திப்பு சுல்தான் இடித்த தளிப்பறம்பா சிவன் கோவில் – 39 ( Post No.12,853)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,853

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 39

 கோவில் எண்கள் –43,44

43.தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வர கோவில்

கண்ணனூரிலிருந்து (கண்ணூர் ) 25 கி.மீ தூரத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் இருக்கிறது. கேரள மாநில 108 சிவன் கோவில் பட்டியலில் இதைக் காணலாம்.

இந்த வட்டாரத்தில் 3 கோவில்கள் இருக்கின்றன ; கர்ப்பிணிப் பெண்கள் மூன்றையும் தரிசிக்க வேண்டும் என்பது மலையாளி இந்துக்களின் சம்பிரதாயம் ; அவையாவன :

1.தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வரர் சிவன் கோவில் Rajarajeshwara Temple at Taliparamba

2..த்ரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் Trichambaram Krishna Temple

3.கஞ்சிரகாட் வைத்தியநாதர் (சிவன்) கோவில் Kanhirangad Sree Vaidyanatha Temple

தளிப்பறம்பா ராஜராஜேஸ்வர  சிவன் கோவிலுக்கு சில பர்லாங் தூரத்தில் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது ; தளிப்பறம்பாவிலிரு ந்து 6 கி.மீ தொலைவில் வைத்தியநாதர் சிவன் கோவில் இருக்கிறது . இவைகளை வணங்கும் கர்ப்பிணிப்பெண்ணுக்கு நல்ல ஆயுள் ஆரோக்கியமும், பெரிய பதவிகளும் உள்ள பிள்ளைகள் பிறக்கும் என்பது வட்டார இந்துக்களின் நம்பிக்கை.

ராஜ ராஜேஸ்வர சிவன் கோவிலின் சிறப்புகள்

தட்சன் நடத்திய யாகத்தில் சிவ பெருமானை அவன் அவமதித்ததால் பார்வதி தேவி, யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள்; சதி என்னும் வழக்கம் அப்போது தோன்றியது. சதியின் உடலைத் தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம்  ஆடினார் சிவன். அப்போது  பார்வதி தேவியின் உடற்கூறுகள் விழுந்த இடங்கள் எல்லாம் மாபெரும் சக்திக் கேந்திரங்களாக மாறின. சிலர் 51 இடங்கள் என்பர்; மேலும் சிலர் 108 இடங்கள் என்பர். சக்தி தேவியின் தலை விழுந்த இடமே தளிப் பறம்பு என்பது மலையாளிகளின் நம்பிக்கை.

திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள்

இந்தக் கோவிலுக்கு 7 நிலை ராஜ கோபுரம் இருந்தது ; மத வெறி பிடித்த  திப்பு சுல்தானின் துலுக்கப்  படைகள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை இடித்தன ; அவர்களில் படைத் தளபதி  ஒருவனை பாம்பு கடித்து இறக்கவே ஓடிவிட்டனர். இடிபாடுகளை இன்றும் காணலாம்.

கோவிலின் தோற்றம் – சுவை மிகு கதைகள்

பார்வதிக்கு சிவன் மூன்று லிங்கங்களை அளித்து பூஜை செய்ய உதவினார். மாந்தாதா என்ற சூரிய வம்சத்து அரசன், சிவனை வேண்டி தவம் புரியவே ஒன்றை அவனுக்குக் கொடுத்தார். அவன் பூஜை செய்த லிங்கம் காலப்போக்கில் பூமிக்குள் புதையுண்டது . அவனது வம்சத்தில் தோன்றிய முசுகுந்தன், தவம் இயற்றி இரண்டாவது லிங்கத்தைப் பெற்றான். அதுவும் காலத்தின் கோலத்தினால் மறையவே மூஷக வம்ச கேரள அரசன் சதஸோமன் , சிவனை வேண்டவே அவனுக்கு மூன்றாவது லிங்கம் கிடைத்தது. அதை அவன், அகஸ்தியர் சொன்னபடி, இங்கே நிறுவினான். பிற்காலத்தில் சூரிய வம்சத்தில் உதித்த ராம பிரானும் இங்கே வந்து சிவனை வழிபட்டார்  என்பது ஐதீகம். ஆக, கோவிலின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது.

லக்ஷ்மி புரம்

இந்த ஊரின் பழைய பெயர் லக்ஷ்மி புரம் ; பெரும் த்ரி கோவில் என்றும் சொல்லுவார்கள் .

கோழிக்கோடு ஜாமொரின் (இந்து மன்னர்கள்) களில் ஒருவர் பெரிய சிவ பக்தர்; அவர் கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து மாயமாக மறைந்தார்; தொலை தூரத்திலுள்ள திருவாங்கூர் மன்னர்களும் ஒவ்வொரு பட்டாபிஷேகத்தின்போதும் இந்தக் கோவிலுக்கு ஒரு யானையை தானம் செய்வார்கள்; திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, இந்த ஊர் நம்பூதிரி பிராமணர்களையும் வேத பாராயணத்துக்கு அழைத்தார்.  பெரும் த்ரிகோவில் அப்பனைத் தவிர , வேறு எந்த மன்னரைப் போற்றும் ஜெபத்திலும் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லி அழைப்பை நிராகரித்தனர்

பார்கவம்மா என்பவர் உத்தரப் பிரதேசத்திலிருந்து 15,000 பிராமணர்களை இங்கு குடியேற வழிசெய்தார் என்று கேரள மஹாத்ம்யயம் சொல்லும். மயூர வர்மா என்ற மன்னர் பிராமணர்களுக்கு நிறைய நிலம் ஒதுக்கினார் கல்வி, கேள்விகளில் இந்த ஊர்ப்பிராமணர்களுக்கு நிகரானவர் எவருமிலர் என்ற அளவுக்கு புகழ்க்கொடி நாட்டினர் .

சிவ யோகி கதை

ராகவேந்திரா என்ற இயற்பெயர் கொண்ட ஒருவர் தமது தவத்தினால் சிவ யோகி என்றும் அத்யாச்ரமி என்றும் பெயர் பெற்றார். வேணாட்டின் மன்னர் ரவி வர்மா குலசேகரர் (1299-1314)  காலத்தில் அவர் வாழ்ந்தார். சிவ யோகி போல மன்னரும் மாபெரும் அறிஞர்.. ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் சிவ யோகி மடம் இருக்கிறது. சிவ பெருமானே அவருக்கு காட்சி தந்ததாக பக்தர்கள் நம்புவர் .

காசி நகரத்தில் அறிஞர்கள் கூடி வாதப் பிரதிவாதங்களில்  இறங்குவது போல தளிப்பரம்பாவும் சான்றோர் குழுமும் இடமாகத் திகழ்ந்தது . தமிழ்ச் சங்கப்பலகை போல சான்றோர் மட்டுமே நுழையும் மண்டபங்களும் இருந்தன. அவர்களுக்கு கைகளுக்கு காப்புகளும் சால்வைகளும்  வழங்கப்பட்டன.

உத்தண்ட சாஸ்திரி கதை

கோழிக்கோடு ஜாமோரின் (இந்து மன்னர்கள்)  அரசவையில் ஆஸ்தானக் கவிஞர் உத்தண்ட சாஸ்திரி. ; அவர் நிர்குண உபாசகர்; கோவில் சிலைகளை வணங்க மாட்டார். கோவிலுக்கு விஜயம் செய்கையில் கைகூப்பி நிற்க மட்டும் செய்வார்; கீழே விழுந்து நமஸ்கரம் செய்தல், தொட்டுக் கும்பிடுதல் போன்றவை இராது ; ஆயினும் ராஜ ராஜேஸ்வர சிவலிங்கத்தைக் கண்ட மாத்திரத்தில் தன்னை அறியாமலே ஹர ஹர மஹாதேவ என்று கோஷமிட்டார்.; கீழே விழுந்து நமஸ்கரித்தார்.  நெடுஞ்சாண் கிடையாக  விழுந்ததோடு நில்லாமல்,  சமஸ்கிருதத்தில்  சிவன் மீது பாடல் எட்டுக் கட்டினார் அந்தக் கவிஞரின் கோகிலா சந்தேச நூலில், வட கேரளத்தின் தளிப்பரம்பா ,த்ரிசம்பரம்  , திருநாவாய், முதலிய முக்கியக் கோவில்களைக் காணலாம்.

கேரள  பாணி கோவில்

கோவிலின் அமைப்பு பிரமிடு வடிவ கூரையுடனும் முன்னும் பின்னும் தாழும் 2 கூரைகளுடனும் உள்ளது. பலிக் கல்லில் வினோத உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.1524-ம் ஆண்டில் கோவிலுக்கு நடந்த திருப்பணி பற்றிய கல்வெட்டும் காணப்படுகிறது .

ஒரு வினோத வழக்கம் என்னவென்றால் இந்தக் கோவிலில் பகல் நேரத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை; இரவு பூஜை முடிந்த பின்னரே இறைவனைத் தரிசிக்கலாம்..

சிவராத்திரி, விஷு பண்டிகை நாட்களிலும் மாத பிரதோஷ காலத்திலும் பெரும் கூட்டம் கூடுகிறது .

தென் இந்தியாவில் பிற கோவில்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பக்தர்கள் இக்கோவிலில் வந்து பிரஸ்னம் பார்ப்பது வழக்கம். பிரஸ்னம், வெளியே அமைந்துள்ள ஒரு பீடத்தில் வைத்து பார்க்கப்படும்.

கோவிலுக்குள்  இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்கான தடை இருந்த போதும், 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிறித்துவரான திரைப்பட நடிகை மீரா ஜாஸ்மின் இக்கோவிலுக்குள்  நுழைந்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் அதற்கான பரிகார பூஜைக்கான தொகையை மீரா ஜாஸ்மின் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார்.

தளிப் பறம்பு  கோவிலில் நெய் அமுது படைப்பது ஒரு சம்பிரதாயம். இதனால் இங்கே செல்லுவோர் சிறு குப்பிகளில் கிடைக்கும் நெய் பிரசாதத்தை வாங்கி வருவார்கள்

xxxxx

44. காஞ்சிரக் காடு வைத்தியநாதர்/ சிவன் கோவில்

தளிப் பறம்பு  கோவிலில் பகல் நேரத்தில் பெண்கள் நுழைய தடை இருந்ததால்  ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இன்னும் ஒரு கோவிலை மன்னர் சத சோமன் கட்டினார் . இங்கே ஏனைய கோவில்களைப்போல பெண்கள் எந்நேரமும் சிவனை (வைத்தியநாதர்) வழிபட அனுமதி உண்டு 

பொதுவாக கணவனின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் திங்கட்கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிக்கிறார்கள்; இதனால் திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் கூட்டம் அதிகம் இருக்கும் .ஆனால் காஞ்சிரக் காடு கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதான்  பெண்கள் கூட்டம் அதிகரிக்கும்; ஏனெனில் அங்கு சிவன்சூரிய அம்சம் பெற்றவர்; தனுர் மாத திருவாதிரை நாள் பெரிய விழா ஆகும் ; பிரதோஷ நாட்களிலும் கூட்டம் இருக்கும் .

—சுபம் —-

Tags– உத்தண்ட சாஸ்திரி,  கதை, சிவ யோகி ,திப்பு சுல்தான் ,தளிப்பறம்பா,  ராஜ ராஜேஸ்வரர்,  சிவன் கோவில் , காஞ்சிரக் காடு, வைத்தியநாதர்

Leave a comment

Leave a comment