொச்சி மகாராஜாக்களின் 7 அரச கோவில்களில் ஒன்றாகும். கடைசியாக  1846 ஆம் ஆண்டில் திவான் ஸ்ரீ எடக்குன்னி சங்கர வாரியாரின் உதவியுடன் திருப்பணிகள் செய்யப்பட்டன.

—subham—

Tags- பரவூர், மூகாம்பிகை கோவில், எர்ணாகுளம், சிவன் கோவில் , வித்யாரம்பம்

Leave a comment

Leave a comment