லட்சம் பேரை ஊக்குவித்தவர்; ஆயிரக் கணக்கானோர் வாழ்வு வளம் பெற வழி வகுத்தவர்! (Post No.12,846)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,846

Date uploaded in London –  –  25 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

(MY ELDER BROTHER S NAGARAJAN OF BENGALURU HAS WRITTEN AN ARTICLE IN THREE PARTS ABOUT OUR ELDEST BROTHER S SRINIVASAN  OF CHENNAI WHO PASSED AWAY ON 10TH DECEMBER 2023. MYSELF, LONDON SWAMINATHAN, MY BROTHERS S.NAGARAJAN, PROF.S.SURYANARAYANAN AND S MEENKSHI SUNDAR WERE IN CHENNAI TO ATTEND HIS FUNERAL. OUR YOUNGEST SISTER MRS LALITHA NATARAJAN COULD NOT ATTEND IT.)

 தினமும் செய்த கணபதி ஹோமத்தால் வருவோரின் எதிர்காலத்தை அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியைப் பெற்றார் சீனிவாசன் .

லட்சம் பேரை ஊக்குவித்தவர்ஆயிரக்கணக்கானோர் வாழ்வு வளம் பெற வழி வகுத்தவர்! – 1

ச.நாகராஜன்

ஒரு பெரிய இழப்பு

மனிதனாகப் பிறந்து மனிதனாக வாழ்வது சிறப்புஅதில் மாமனிதராக வாழ்வது இன்னும் சிறப்புடையதாகும்.

இந்த மாமனிதருள் இன்னும் சிறப்புடையவர் பற்றி வள்ளுவர் கூறுகையில் ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் என்கிறார்.

பிறருக்கு சேவை செய்பவனே உயிர் வாழ்பவன் என்பதே இதன் கருத்து.

விவேகானந்தரோ “They alone live who live for others, the rest are more dean than alive” என்கிறார்.

இப்படி தனக்கு என்று இருப்பவற்றை மறந்து மற்றவர்களின் பிரச்சினைகளைப் போக்குபவர் தேவர்களுக்கும் மேலான உலகத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் “வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்” என்பது வள்ளுவர் வாக்கு.

இந்த இலக்கணத்திற்குப் பெரிதும் பொருத்தமாக் அமைந்த திரு சந்தானம் சீனிவாசன் 2023 டிசம்பர் மாதம் பத்தாம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு சிவலோக ப்ராப்தி அடைந்தார் என்ற துயரமான செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

(தோற்றம் : 29-3-1944 மறைவு : 10-12-2023)

தேசபக்தக் குடும்பப் பின்னணி

திரு சீனிவாசன் ஆழ்ந்த ஆன்மீகக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். ஆகவே இயல்பாகவே அனைத்து நற்குணங்களும் அவரை தேடி வந்து அடைந்தன என்பது இயல்பே.

இவரது தந்தையார் தினமணி திரு வெ. சந்தானம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர்.

மதுரை தினமணி நாளிதழுக்கு பொறுப்பாசிரியராகப் பதவியேற்று ஆயிரத்திதொள்ளாயிரத்து ஐம்பதுகளிலிருந்து மதுரையிலே வசித்து வந்தார்.

மீனாட்சி பக்தர். சிறந்த ஆன்மீகவாதி. நல்ல பேச்சாளர். எழுத்தாளர். கிருதிகளை இயற்றியவர். காஞ்சி பெரியவாள், சிருங்கேரி அபிநவ வித்யா தீர்த்தர், ஶ்ரீ சத்யசாயிபாபா உள்ளிட்ட பெரும் மகான்களின் ஆசி பெற்றவர். அவர்களது உபதேச உரைகள் நாடெங்கும் பரவக் காரணமாக இருந்தவர்.

இவரது பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து ஆன்மீக சிந்தனையும் கொண்டு இயல்பாகவே மதுரையில் வளர்ந்தார் சீனிவாசன்.

ஸ்வாமிஜி கிருஷ்ணா

பிரபல சித்தரும் கணபதியை பிரத்யக்ஷமாகக் காண்பவரும் பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்களைக் குருவாகக் கொண்டார் திரு சந்தானம்.

இதனால் சந்தானம் குடும்பத்தினர் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்; அவரது அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாயினர்.

திரு சீனிவாசன் மீது பேரன்பு கொண்ட ஸ்வாமிஜி அவருக்கு கணபதி ஹோமத்தை உபதேசம் செய்ய சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் காலையில் கணபதி ஹோமத்தி விதிப்படி செய்து வரலானார் சீனிவாசன்.

இதனால் ஏற்பட்ட சித்திகளை அவர் வெளியில் சொன்னதே இல்லை.

ஆனால் நூற்றுக் கணக்கானோர் அனுதினமும அவரை அணுகி வரலாயினர். சாமானியன் முதல் பெரும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் வரை அவரை அணுகி தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டனர்; கணபதி அருளுக்குப் பாத்திரமாயினர்.

ஒருவரது முகத்தைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றிய அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றிருந்தார் சீனிவாசன்.

இதனால் அற்புதங்களும் அதிசயங்களும் அன்றாடம் நிகழ்ந்த வண்ணம் இருந்தன – அவரை அணுகி வந்தோருக்கு.

இதில் குறிப்பிடத்தகுந்த முக்கிய அம்சம் எந்த ஒருவரிடமிருந்தும் அவர் ஒரு பைசாவும் பெறவில்லை; பெறக்கூடாது என்ற நியதியைக் கடைசி வரை கடைப்பிடித்து வந்தார்.

இதனால் சாமானியனும் கூட அவரை அணுகும் பெரும் பாக்கியத்தைப் பெற்றனர்.

நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், மானேஜர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் என சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் அவரை அணுகலாயினர்.

இந்தியா முழுவதும் உள்ள பல நகர்களிலும் வாழ்வோர் அவரை பக்தியுடனும் மரியாதையுடனும் அணுகி வந்தனர். இது நாளடைவில் பல்கிப் பெருகி துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ளவர்களும் அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.

பிறருக்கு உதவி என்னும் இந்த மாபெரும் யாகத்தில் இவரது துணைவியார் திருமதி ராஜலெக்ஷ்மி, மகன்கள் பிரகாஷ், மகேஷ்,சங்கரன், புதல்வி சங்கரி ஆகியோரும் பங்கு கொண்டு தங்கள் பங்கு உதவியைச் செய்ததால் இந்தக் குடும்பமே கணபதி குடும்பமாக அமைந்தது.

இனி இவரது வாழ்க்கையில் பணி பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்

PART TWO

மதுரை மில்லில் பணி (HARVEY MILLS, MADURAI)

டெக்ஸ்டைல் துறையில் எஞ்ஜினியராக ஆன திரு சீனிவாசன் மதுரை மில்லில் பணியாற்றத் தொடங்கினார்.

அது மதுரா கோட்ஸ் MADURA COATS ஆக ஆனது. தொடர்ந்து பணியாற்றிய அவர் அங்கு நிர்வாகிகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக மாறினார்.

இது அவரது சுயமுன்னேற்றம், க்ரியேடிவிட், டிசைன், நுண்ணறிவு கூடுதலுக்கான வழிகள், சாதாரண வாழ்க்கை பிரச்சினைகளை எப்படிப் போக்குவது என்பதை அறியவும், அவற்றை தம்மிடம் வருவோருக்கு பயிற்றுவிக்கவும் வழி வகுத்தது.

பயிற்சி வகுப்புகள்

பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் பணி ஓய்வு பெற்ற சீனிவாசனுக்கு அருமை நண்பராக வாய்த்தார் என்.சி. ஶ்ரீதரன்.

அவர் டி.வி.எஸ். நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்று சுயமாக நிர்வாக இயல் மற்றும் சுயமுன்னேற்றத் துறையில் ஆகச் சிறந்த பயிற்சியாளராக ஆனார்.

இவரும் சீனிவாசனும் ஆத்மார்த்த நண்பர்கள். இருவரும் இணைந்தனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள தலையாய பெரும் நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட ஏராளமான இடங்களிலிருந்து அழைப்புகள் குவிந்தன.

பற்பல ஆண்டுகள் தினந்தோறும் என்று சொல்லக் கூடிய அளவில் சிறிய குழுவினருக்கும்  பெரிய குழுவினருக்கும் பயிற்சிகள் தரப்பட்டன.

திரு சீனிவாசன் தனது ஜோக்குகளுக்குப் பெயர் பெற்றவர். அற்புதமான பெரும் எண்ணங்களை மனதில் விதைப்பதற்கு அவரது பேச்சாற்றலில் துணையாக நின்று உதவியது அவரது ஜோக்ஸ்.

கருத்துக்களை அவர் தேர்ந்தெடுத்த விதமே தனி.

தினமும் நூற்றுக் கணக்கில் பேப்பர், புத்தகங்கள், இணையதளம் ஆகியவற்றிலிருந்து துணுக்குகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள், பொன்மொழிகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்த வண்ணம் இருப்பார்.

“கட்டிங், அண்ட் ஒட்டிங்” என்போம் இதை.

இப்படி அவர் தயாரித்த பல பெரும் பைல்கள் வைக்கவே பல பீரோக்களும் பெட்டிகளும் தேவைப்பட்டன.

நூல்களின் எண்ணிக்கை வேறு பெருகின.

இவை அனைத்தையும் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வருவோரிடமும், தான் செல்லும் இடங்களில் ஆற்றிய உரைகளிலும் பயன்படுத்தலானார்.

புகழ் பெருகியது.

மறைவதற்கு ஒரு வாரம் முன்னதாகக் கூட ஏராளமான பேப்பர் கட்டிங்குகளை அவர் சேகரித்ததை அவர் துணைவியார் கூறுகிறார்.

அந்தரங்க ஆலோசனை

மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. ஒன்று போல இன்னொன்று இருக்காது. ஒருவரைப் போல அச்சு அசலாக இன்னொருவர் இருப்பதில்லை. ஆக இப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள கஷ்டப்பட்டவர்கள் இவரை அணுகினர்; அந்தரங்க ஆலோசனை பெற்றனர்; பிரச்சினைகளிலிருந்து விடுபட்டனர்.

இப்படி வருபவர்கள் அனைவரையும் வரவேற்று அவர்களை உரிய விதத்தில் உபசரிப்பது என்பது ஒரு கஷ்டமான காரியம்.

ஆனால் இதைத் திறம்படச் செய்தது சீனிவாசன் அவர்களின் குடும்பம்.

தொடர்ந்து வருவோரைத் தொந்தரவாக அவர்கள் கருதியதில்லை.

மாறாக அவர்கள் பிரச்சினை தீரவேண்டுமே என்பதில் தான் அக்கறை செலுத்தினர்.

எப்போதும் வரவேற்பு; போன் கால்; முன்னறையில் வருகையாளர்கள்!

அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ என்றால் மகன் கிருஷ்ணபிரகாஷ்மருமகள் லாவண்யா லண்டன் என்றால் மகேஷ் மருமகள் சுகன்யாதுபாய் என்றால் சங்கரி மாப்பிள்ளை அனந்த்சென்னை என்றால் சங்கரன் மருமகள் பிரேமா – வருகை புரிவோரை வரவேற்று அவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு திரு சீனிவாசனைக் காண உதவி புரிவர்.

வருபவர்கள் அனைவரையும் குடும்பத்தினரும், உறவினர்களும் நண்பர்களும் நன்கு அறிவோம்; ஆனால் அவர்கள் பிரச்சனைகள் எங்களுக்கு ஒரு போதும் தெரியாது – அவர்களாகச் சொன்னால் தவிர.

அதைப் போக்குபவர் அவர் என்பதை அவர்கள் சொல்லித் தான் அனைவரும் அறிந்து கொண்டோம்.

மஹாகணபதியின் துணையும் ஸ்வாமிஜி கிருஷ்ணாவின் தொடர்ந்த அருளும் இருப்பதே இதற்குக் காரணம் என்பதை அனைவரும் பேசிக் கொள்வோம்.

இப்படித் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையோ அதற்கு உட்பட்டவர்களையோ இந்தக் கட்டுரையில் அவர்களது அந்தரங்கம் கருதிச் சொல்ல முடியாது.

குடும்பப் பண்பு

குடும்பத் தலைவர் என்ற முறையில் மனைவி, மக்கள் மீது அலாதி அக்கறை செலுத்தி அவர்களை வழி நடத்தியவர் அவர்.

தந்தை, தாய் பால் அவர் வைத்திருந்த பெருமதிப்பு அலாதி.

ஸ்வாமிஜி கிருஷ்ணா அவருக்கு குரு மட்டுமல்ல, தெய்வமும் கூட.

தம்பிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் மீது அவர் காட்டிய பரிவும் அன்பும் பாசமும் தனி. அதே போல மனைவி வகை உறவினர்கள் அனைவரும் அவரது வழிகாட்டுதலில் பெரிதும் திருப்தியுற்றனர்.

நண்பர்கள் என்றாலோ அது ஒரு பெரிய பட்டியல் – அதைச் சொல்லி முடியாது.

அடுத்த கட்டுரையில் அவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் அவர் எழுதிய நூல்கள் பற்றிச் சிறிது பார்ப்போம்.

PART 3

ஒரு சின்னக் கணக்கு ஒன்றை போட்டுப் பார்த்தால் திரு சீனிவாசன் அவர்களால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை ஒரு சிறிது அறிய முடியும்.

ஒரு பயிற்சி வகுப்பிற்கு சுமார் 40 முதல் 800 பேர் வரை வருவது வழக்கம். ஒரு மாதத்தில் 20 நாட்கள் இப்படிப்பட்ட வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம் நடப்பது வழக்கம். ஆக இப்படித் தொடர்ந்து சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக அவர் தனது சேவையைத் தொடர்ந்து வந்தார்.

இந்தக் கணக்கின் படி மாதத்திற்கு 5000 என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு லட்சம் பேர் என்ற எண்ணிக்கையை அடைகிறோம். ஆனால் நிஜத்தில் எண்ணிக்கை மேலும் கூடுதலாக இருந்தது என்பது தான் உண்மை.

இது தவிர ஒவ்வொரு நாளும் அவரைப் பார்ப்பவரின் தொகையை மனதில் எடுத்துப் பார்த்தால் அது பல்லாயிரமாக இருப்பது தெரிய வரும்.

இந்த அதிசயத்தை எண்ணிப் பார்த்தால் அவர் ஒரு அதிசய மனிதர் என்பதை அறியலாம்.

இது ஒருபுறமிருக்க அவரது எழுத்துப் பணியும் சிறப்பாக அமைந்தது.

தம்பி திரு மீனாட்சிசுந்தர் நடத்திய ஜெம்மாலஜியும் ஜோதிடமும் மாத இதழில் அவர் கட்டுரைகளை எழுதினார்.

இன்னொரு தம்பி லண்டன் திரு சந்தானம் சுவாமிநாதன் அவர்கள் நடத்திய www.tamilandvedas.com என்ற இணையதள ப்ளாக்கில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை தன் பெயரிலும் ‘கத்துக்குட்டி’ என்ற புனைப்பெயரிலும் எழுதி வந்தார்.

இவை ‘நவீன ஞான மொழிகளாக’ திகழ்ந்தன.

இந்த பிளாக்கில் வரும் கட்டுரைகளை நாள் தோறும் சுமார் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் பேர் வரை படித்து வந்தனர்; படித்து வருகின்றனர்.

நவீன ஞானமொழிகளின் தொகுப்பு இரு பாகமாக இப்போது மலர்கின்றன.

இன்னொரு புத்தகம் நவகிரகங்கள் – கலைக் களஞ்சியம் ஆகும்.. தனக்கே உரிய பாணியில் கிரகங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் எழுதியுள்ளதால் இது ஒரு கலைக் களஞ்சியமாக அமைந்துள்ளது.

இந்த மூன்று புத்தகங்களையும் பங்களூர் நிறுவனமான www.pustaka.co.in வெளியிடுகிறது.

இது ஒரு புறமிருக்க லண்டனிலிருந்து ஞானமயம் என்ற தொடர் ஒளிபரப்பு வாரந்தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடை பெற ஆரம்பித்தது.

இதில் பங்கு பெற ஆரம்பித்த திரு சீனிவாசன் பல்லாயிரக்கணக்கானோரை தன் கருத்துக்களாலும் அதைத் திறம்பட ஜோக்குகளுடன்  கூறும் திறனாலும் கவர்ந்தார்.

பல நாடுகளிலும் உள்ள ஏராளமானோர் இந்த ஞானமயம் நிகழ்ச்சியைக் கேட்டு இவரது உரைகளைத் தொடர்ந்து பாராட்டினர்.

இந்னொரு தம்பியான திரு சூரியநாராயணன் இசை மற்றும் ஆன்மீகக் கருத்துக்களை இவருடன் பகிர்ந்து வந்தார்.

இப்படி எண்ணங்களாலும் செயல்களாலும் தனது உரைகளாலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் திறனாலும் அனைவருக்கு ஊக்கம் அளிக்கும் பெரும் பணியாலும் உயர்ந்த வாழ்க்கையைக் கொண்டவர் திரு சீனிவாசன்.

அவர் நம்மிடையே பூத உடலுடன் இல்லை என்பது மனதை வருத்தமுற வைக்கிறது.

ஆனால் அவரது புகழுடல் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

****************

tags- Santanam Srinivasan , லட்சம் பேரை ஊக்குவித்தவர், ஆயிரக்கணக்கானோர், வாழ்வு வளம் பெற வழி வகுத்தவர், சந்தானம் சீனிவாசன்

Leave a comment

3 Comments

  1. Raman Narasimhachariar's avatar

    Raman Narasimhachariar

     /  December 27, 2023

    true lovable personality positive outlook he will encourage everybody who approaches him. It is great loss I met him last year at his ELLIS NAGAR HOUSING BOARD COLONY HOUSE MADURAI RAMAN

  2. Tamil and Vedas's avatar

    THANKS FOR UR COMMENTS.

  3. Thachempet Venkataraman's avatar

    Thachempet Venkataraman

     /  December 29, 2023

    Mesmerising know about all about srinivasan sure his contributions to society will reflect a feeling he is still with us though not his physical presence and he is reversed remembered all times with respects to departed soul and pray almighty to grace the soul ever under lotus feet
    T R Venkataraman

Leave a comment