
Post No. 12,852
Date uploaded in London – – 27 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காளத்தீ கண்டத்தே, நெற்றியிலே, கரத்திலே, அங்கமெங்கும் சிவனே!
ச.நாகராஜன்
சொக்கநாதப் புலவர் தமிழின் தலை சிறந்த புலவர்களுள் ஒருவர்.
அவர் சிவபிரானை நோக்கினார். உடலெங்கும் விஷாக்கினி. வியந்து பாடுகிறார் இப்படி:
காளத்தீ கண்டத்தே காளத்தீ நெற்றியிலே
காளத்தீ யுன்றன் கரத்திலே – காளத்தீ
அங்கமெங்கும் வெவ்வழலை யாற்றினாள் ஞானப்பூம்
கங்கையென்னும் பெண்ணொருத்தி கண்டு
பாட்டின் பொருள்:
கண்டத்தே காளத்தீ – உனது கழுத்திலே காளத்தீ உண்டு
நெற்றியிலே காளத்தீ – நெற்றியில் காளத்தீ உண்டு
உன்றன் கரத்திலே காளத்தீ – உன் கையிலே காளத்தீ உண்டு
அங்கமெங்கும் காளத்தீ – உனது உடல் முழுவதும் காளத்தீ உண்டு.
வெம் அழலை – இந்த வெம்மையாகிய நெருப்பை
ஞானப்பூம் கங்கையென்னும் – ஞானத்தையும், பூ பொலிவையும் உடைய கங்கை என்னும்
பெண்ணொருத்தி கண்டு – பெண் ஒருத்தி கண்டு
ஆற்றினாள் – தணித்தாள்
காளத்தீ என்றால் விஷாக்கினி ஆகும். முதலில் உள்ள காளத்தீ பாற்கடலில் பிறந்த ஆலகால விஷத்தை சிவபிரான் கண்டத்திலே தாங்கியதைக் குறிக்கிறது.
அடுத்து இரண்டாவதாக வரும் காளத்தீ சிவபிரானின் நெற்றியிலே உள்ள நெற்றிக் கண் நெருப்பைக் கூறுகிறது.
அடுத்து மூன்றாவதாக வரும் காளத்தீ சிவபிரானின் கையிலே உள்ள நெருப்புருவமாகிய மழுவைக் குறிக்கிறது.
நான்காவதாக வரும் காளத்தீ சிவபிரானின் மேனி முழுவதும் நெருப்பாய் இருத்தலைக் குறிக்கிறது.
இப்படி அழல் உருவமாக அமைந்துள்ள சிவபிரானை கங்கை என்ற பெண் கண்டாள்; அதைத் தணித்தாள்.
கங்கையைத் தலையில் கொண்ட சிவபிரானின் தணல் வெப்பம் தணிந்தது!
ஞானப்பூ என்பதற்கு ஞானமாகிய அழகு என்ற ஒரு பொருளும் உண்டு.
இப்படி சிவபிரானைப் போற்றும் சொக்கநாதப் புலவர் சிவபிரானின் திரு நடனத்தைக் காண்கிறார்.
பாடுகிறார் இப்படி:

அம்பலா வின்னொருகா லாடினா லாகாதோ
உம்பரெலாங் கண்டதெனக் கொப்பாமோ – சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புலிக்குந் தித்தியென
ஒற்றிப் பதஞ்சலிக்கு மூர்
பாடலின் பொருள் :
சம்புவே – சிவபிரானே
வெற்றிப் பதஞ்சலிக்கும் – வெற்றியை உடைய பதஞ்சலி மஹரிஷியின் பொருட்டும்
வெம்புலிக்கும் – கொடிய புலிக்காலர் பொருட்டும் (வியாக்ரபாதரை இது குறிக்கிறது)
தித்தி என ஒற்றி – திதி என ஒற்றியாடி
பதம் சலிக்கும் – பாதம் ஓய்தற்குரிய
ஊர் – ஊராகிய
அம்பலவா – பொன்னம்பலவா
இன்னொரு கால் ஆடினால் ஆகாதோ – இன்னொரு காலால் ஆடினால் தகாதோ
உம்பர் எல்லாம் கண்டது – தேவர்கள் எல்லாம் பார்த்தது
எனக்கு ஒப்பு ஆமோ – எனக்கு சம்மதியாகுமோ!
இன்னொரு காலால் எனக்காக ஆடக் கூடாதா என்கிறார் புலவர்.
இப்படிப்பட்ட அற்புதமான தனிப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.
***