
Post No. 12,847
Date uploaded in London – – 25 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 37
கோவில் எண்கள் –39, 40
39.கல்பாத்தி விஸ்வநாத சுவாமி கோவில்
Sri Visalakshi Sametha Sri Viswanathaswamy temple, popularly known as Kasi Viswanathaswamy Temple or locally as Kundukovil(Kundambalam)
பாலக்காட்டில் கல்பாத்தி கிராமத்திலுள்ள விஸ்வநாத சுவாமி கோவில், நீலா நதிக்கரையில் அமைந்துள்ளது. கோவிலையும் நதியையும் ஒருங்கே காண்போருக்கு காசியின் கங்கை நதி படித்துறைகள் நினைவுக்கு வரும். கல்பாத்தி தேர்த் திருவிழா மிகவும் புகழ்பெற்றது .
இந்தக்கோவிலுக்கு உள்ளூர் மக்கள் இட்ட பெயர் குண்டுக்கோவில் அல்லது குண்டம்பலம் .
சிறப்பு அம்சங்கள்
லெட்சுமி அம்மாள் என்பவர் வாரணாசி எனப்படும் காசியிலிருந்து ஒரு பாண லிங்கத்தைக் கொண்டுவந்து பாலக்காட்டு ராஜாவிடம் கொடுத்து கோவில் கட்டுமாறு வேண்டிக்கொண்டார். அத்தோடு 1000 பணம் கொடுத்து நித்ய பூஜைகளை மாயூரம் கோவில் சிவ ஆகமப்படி நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இன்றும் கூட மாயவரம் கோவில் விழாவும் கல்பாத்தி தேர்த் திருவிழாவும் ஒரே காலத்தில் நடப்பதைக் காணலாம் .
தமிழ் நாட்டைச் சேர்ந்த பிராமண குடும்பங்கள் திருவனந்தபுரத்திலும் பாலக்காட்டிலும் குடியேறிய காலம் அது. பாலக்காட்டு ராஜா ஒரு பழங்குடி இனப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால், நம்பூதிரி பிராமணர்கள் அவருக்கு சமயச் சடங்குகளில் உதவ மறுத்தனர் ; அப்போது அவர் தமிழ்நாட்டுப் பிராமணர்களின் உதவியை நாடினார் . அவர்கள் வேதங்களில் வல்லவர்கள்; ஆகையால் தேர்த் திருவிழாவையே வேத பாராயண விழாவாக மாற்றினார்கள் . 41 நாள் கொண்ட ஒரு மண்டலம் முழுதும் ஒவ்வொரு கிராமத்திலும் வேதபாராயணம் செய்தனர். பாலக்காட்டில் கிராமம் என்றால் பிராமணர் குடியிருப்பு என்று பொருள்; தமிழ்நாட்டில் அக்கிரஹாரம் என்று சொல்லுவதற்குச் சமம்.

ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் நடக்கும் கல்பாத்தி தேர்த்திருவிழா இந்த வட்டாரத்தில் பூரி ஜகந்நாதர் தேர்த்திருவிழா போல பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் . பத்து நாட்களுக்கு நடக்கும் உற்சவத்தில் 3 நாட்களுக்கு தேரை இழுத்துவருவார்கள்.
கல்பாத்தி ரதோற்சவத்தின் போது , நான்கு கோவில்களிலிருந்து வரும் 6 ரதங்கள், வீதிகளில் வலம் வருகின்றன.சிவனுக்கு பெரிய தேர் , கணபதிக்கும் முருகனுக்கும் 2 சிறிய ரதங்கள்; அருகிலுள்ள 3 கோவில்கள் அனுப்பும் 2 கணபதி ரதங்கள், ஒரு கிருஷ்ணர் ரதம் ஆக 6 ரதங்கள் பவனி வருவதால் பக்தர்கள் போட்டிபோட்டுக்கொண்டு இழுத்து வருவார்கள் .
பெளர்ணமி நாளில் நடக்கும் அன்னாபிஷேகம் இதில் முக்கிய நாளாகும் ; அந்தக்காலத்தில் பிராமணர்களுக்கு நிலபுலன்கள் சொந்தமாயிருந்தன. அதில் விளைந்த அரிசியை கோவிலின் அன்னதானத்துக்கு வழங்கினார்கள் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அப்படி வடிக்கப்பட்ட அன்னம்/ சோறு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டபின்னர் ஆற்றிலும் குளத்திலும் வாழும் மீன்களுக்கு உணவாக படைக்கப்பட்டது.
கல்வெட்டு தரும் தகவல்
கோவில் கொடிமரத்திற்கும் நந்தி மண்டபத்திற்கும் நடுவில் கோயில் முற்றத்தில் ஒரு துண்டுக்கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டு மலையாள சகாப்தம் 600 [1424-25 AD] இல் பாலக்காட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இட்டிக்கொம்பி அச்சன் என்பவரால் அளிக்கப்பட்ட கொடைகளைப் பதிவு இதில் உள்ளது. இதனால் கோவில் அதற்கு முன்னதாகவே நிறுவப்பட்டிருக்க வேண்டும்.கோவிலுக்குள் நுழையும் போது வலது பக்கம் இரண்டு ஆலமரங்கள் உள்ளன. முதல் ஆல மரத்தின்கீழ் நாகர்கள் உள்ளன. இதுவே இக்கோயிலின் தல மரம் ஆகும். “விஷ்ணு அம்சம்” என்று கருதி இந்த மரத்திற்கும் நாகத்திற்கும் பூசை செய்யப்படுகிறது.
விசுவநாதசுவாமி , எட்டுத் திசைக்கு அதிபர்களின் ஒருவரான குபேரரை நோக்கி கிழக்கு திசையில் உளளார். அதற்கு அருகே தெற்கில் விசாலாட்சி உள்ளார்.
மாயவரத்தில் உள்ள மயூரநாதர் கோவிலில் நடக்கும் பூசை முறையே இங்கு நடைபெறுகிறது. காமிகாகமம் முறைப்படி பூசை நடந்து வருகிறது.
கோவில் எண்- 40 காடம்புழா பகவதி / பார்வதி கோவில்

காடம்புழா பகவதி அல்லது பார்வதி கோவில் பற்றி பல சுவையான கதைகளும் வினோதமான சடங்குகள், நேர்த்திகடன்கள் பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன .
கோவில் எங்கே இருக்கிறது ?
மலப்புரம் மாவட்டத்தில் கோட்டக்கல்லிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது.. கோபுரம், கொடி மரம் இல்லாவிடினும் பல வினோத வழக்கங்கள் இருக்கின்றன
சிறப்பு அம்சங்கள்
இந்தக் கோவில் பார்வதி அல்லது பகவதி கோவில் என்று சொல்லப்பட்டாலும் விக்கிரகமோ சிலையோ இல்லை. உலோகத்தினாலான ஒரு கண்ணாடியே கர்ப்பக்கிரகத்தில் இருக்கிறது. புழா என்று சொன்னவுடன் ஒரு நதி இருப்பதை எதிர்பார்ப்போம் ; அப்படி எந்த ஆறும் இங்கு ஓடவில்லை .கர்ப்பக்கிரகத்துக்கு எதிரேயுள்ள மேடையில் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட நரசிம்ம சக்கரமும் ஸ்ரீ சக்கரமும் இருக்கின்றன.
சுவையான இரண்டு கதைகள்
அர்ஜுனன் பாசுபதாஸ்த்ரம் பெறுவதற்கு சிவனை நோக்கி தவம் இருந்த காலையில் சிவனும் பார்வதியும் வேட்டுவன், வேட்டுவச்சி ரூபத்தில் வந்து ஓரு பன்றி மீது அம்புவிட்டு அர்ஜுனை வம்புக்கு இழுத்த கதையை நாம் அறிவோம். அந்த பார்வதியை வேடுவச்சி உருவத்தில் வழிபடுகின்றனர் இங்கு .
இன்னொரு கதை என்னவென்றால் ஆதி சங்கரர், அவருடைய சீடர்களுடன் யாத்திரை மேற்கொண்ட சமயத்தில் காட்டின் நடுவில் ஒரு ஒளி அதிக தேஜஸ்ஸுடனும் வெப்பத்துடனும் தோன்றவே அதை வியந்து நோக்கினர் ; அந்த ஒளி ஒரு பூமியிலுள்ள பொந்தில் சென்று மறைந்தது சங்கரர் நரசிம்ம மூர்த்தியை பிரார்த்தித்தார் ; அப்போது, அது தேவியின் வடிவம் என்பதை உணர்ந்து அங்கு கோவிலை நிர்மாணித்தார் .
முட்டறுக்கல் வழிபாடு
முட்டு என்றால் தடைகள், இடையூறுகள் , கஷ்டங்கள் ; கோளறு திருப்பதிகம் எப்படி கிரகங்களால் வரும் தடைகளை அகற்றுமோ அதே போல முட்டுகளை ; தடைகளை அகற்ற இங்கு இந்த சிறப்புவழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் கொண்டுவரும் தேங்காயை தேவி சந்நிதியில் உடைக்கும் அர்ச்சகர், அது உடையும் விதத்தைக் கொண்டு ஆரூடம் சொல்லுவார். இந்துக்கள் அல்லாதோரும் கூட இதில் நம்பிக்கை வைத்து இங்கு வருகின்றனர் ; இவ்வாறு இங்கு பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் எண்ணிக்கை பல்லாயிரம் பல்லாயிரம் ஆகும் .
பூ மூடல் வழிபாடு
பாசு பத அஸ்திரக் கதையில் சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட மோதலில் அர்ஜுனன் எய்த அம்புகள் அனைத்தையும் பார்வதி தேவி பூக்களாக மாற்றி சிவன் மார்பில் விழும்படி செய்தாள் .இதைச் சிறப்பிக்கும் வகையில் இங்கு பூ வால் தேவியை வழிபடும் பூமூடல் நடைபெறுகிறது; இதற்கு பதிவு செய்ய பெரிய க்யூ நிற்கிறது .
இந்தப் பகுதியில் இருவாச்சி மலர்கள் அதிகம் கிடைப்பதால் தேவி பூஜைக்கு அதை அதிகம் பயன்படுத்துகின்றனர் .
—SUBHAM—
TAGS-
கேரள மாநிலம் , 108 கோவில்கள், PART 37, முட்டறுக்கல், பூமூடல், பார்வதி, பகவதி, காடம்புழா , கோவில், கல்பாத்தி , ரதோற்சவம் , தேர்த்திருவிழா