திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில் -40 (Post No.12,857)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,857

Date uploaded in London – –   28 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 40

கோவில் எண்கள் –45,46

45.திரிசம்பரம் கிருஷ்ணன் கோவில்

தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வர கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்தப் புகழ்பெற்ற (Trichambaram Krishna Temple) கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. இதை வடக்கு குருவாயூர் என்று அழைப்பர். இது வட கேரளத்தில் உள்ள முக்கியக் கோவில். கண்ணனுர் (கண்ணூர்) மாவட்டத்தில் இருக்கிறது .

கம்சனை வதம் செய்துவிட்டு வந்த கிருஷ்ணனை, அதே ருத்ர ரூபத்தில் காட்டுகிறது இங்குள்ள கிருஷ்ணன் சிலை .

சிறப்பு அம்சங்கள்

சம்பர வனத்தில் சம்பர மகரிஷி தவம் செய்து இறைவனுடன் ஐக்கியமான புண்ய பூமி இது.

இந்தக் கோவிலில் உள்ள ஓவியங்கள் கண்களைக் கவரும் வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. சிற்பங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

சிற்பங்களும் ஓவியங்களும் 200 முதல் 400 ஆண்டுப் பழமையானவை. இங்கு அமைக்கப்பட்ட மரச் சிற்பங்கள் பாகவத புராண (கிருஷ்ணர் வரலாறு) நிகழ்ச்சிகளை சித்தரிக்கின்றன

இங்கு துர்க்கை அம்மன் குளத்துக்கு நடுவில் கோவில் கொண்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்தது.  துர்கா உறையும் குளம் புண்ய தீர்த்தம் என்பதால் யாரும் குளிக்க அனுமதி இல்லை. கோடை காலத்திலும் கூட குளம் வற்றாமல் ஒரே மட்டத்தில் நிற்பது ஒரு அதிசயமே

கோவில் வரலாறு

கேரளத்தின் ஒரு பகுதியை எலி வம்சத்தினர் ஆண்டார்கள். ஸம்ஸ்க்ருதத்தில் எலி வம்சத்தை மூஷக வம்சம் என்பார்கள். அதுல என்னும் கவி, மூஷக வம்ச காவியத்தை இயற்றினார். 11-ஆம் நூற்றாண்டு வரை அவர்கள் ஆண்டார்கள் அந்த வம்ச அரசர்களில் ஒருவரான வலபன் என்பவன் திருப்பணி செய்ததை காவியம் குறிப்பிடுவதால் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது என்பது புலப்படுகிறது .

இரண்டு வினோத வழக்கங்கள்

கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் ஆனக்கொட்டில் இருக்கும் அங்கே பல யானைகளைக் காணலாம். ஆனால் திருச் சம்பரம்கோவிலில் யானைகள் இல்லை; கிருஷ்ணன் கொன்ற கம்சனின் யானையின் பெயர் குவலயா பீடம். அவன் யானையைக் கொன்றபின்னர் கம்சனின் வம்சத்தையே துவம்சம் செய்தான். அதனால் இந்தப் பக்கமே யானைகளைக் கொண்டுவரக்கூடாது என்பது சம்பிரதாயம்.

இதைச் சோதிக்க முற்பட்ட ஒரு முஸ்லீம் வியாபாரியும் மன்னிப்புக் கேட்கும் சம்பவம் நடந்தது. அவர் வாங்கிய புதிய யானையில் கோவிலைச் சுற்றி பவனி வந்தார். கிழக்கு கோபுரம் அருகில் அந்த யானை வந்த பொழு து இடி ஓசையுடன் கோவில் கதவுகள் திறந்தன. யானை முன்கால்களை மடித்து அமரவே, மாவுத்தன் தூக்கி எறியப்பட்டான். வியாபாரியும் தவற்றை உணர்ந்து கோவிலுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார் .

இன்னொரு வினோத வழக்கம், சந்நிதி திறந்தவுடன் நைவேத்தியத்தை கிருஷ்ணனுக்கு படைப்பது ஆகும். ஏனென்றால் கம்சனைக் கொன்ற பின்னர், கண்ணன், பசியுடன் இருந்ததால் யசோதையிடம் சென்று அம்மா, சோறு போடு என்றானாம்.

துலுக்கப்படைகள் அட்டூழியம்

திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள்  இடிக்காத இந்துக் கோவில்கள் வட கேரளத்தில் இல்லை. திருச்சம்பரம் கிருஷ்ணன் கோவிலும் முஸ்லீம்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் கடந்த 200 ஆண்டுகளில் கோவில் திருப்பணிகள்  அடுத்தடுத்து நடந்தன. ஆயினும் நடுவிலுள்ள கர்ப்பக்கிரகப் பகுதி சதுர வடிவில் உள்ளதால் இது பழைய பகுதி என்பது வரலாற்று அறிஞர்களின் துணிபு.

இலஞ்சி மர அற்புதம்

கடுமையான தோல் நோயுடைய ஒருவர் ஆறாத புண்களுடன் இந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்தார்; கோவில் திறந்தவுடன் கண்ணனைத் தரிசித்துவிட்டு கோவிலுக்கு வெளியேயுள்ள இலஞ்சி மரத்துக்கு அடியில் அமர்ந்து பிராத்தனை செய்து வந்தார். மரத்தின் காய்கள் உடலில் விழும்போது வலியால் அலறுவார் ; கண்ணா இப்படி என்னைக் கொடுமைப்படுத்துகிறாயே என்று அலறியவுடன் மரம், காய் காய்ப்பதையே நிறுத்திவிட்டது; அவருக்கும் நோய் குணமானது இதை நினைவுபடுத்தும் வகையில் திருவிழாக்காலத்தில் கண்ணன் உருவம் மரத்துக்கு முன்னால் நிறுத்தப்படும். பக்தர்கள் அதன் இலையில் மோதிரத்ததை வைத்து தமது கோரிக்கைகளை எடுத்துரைப்பார்கள்.

வினோத விழா

கும்ப மாதத்தில் (மார்ச்) ஆண்டு உற்சவம் நடக்கும். அப்போது 6 கி.மீ. தொலைவிலுள்ள தாராம்குளங்கரை கோவிலிலிருந்து பலராமர் சிலை ஊர்வலமாக வரும். இரண்டு இடங்களிலும் யானைகள் தடை செய்யப்பட்டதால் கிருஷ்ணர், பலராமர் உருவங்களை அர்ச்சகர்கள் தலையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டே வருவார்கள் ; இரவு முழுதும் இந்த ஆட்டம் நடக்கும் ; இவை எல்லாம் கோவிலுக்கு வெளியேயுள்ள மைதானத்தில் நடப்பதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்க்க வருகிறார்கள் .

முன் காலத்தில் கோவிலுக்குள் இந்த டான்ஸ்/ நடனம்  (திடம்பு நிருத்யம்) நடந்தது. ஒரு பக்தை இதைக்காண முடியாமல் வருந்தி பிரார்த்தித்தார். அப்போது நடனம் ஆடிய அர்ச்சகர்கள் மெய் மறந்து கோவிலுக்கு வெளியே 2 பர்லாங் தூரம் சென்று பூக்கொத்து இல்லத்தில் இருந்த பக்தை முன்னர் ஆடினார்கள். அவர்கள் தலையில் சுமந்து வந்த விக்கிரகங்களை அம்மையாரும் தரிசித்து மகிழ்ந்தார். அதைத் தொடர்ந்து இப்போதும் கோவிலுக்கு வெளியே இந்த நடனம் நடக்கிறது .

.xxxxxx

46. வேட்டைக்கொரு மகன் கோவில்கள் 150

சிவ பெருமானை வேட்டைக்கொரு மகன் என்ற பெயரில் வேடுவன் (கிராத மூர்த்தி) வடிவத்தில் Vettakkorumakan Temple வணங்கும் 150 கோவில்கள் கேரளத்தில் உள. அவை பாலுசேரி, நீலாம்பூர், காயங்குளம் கிருஷ்ணாபுரம், எருவட்டிக்காவு, ஆலப்படம்பா, நீலேஸ்வரம், கோட்டக்கல், கோழா, ஒலசா படிஞ்சாரேப்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன.

அர்ஜுனன், சிவ பெருமானை வேண்டி பாசு பத அஸ்திரம் பெற்ற கதை எல்லோருக்கும் தெரியும்; காட்டில் சிவனை நோக்கி தவம் செய்கையில் மூகன்  என்ற அசுரன் பன்றியாக வந்து தவத்தைக் கலைக்கவே அர்ஜுனன் அம்பு எய்தான்; வேடர்கள் உருவத்தில் சிவனும் பார்வதியும் வந்திருந்ததால் சிவனும் பன்றி மீது அம்பு விட்டார். பன்றி இறந்தவுடன் யார் விட்ட அம்பு பன்றியைக் கொன்றது யார்?என்று பட்டிமண்டபம் நடத்தினர். அது கைகலப்பில் முடிந்தது; சிவன் மீது அர்ஜுனன் விட்ட அம்புகளை எல்லாம் வேட்டுவச்சி பார்வதி மலர் அம்புகளாக மாற்றினாள் . சிவனை வேட்டைக்கொரு மகன் என்று அழைத்து பழங்குடி இன மக்கள் கோவில் எழுப்பினர் .

பாலுசேரி என்னும் ஊர் கோழிக்கோட்டிலிருந்து 25 கே.மீ. வட கேரளம் எனப்படும் மலபார் பகுதியில் வேட்டக்கொரு மகன் கோவில்கள் அதிகம். அந்த வட்டார ராஜ வம்சத்தினர் அவரை வழிபட்டனர் .

ஐயப்பனை ஹரிஹர புத்ரன் என்று அழைப்பது போலவே வேட்டைக் கொரு மகனையும் சிவன்-    பார்வதி பிள்ளை என்று கருதும் கதையும் உண்டு. அவன் சிறுவயதில் அதிக விஷமங்களைச் செய்யவே,  கானகம் வாழ் ரிஷி முனிவர்கள் கவலையுற்று இறைவனிடம் முறையிட்டனர் விஷ்ணுவும் வேடன் போல வந்து ஒரு தங்க சூரிகாவை (கத்தி) காட்டினார்; அதை அவன் வேண்டவே, மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவனிடம் அளித்தார். அவன் முதலில் நுழைந்த இடம் பாலுசேரி கோட்டை.

அங்குள்ள கோவிலில் கொடி மரமும் கோபுரமும் இல்லை. ஆயினும் வருவோருக்கு எல்லாம் உணவு படைக்கப்படும் பாடல்கள் மூலம் வழிபடும் வினோத வழக்கம் இருக்கிறது ; அது தவிர பெரிய உருவத்தில் சித்திரங்களை வரைந்து, விழா முடிந்த பின்னர் அந்த வண்ணப்பொடியை விபூதி போல பிரசாதமாக வழங்கும் வழக்கமும் இருக்கிறது. ஆண்டுதோறும் ஐயப்பன் மண்டலபூஜை காலத்தில் 41 நாள் உற்சவம் நடக்கும் ;நாற்பத்தி ஒன்றாம் நாளில் வேட்டக்கொருமகன் உருவம் தரையில் சித்திரமாக வரையப்பட்டு, மிகப்பெரிய அளவிலான பூஜை செய்யப்படுகிறது. சில கோவில்களில் இவ்வுருவம் 20x 12 அடி நீள அகலம் இருக்கும் .

பெரும்பாலான  கோவில்களில் இரண்டு கரங்கள் மற்றும் உருட்டி விழிக்கும் கண்கள், தாடி, முறுக்கு மீசையுடன் வேடன் உருவில், வலது தோளின் பின்புறம் அம்புறாத்துணி, வலக்கையில் உடைவாள், இடக்கை வேல், வில் இரண்டையும் சேர்த்துப் பிடித்திருக்க, கால்களில் தண்டை அணிந்த நிலையில் காட்சி தரும் வேட்டைக்கொரு மகன் படங்களே வழிபாட்டில் உள்ளன. சில இடங்களில் மட்டும் இதே உருவத்தில் சிலைகள் இருக்கின்றன ; இவரை வணங்கினால் பயம் விலகும் என்பது நம்பிக்கை .

பகவதி கோவில்களில் நடத்தப்பெறும் ‘களமெழுத்துப் பாட்டு’ போன்று இக்கோவிலிலும் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவின் போது தேங்காய் எறிச்சல், வெளிச்சப்பாடு ஆகியன நடக்கும்

பந்தீராயிரம் விழா : இந்தக் களமெழுத்துப் பூஜையின் போது இங்குள்ள இறைவனை மகிழ்விக்கச் செய்யும் சடங்காக ‘வேட்டக்கொருமகன் பாட்டு’ இடம் பெறுகிறது. இப்பாட்டின் ஒலிக்கேற்ப 12,000 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.

–SUBHAM–

TAGS- வேட்டைக்கொரு மகன்,  கோவில்கள் , 12000 தேங்காய் , களமெழுத்துப் பாட்டு, கிராதமூர்த்தி, பாசுபத அஸ்திர கதை, திருச் சம்பரம், கிருஷ்ணன் கோவில், பாலுசேரி

Leave a comment

Leave a comment