அநிருத்தனைக் காப்பாற்றிய ஶ்ரீ கிருஷ்ணர்! (Post.12,856)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,856

Date uploaded in London –  –  28  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அநிருத்தனைக் காப்பாற்றிய ஶ்ரீ கிருஷ்ணர்!

ச.நாகராஜன்

ஶ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையில் பல சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு.

இவற்றைப் புராணங்களிலும், மஹாபாரதத்திலும், பின்னால் எழுந்த நூற்றுக் கணக்கான நூல்களிலும் காணலாம்.

ஶ்ரீ கிருஷ்ணரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு இது:

பலியின் புதல்வன் பாணன். அவன் மிகப் பெரும் வலிமை வாய்ந்த அசுரன்.

அவனுக்கு ஆயிரம் கரங்கள். ஒரே சமயத்தில் ஐநூறு வில்களை எடுத்து ஐநூறு பாணங்களைத் தொடுத்து அவனால் விட முடியும். அப்படி ஒரு வல்லமை!

அவன் ஒரு சிவ பக்தன். கடுமையான தவத்தை நெடுங்காலம் மேற்கொண்ட அவன் சிவ தரிசனம் பெற்றான்.

அவன் விசித்திரமான ஒரு வரத்தை சிவனிடம் யாசித்தான். தன் அரண்மனை வாயிலில் வாயில் காப்போனாக சிவன் இருக்க வேண்டும் என்ற வரம் அது.

சிவனும் வரத்தை ஈந்தார். வாயிலைக் காக்கும் பணியை மேற்கொண்டார்.

பாணனுக்கு அழகான ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் உஷா.

ஒரு நாள் தனது கனவில் அவள் அழகிய ராஜகுமாரன் ஒருவனைக் கண்டாள். அவனோடு மிகவும் சந்தோஷமாக வாழ்வதாக அந்தக் கனவில் அவள் கண்டாள்.

கனவிலிருந்து விழித்தெழுந்த பின்னரும் அந்த அழகிய ராஜகுமாரனை அவளால் மறக்க முடியவில்லை.

அவளுக்கு ஒரு தோழி. அவள் பெயர் சித்ரலேகா.

சித்ரலேகாவிற்கு அபூர்வமான ஒரு கலை தெரியும். 

தான் கண்ட அல்லது கற்பனை செய்யும் எந்த உருவத்தையும் அவளால் வரைய முடியும்.

அவளிடம் உஷா தான் கண்ட கனவைச் சொல்லவே, பல ராஜ குமாரர்களின் படத்தை வரைந்து காண்பிக்க ஆரம்பித்தாள் சித்ரலேகா.

அநிருத்தனின் படமும் அதில் ஒன்று.

அதைப் பார்த்த உஷா அசந்து போனாள்.

அச்சு அசலாகத் தன் கனவில் வந்த அதே உருவம் தான் அது!

சித்ரலேகா தனது யோகசக்தியினால் தனது அரண்மனையில் தூங்கிக் கொண்டிருந்த அநிருத்தனை அலாக்காகத் தூக்கி வந்து உஷாவிடம் ஒப்படைத்தாள்.

அநிருத்த்தனும் உஷாவும் மிகவும் சந்தோஷமாக உஷாவின் அரண்மனைப் பகுதியில் பல தினங்களைக் கழித்தனர்.

திடீரென்று ஒரு நாள் அநிருத்தனை பாணன் கண்டு விட்டான்.

அவனைக் கட்டிப் போட்ட பாணன், ஒரு தனி அறையில் அவனை அடைத்து விட்டான்.

அநிருத்தன் யார்?

ருக்மணிக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கும் பிறந்தவர் பிரத்தியும்னன்.

பிரத்தியும்னனுக்கும் ருக்மியின் மகளான ருக்மவதிக்கும் பிறந்தவர் அநிருத்தன். அதாவது அவர் கிருஷ்ணரின் பேரனாவார்.

கிருஷ்ணரின் ராஜ்யத்தில் அநிருத்தனைக் காணோமே என்று அனைவரும் தவிக்கலாயினர். தேவரிஷி நாரதர் த்வாரகைக்கு வந்த போது அநிருத்தனைப் பற்றிய சரியான தகவலை விரிவாகத் தந்தார்.

பாணனின் சோணிதபுரத்தை நோக்கி கிருஷ்ணரின் தலைமையில் யாதவர் படை வெகுண்டெழுந்து சென்றது.

அங்கு காவல் காத்ததோ சிவபிரான். அவர் யாதவர் சேனையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்.

இரண்டு தெய்வீக சக்திகள் தம் தம் படையைக் காக்க ஶ்ரீ கிருஷ்ணரின் யாதவ சேனையின் அதிரடித் தாக்குதலைத் தாங்க மாட்டாத பாணனின் படை பயந்து பறந்தோடியது.

பாணன் நேரடியாகப் போர்க்களத்தில் குதித்தான்; கிருஷ்ணரை எதிர் கொண்டான்.

பாணனின் ஆயிரம் கரங்களில் இரு கைகளைத் தவிர அனைத்தையும் வெட்டினார் கிருஷ்ணர்.

சிவனின் வேண்டுகோளுக்கிணங்க பாணனை உயிரோடு விட்டார் ஶ்ரீ கிருஷ்ணர்.

ஶ்ரீ கிருஷ்ணர் அநிருத்தனையும் உஷாவையும் மீட்டு தன்னுடன் த்வாரகைக்கு அழைத்துச்  சென்றார்.

***

Leave a comment

Leave a comment