சமயக் குரவர் நால்வரின் வயது, நட்சத்திரம், அவதாரச் சிறப்பு! (Post.12,864)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,864

Date uploaded in London –  –  30  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சமயக் குரவர் நால்வரின் வயதுநட்சத்திரம்அவதாரச் சிறப்பு!

ச.நாகராஜன்

சைவ சமயம் தழைத்தோங்க அவதரித்த நால்வரைப் பற்றிய விவரங்களை ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்.

அதை விளக்கும் பாடல்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சமயக் குரவர் நால்வரின் வயது

அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்கு

செப்பிய நாலெட்டிற் றெய்வீகம் – இப்புவியிற்

சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்

கந்தம் பதினா றறி.

அப்பரின் வயது 81.

81 வருடங்கள் அவர் புவியில் வாழ்ந்து பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் போற்றிப் பாடினார்.

வாதவூரர் எனப் புகழ் பெற்ற மாணிக்கவாசகருக்கு வயது 32. அவர் திருவாசகத்தைப் பாடி அருளினார்.

சுந்தரருக்கு வயது வயது 18.

18 வயதுக்குள் அவர் ஆற்றிய தெய்வீக விளையாடல்கள் பல. அவர் தலம் தோறும் சென்று தேவாரப் பாடல்களைப் பாடி அருளினார்.

திருஞானசம்பருக்கு வயது 16.

16 வயதுக்குள் முதல் மூன்று திருமுறைகளில் உள்ள தேவாரப் பாடல்களை அவர் பாடி அருளினார். அவர் ஆற்றிய தெய்வீகத் திருவிளையாடல்கள் பல.

நால்வரின் நட்சத்திரம்

நால்வரின் நட்சத்திரம் குறித்த பாடல் இது.

பாடிய சம்பந்தர் வைகாசி மூலம் பயிலுமப்பர்

நீடிய சித்திரை மாதச் சதயம் நிறைவன்றொண்டர்

ஆடியிற் சோதி திருவாத வூரர்நல் லானிமகந்

தேடிய சேக்கிழார் வைகாசிப் பூசஞ் சிறந்தனரே.

சம்பந்தர் – வைகாசி மாதம் மூலம்

அப்பர் – சித்திரை மாதம் சதயம்

வன்றொண்டர் எனப்படும் சுந்தரர் – ஆடி மாதம் சுவாதி

திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகர் – ஆனி மாதம் மகம்

சேக்கிழார் – வைகாசி மாதம் பூசம்

நால்வரின் அவதாரச் சிறப்பு

நால்வரின் அவதாரச் சிறப்பு குறித்த பாடல் இது.

சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலுமென் சுந்தரனும்

சிற்கோல வாதவூர்த் தேசிகனு – முற்கோலி

வந்திலரே னீறெங்கே மாமறை நூல் தானெங்கே

எந்தைபிரா னைந்தெழுத் தெங்கே

அப்பரும் சம்பந்தரும் சுந்தரும் வாதவூர் மாணிக்கவாசகரும் தோன்றவில்லை எனில் திருநீறு இல்லை, மாமறை நூல் இல்லை, ஐந்தெழுத்தும் இல்லை அல்லவா?

திருஞானசம்பந்தர் – குலம் அந்தணர்; நாடு – சோழ நாடு; ஊர் – சீர்காழி; வழிபாடு – குரு

அருளிய பதிகங்கள் 385 பாடல்கள் 4169 முதல் மூன்று திருமுறைகளில் இவை அடங்கியுள்ளன

திருநாவுக்கரசர் (அப்பர்) – குலம் வேளாளர்; நாடு – நடு நாடு; ஊர் – திருவாமூர்; வழிபாடு – குரு

அருளிய பதிகங்கள் 312 பாடல்கள் 3066 நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளில் இவை அடங்கியுள்ளன.

சுந்தரர் – குலம் ஆதிசைவர்; நாடு – நடு நாடு; ஊர் – திருநாவலூர்; வழிபாடு – குரு

அருளிய பதிகங்கள் நூறு. பாடல்கள் 1026. இவை ஏழாம் திருமுறையில் உள்ளன.

மாணிக்கவாசகர் – குலம் –  அந்தணர்    நாடு- பாண்டிய நாடு   ஊர் –  திருவாதவூர்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன. பாடல்கள் 658. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.

திருக்கோவையாரில் 25 அதிகாரங்கள் உள்ளன. பாடல்கள் 400. இவை எட்டாம் திருமுறையில் அடங்கியுள்ளன.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்

பாடலின் பொருள் :

திருக்குறள், ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் முடிவு, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரம், முனிவர்கள் மொழி, திருக்கோவையார் மற்றும் திருவாசகம், திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வாசகமே. அதாவது உணர்த்துகின்ற மெய்ப்பொருள் ஒன்றேயாம்.

 இவற்றைக் கற்போம்; உயர்வோம்!

***

Leave a comment

Leave a comment