
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,879
Date uploaded in London – – – 3 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யானையைப் பரிசாகப் பெற்ற புலவர் வீரராகவ முதலியார்!
ச.நாகராஜன்
இராமன் என்றொரு வள்ளல் வாழ்ந்து வந்தார். அவரைச் சந்தித்தார் கவி வீரராகவ முதலியார்.
அவரைப் பாடிப் புகழ்ந்தவுடன் ராமன் அவருக்கு பரிசாக ஒரு யானையைக் கொடுத்தார்.
யானையை வீட்டிற்குக் கொண்டு வந்தார் புலவர்.
வீட்டில் பாணி (பாடினியானவள்) அவரை நோக்கி, “பாணரே! இராமன் என்ற வள்ளலைப் பார்க்கச் சென்றிருந்தீரே! அவர் என்ன கொடுத்தார்? என்ன கொண்டு வந்தீர்” என்று கேட்டாள்.
அதற்குப் புலவர் பிரான் தான் கொண்டு வந்தது யானை என்று சொல்லாமல் யானைக்கு பரியாயப் பெயர்களான மாற்றுப் பெயர்களைக் கூறினார்.
ஒவ்வொரு பெயருக்கும் அதன் உண்மைப் பொருள் புரியாத அவரது மனைவி அவரைக் கிண்டல் செய்தாள்.
அது தான் இந்தப் பாடல்:
இம்பர்வா நெல் லையிரா மனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ யென்றாள் பாணி
வம்பதாங் களபமென்றேன் பூசு மென்றாள்
மாதங்க மென்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் றின்னு மென்றாள்
பகடென்றே னுழுமென்றாள் பழனந் தன்னைக்
கம்பமா வென்றெனற் களியா மென்றாள்
கைம்மாவென் றேன்சும்மா கலங்கினாளே
பாடலின் பொருள் :
பாணி – பாடினியானவள் (புலவரின் மனைவியானவள்)
பாணா – பாணனே
இம்பர்வான் எல்லை இராமனையே பாடி – இவ்வுலகமும் அவ்வுலகமும் தன் புகழின் எல்லைகளாகக் கொண்டு விளங்கும் இராமன் என்பவனைப் பாடி
நீ என் கொணர்ந்தாய் – நீ என்ன பொருள் கொண்டு வந்தாய்?
என்றாள் – என்று என்னை நோக்கி வினவினாள்
(அதற்கு விடையாக நான்)
வம்பது ஆம் களபம் என்றேன் – புதுமையாகிய களபம் என்றேன்
அதற்கு அவள்
பூசும் என்றாள் – அதைப் பூசுவீர் என்றாள்.
மாதங்கம் என்றேன் – மாதங்கம் என்று சொன்னேன்
நாம் வாழ்ந்தோம் என்றாள் – நாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்புசீர் வேழம் என்றேன் – மிக்க சிறப்பினை உடைய வேழம் என்று சொன்னேன்
தின்னும் என்றாள் – அதைத் தின்னுவீர் என்றாள்
பகடு என்றேன் – பகடு என்று சொன்னேன்
பழனம் தன்னை உழும் என்றாள் – வயலை உழுவீர் என்று சொன்னாள்
கம்பமா என்றேன் – கம்பமா என்று சொன்னேன்
நல் களி ஆம் என்றாள் – நல்ல களியைக் கிளறலாம் என்றாள்
கைம்மா என்றேன் – கைம்மா என்று சொன்னேன்
அதன் பொருள் தெரியாததால்
சும்மா கலங்கினாள் – சும்மா கலங்கி நின்றாள்
பாடலில் வரும் சொற்களுக்கு இரு பொருள் உண்டு. வரிசையாகப் பார்ப்போம்.
களபம் என்றாள் யானை. ஆனால் பாடினி புரிந்து கொண்டதோ களபச் சந்தனம் என்று. ஆகவே இவ்வளவு தானா, அதை எடுத்துப் பூசும் என்றாள் அவள்.
உடனே புலவர் மாதங்கம் என்று யானையைச் சொன்னார். மா தங்கம் என்று புரிந்து கொண்ட பாடினி உயர்ந்த பொன்னையா கொண்டு வந்தீர் நாம் வாழ்ந்தோம் என்றாள்.
புலவர் வேழம் என்றார். வேழத்திற்குக் கரும்பு என்று பொருள் கொண்ட பாடினி அதைத் தின்னும் என்றாள்.
புலவர் பகடு என்று யானையைக் கூறினார். பகடுக்கு எருமை என்ற பொருள் கொண்ட பாடினி அதனால் வயலை நன்கு உழுவீர் என்றாள்.
புலவர் கம்பமா என்றார். கம்பமா என்பதற்கு கம்பை அரைத்துச் செய்த மா என்று பொருள் கொண்ட அதை வைத்து நன்கு களி கிளறலாம் என்றாள்.
கடைசியாக புலவர் கைம்மா என்று கூறினார்.
கைம்மாவிற்குப் பொருள் விளங்காத மனைவி சும்மா கலங்கி நின்றாள்.
பின்னர் புலவர் யானையைக் காண்பிக்க மனைவி மகிழ்ந்தாள்.
இன்னொரு வள்ளல் அவருக்குத் தானன் என்று பெயர். அவரும் புலவருக்கு ஒரு யானையைப் பரிசாகத் தந்தார்.
புலவர் பாடினார்:
இல்லெனுஞ் சொல் லறியாத சீகையில் வாழ் தானனைப் போயாழ்பாணன் யான்,
பல்லை விரித் திரந்தக்கால் வெண்சோறும் பழந் தூசும் பாலியாமல்
கொல்ல நினைந் தேதனது நால்வாயைப் பரிசென்று கொடுத்தான் பார்க்குள்,
தொல்லையென தொருவாய்க்கு நால்வாய்க்கு மிரையெங்கே துரப்புவனே.
பாடலின் பொருள் :
இல் என்னும் சொல் அறியாத – இல்லையென்று சொல்லும் சொல்லை அறியாத
சீகையில் வாழ்த் தானனை – சீகை என்னும் ஊரில் வாழும் தானன் என்பவனை
பாணன் யான் போய் – பாணனாகிய நான் போய்
பல்லை விரித்து இரந்தக்கால் – பல்லைக் காட்டி யாசித்தபோது
வெண்சோறும் – வெண்மையாகிய அன்னத்தையும்
பழம் தூசும் – பழைய வஸ்திரத்தையும்
பாலியாமல் – கொடுக்காமல்
கொல்ல நினைந்து – (என்னைக்) கொல்ல எண்ணி
தனது நால்வாயை – தனது நால்வாயினை
பரிசென்றே கொடுத்தான் – எனக்குப் பரிசு என்று கொடுத்தான்
பார்க்குள் – உலகத்தில்
தொல்லை எனது ஒரு வாய்க்கும் – பழைய எனது ஒரு வாய்க்கும்
நால்வாய்க்கும் – (இப்போது பெற்ற) நால்வாய்க்கும்
இரை எங்கே துரப்புவேன் – உணவு எங்கே கொண்டு வந்து நிறைப்பேன்?
நால்வாய் என்றால் நான்கு வாய் என்றும் தொங்குகின்ற வாயினை உடைய யானை என்றும் பொருள்.
ஆக ஒரு வாய்க்கு இரை பெறாத நான் ஐந்து வாய்க்கு (அல்லது எனக்கும் யானைக்கும்) எப்படி உணவைச் சம்பாதித்துக் கொடுப்பேன் என்று பொருள் அமைகிறது.
கவி வீரராகவ முதலியாரின் கவித் திறமையை விளக்கும் பலத் தனிப்பாடல்கள் உண்டு. அனைத்துமே அருமையானவை!
***
tags-வீரராகவ முதலியார்