முல்லைக்கல் ,திருநக்கரா  கோவில்கள் – PART 38 (Post No.12,849)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,849

Date uploaded in London – –   26 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 3

கோட்டயம், ஆலப்புழை கோவில் எண்கள் –41, 42

41முல்லைக்கல் தேவி கோவில்

முல்லைக்கல் ராஜ ராஜேஸ்வரி கோவில்

ஆலப்புழை நகரில் முல்லை மலர்த் தோட்டத்தில் அமைந்த தேவி கோவில் இது. பல வினோத அம்சங்கள் இந்தக் கோவிலுக்கு இருக்கிறது.

முல்லை, மல்லிகை, பிச்சி முதலிய மலர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை; இவைகளை ஜாஸ்மின் JASMINE என்ற பெயரில் ஆங்கிலத்தில் அழைப்பார்கள் .

முதலில் சிறப்பு அம்சங்களைக் காண்போம்.

தேவியை பகவதி, துர்கா, அன்னபூர்ணேஸ்வரி என்று பல பெயர்களில் அழைப்பார்கள் . ஏனெனில் முதலில் இருந்தது அன்னபூர்ணேஸ்வரி விக்கிரகம் .

தேவிக்கு மேல் கூரை கிடையாது. வானத்தைப் பார்த்து நிற்கிறாள் .

முன்னாலுள்ள கோபுரத்தைத் தவிர கேரள பாணியில் எதுவும் இல்லை.

பின்னால் ஆனைக்கொட்டிலும், இறைவியைச் சுற்றி கணேசர், சுப்பிரமணியர், நாகர், நவக்கிரகங்கள் கிருஷ்ணர் , ஹனுமார், ஐயப்பன் சந்நிதிகள் இருக்கின்றன.

கோவிலின் தோற்றம் பற்றிய சில கதைகள்

செம்பகசேரி தம்புரான்/ ராஜா முல்லை மலர்த் தோட்டத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில் தேவியே வந்து பூப்பறிப்பதைக் கண்டதாகவும் அதனால் அங்கு தேவிக்கு கோவில் எழுப்பியதாகவும் சிலர் சொல்லுவர்.

குளத்துநாட்டிலிருந்து வந்த பிராமணர் ஒருவர், தான் கொண்டுவந்த தேவி சிலையை முல்லை மலர்ச் செடிக்கு அடியில் வைத்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்றுவிட்டுத் திரும்பியகாலையில் சிலையை எடுக்க முயற்சித்தார். ஆனால் சிலை நிலத்தில் வேரூன்றிவிட்டது.தேவியின்  திருவுளத்தை அறிந்த பிராமணர் அங்கேயே கோவில் கட்ட ஏற்பாடு செய்தார் .

சிப்பாய்கள் கொண்டு வந்த சிலை என்றும், திப்பு சுல்தான் படைகளுக்கு அஞ்சி மலபாரிலிருந்து வெளியேறிய நம்பூதிரிப் பிராமணர்கள் கொண்டுவந்த சிலை என்றும், கொடுங்கல்லூர் பகவதியை வணங்கிய தம்புரான் அவளை தன்னுடைய ஊரான ஆலப்புழைக்கு கொண்டுவர விரும்பியதாகவும் அவளே கனவில் தோன்றியவுடன் ஆலப்புழையிலேயே கோவில் எழுப்பியதாகவும் எண்ணற்ற கதைகள் .

சுமார் 500 ஆண்டுப் பழமை உடையது .

முதலில் இருந்த அன்னபூரணி சிலையை  யாரோ ஒருவர் கட்டித் தழுவ, அதில் விரிசல் ஏற்பட்டவுடன் 1962ம் ஆண்டில் புதிய ராஜ ராஜேஸ்வரி தேவிசிலை நிறுவப்பட்டது .

41 நாள் சிறப்பு விழா

நவம்பர்- டிசம்பரில் நடக்கும் 41 நாள் சிறப்பு  உற்சவம் மிகவும் புகழ்பெற்றது; கடைசி 11 நாட்களில் உற்சவத்தோடு இசை, கூத்து, உபன்யாசம் போன்றவையும் நடைபெறும்; வழக்கமான யானை ஊர்வலம் அன்னதானம் முதலியனவும் இருக்கும். இதைத் தவிர நவராத்திரி காலத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

பிரசாதங்களும் இக்கோவிலில் தனித்துவம் உடையவைதான். உளுந்து வடை முதல் இனிப்பு பணியாரங்கள் வரை பலவும் தேவிக்குப் படைக்கப்படுகின்றன.

XXXXXXX

42.திருநக்கரா மகாதேவர் கோவில், கோட்டயம்

கோட்டயம் நகரின் நடுவிலுள்ள சிவன் கோவில் இது.

நீண்ட வடிவிலுள்ள கேரளத்தின் நடுப்பகுதியில் கோட்டயமும் ஆலப்புழையும் இருக்கின்றன

தேக்கம்கூர் மன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார் ; 500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது பரசுராமர் பிரதிஷ்டை செய்த சிவன் என்பது ஐதீகம் மேலும் இதை சுயம்பூ (தானாக உதித்த) லிங்கம் என்பார்கள் .

கோவிலின் தோற்றம் பற்றி வழக்கம்போல பல கதைகள் உண்டு

மன்னருக்கு திருஸூர் வடக்குநாதன் மேல் அலாதிப் பிரியம். ஆயினும் வயது ஆக ஆக அவரால் திருசூர் வரை யாத்திரை செய்ய இயலவில்லை. இது மனத்தை வருத்தியது; ஒருநாள் இரவில் கனவில்,  வடக்குநாதர் தோன்றி,  மன்னர் இருக்கும் இடத்திற்கே தான் , வருவதாகச் சொன்னார். அதே நேரத்தில் வயலை  உழுதுகொண்டிருந்த விவசாயிகள் பூமிக்கடியிலிருந்து லிங்கத்தையும் நந்தியையும்  கண்டெடுத்தனர். மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ; உடனே கோவில் எழுப்பினார்  அந்தக் கோவில் நக்கரா குன்றின் மீது அமைக்கப்பட்டது . முன்னரே தான் அழைத்துவந்த ஒரு ஏழை நம்பூதிரிப் பிராமணரையே பூஜைக்கு அமர்த்தினார் .

2 சிறப்பு அம்சங்கள்

இந்தக் கோவிலில் உள்ள மரச் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடு உடையவை .

கர்ப்பக்கிரகத்தின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள ஓவியங்கள் காமச்சுவை மிக்கவை.

கோவில் விழாக்கள்

மீனம்/ மார்ச் மாதத்தில் நடக்கும் ஆராட்டு உற்சவத்தால் இக்கோவில் மிகவும் பிரசித்தம் அடைந்தது; அந்த விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்

பண்டிகைக் காலத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சபரிமலை விழாக்காலத்தில் எல்லா ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வருகின்றனர் ; ஆயினும் முதலில் கண்ட பத்து நாள் ஆராட்டு உற்சவம்தான் சிறப்பானது. கோட்டயம் நகரம் முழுதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். எங்கும் தோரணங்கள் அசைந்தாடி பக்தர்களை வருக வருக என்று வரவேற்கும்.

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் கர்பக்கிரக  வட்டாரத்துக்குள் இந்துக்கள் அல்லாதோர் நுழைய முடியாது ஆனால் இக்கட்டுரையில் கண்ட கோட்டயம்,  ஆலப்புழை  கோவில்களில்  எல்லோரும் தரிசனம் செய்யலாம் .

—subham—

Tags- கேரளம் , PART 38, முல்லைக்கல்,   கோவில், திருநக்கரா ,மகாதேவர்,  கோட்டயம், ஆலப்புழை , தேவி

Leave a comment

Leave a comment