Date uploaded in London – – 29 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 41
கோவில் எண்கள் –47,48,49, 50
47.பெருவனம் மஹாதேவன் கோவில்
த்ரிசூர் மாவட்டத்தில் பெருவனம் சிவன் கோவில் இருக்கிறது.
சிறப்பு அம்சங்கள்
மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது; ஒரு ஹெக்டேர் பரப்புக்கு வியாபித்த பெரிய கோவில் இது.
சதுர வடிவ கர்ப்பக்கிரகம் இதன் பழமைக்கு சான்று பகர்கிறது
மூன்று நிலைக்கோபுரம்; அறுகோண வடிவ கூரை.
கருவறையிலுமும் வெளிப்புறச் சுவர்களிலும் உள்ள சிற்பங்களைக் காண்பதற்காக கலை ரசிகர்கள் படை எடுக்கிறார்கள் .
வெளியே இருக்கும் நாலம்பலத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.விழாக்காலத்தில் கோவில் ஜெகஜ்ஜோதியாகத் திகழும்.
ஆண்டு விழாவின்போது ஆராட்டுப்புழா , சேர்ப்பு, ஊரகம் , சாத்தான்கூடம் கோவில்களிலிருந்து வரும் யானை ஊர்வலங்கள் இங்கே கூடும். பஞ்சாரி மேளம், பாண்டி மேளங்களைக் கொட்டி முழக்குவர் .
அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பைக் கண்டு களிக்க , பெரும் கூட்டம் கூடும்.
48.கூர்க்கான்சேரி மகேஸ்வரன் கோவில்
சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு கட்டிய இந்த மகேஸ்வரன் கோவில் கோவில், த்ரிசூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கிறது . இங்கு நடக்கும் தைப்பூச மகோற்சவம் 7 நாட்களுக்கு நடக்கிறது.அப்போது மகேஸ்வரன் மகனான சுப்ரமண்ய சுவாமிக்கு நேர்த்திக் கடனாக காவடி ஆடுவோர் பெரும் திரளாக வருகிறார்கள். கடைசி நாள் விழாவில் காவடி ஆட்ட ஊர்வலம் நடக்கும். 10 குழுக்கள் காவடிகளைச் சுமந்து ஆடிக்கொண்டு செல்லுவார்கள்.ஒவ்வொரு குழுவிலும் 30 அம்பலக் காவடிகளும் 60 பூக் காவடிகளும் இருக்கும் .
அப்லக் காவடி என்பது கோவில் வடிவக் காவடி ; ஒவ்வொன்றும் 6 முதல் 10 அடி உயரம் வரை இருக்கும். காவடி ஆட்டம், மயிலாட்டம் முதலிய கிராமீய கூத்துக்கள் பகலிலும், பின்னர் இரவிலும் நடக்கின்றன யானை ஊர்வலம், வாண வேடிக்கைகள், கொட்டு மேளம் ஆகியவையும் இருக்கும். இந்த உத்சவம் தவிர, ஓணம் பண்டிகையின்போது ஓணக்களி கொண்டாடப்படும்.
49.ஆராட்டுப்புழா ஐயப்பன் கோவில்
த்ரிசூர் நகரிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் ஆராட்டுப்புழா ஐயப்பன்/ தர்ம சாஸ்தா கோவில் இருக்கிறது இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் 7 நாட்களுக்கு பூரம் விழா நடைபெறும். அதில் ஐந்தாம் நாள் பரவெப்பு நடக்கும். உற்சவ மூர்த்தியான திடம்பு அலங்கரிக்கப்பட்ட யானையில் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து 8 யானைகள் வரும். யானைகளுக்கு பக்தர்கள் பழங்கள் , வெல்லம் முதலியன அளிப்பர் ; ஆறாவது நாள் விழா தரிசனத்துக்கு உரியது அதுதான் பூரம் விழா. 61 யானைகள் அணிவகுத்து நிற்கும். பஞ்ச வாத்யம், நாதஸ்வரம் முழங்கும் . மறுநாள் ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் .
திருப்ரையார் ராமர் கோவிலில் உள்ள பள்ளியோடம் என்னும் படகில் ராமபிரான் எழுந்தருளுவார் .
பொன்னால் அலங்கரிக்கப்பட்டுள்ள அப்பள்ளியோடத்தின் ஒரு புறம் வாலில் மணி தொங்க, மண்டியிட்டு அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி அமர்ந்த கோலத்தில் அனுமன் உருவம் இருக்கும் . இப்பள்ளியோடத்தில் மீன மாதம்(பங்குனி) இராமசந்திர மூர்த்தி தீவ்ரா நதியை கடந்து ஆராட்டுபுழா தர்மசாஸ்தா ஆலயத்திற்கு பூரம் உற்சவம் காண எழுந்தருள்கின்றார்.
Picture from natarajan blog; thanks. (see the picture in swamiindolog.blogspot.com)
பள்ளியோடம் என்பது கேரள மாநிலத்தில் இந்துக் கோவில்களில் பயன்படுத்தப்படும் பெரிய படகுகள். இப்படகுகளில் 100 முதல் 120 ஆட்கள் வரை செல்ல முடியும். இப்படகுகள் அஞ்சிலி மரம் என்னும் மரத்தினைக் கொண்டு செய்யப்படுகின்றன.
Paḷḷiyōṭam (பள்ளியோடம்) [paḷḷi-ōṭam] noun < பள்ளி [palli] +. A kind of boat; படகுவகை. [padaguvagai.] (சிலப்பதிகாரம் அரும்பதவுரை [silappathigaram arumbathavurai] 14, 74, உரை. [urai.])
50.திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்
த்ரிசூர் நகரின் முக்கியக்கோவிலான வடக்குநாதன் / சிவன் கோவிலிலி ருந்து ஒரு கி.மீ தொலைவில் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. திருசூர் பூரம் விழாவில் திருவம்பாடி அணியும் பரமேக்காவு அணியும் போட்டா போட்டியில் இறங்கும். யானைகளின் எண்ணிக்கை, வாண வேடிக்கைகள், கொட்டு மேளம், ஏனைய கூத்து வகைகளில் போட்டி இருக்கும்
ஏப்ரல் மாதம் நடக்கும் பூரம் விழாவில் எட்டாம் நாள் விழாதான் முக்கியமானது ; வட்டாரக் கோவில்களிலிருந்து புறப்படும் ஊர்வலங்கள் வடக்கு நாத சிவனை தரிசனம் செய்த பின்னர் அருகிலுள்ள மைதானத்தில் எதிரும் புதிருமாக நிற்பார்கள்; அப்போது வண்ணக்குடைகளை மாற்றுதல், , குடமட்டம் நடக்கும். பல்வேறு தாளத்தில் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மேளங்களைக் கொட்டுவர். ஒவ்வொரு அணியும் அதிக பட்சம் 15 யானைகளைக் கொண்டுவரலாம்.. திருவம்பாடி கோவில் பஞ்ச வாத்யம் புகழ்பெற்றது. அதிகாலையில் துவங்கும் வாண வேடிக்கைகள் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் .
இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள் குழந்தை வடிவில் கிருட்டிணன், பத்திரகாளி தேவியுமாவர். இங்கு இருவருக்கும் சமமான வழிபாடு உண்டு .பிள்ளையார், சாஸ்தா, பிரம்மராட்சர்கள் ஆகியோருக்கு உப சந்நிதிகள் உள்ளன. பகவத் கீதை பாராயணம் கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். கோவில் நிர்வாகம் மக்களுக்கு தினமும் மதிய உணவை இலவசமாக வழங்குகிறது.
—SUBHAM—
TAGS- பள்ளியோடம், ஆராட்டுப்புழா, ஐயப்பன், கோவில் கூர்க்கான்சேரி மகேஸ்வரன், பெருவனம் மஹாதேவன் கோவில், திருவம்பாடி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்