தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த மேதை!-Part 2 (Post.12,925)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,925

Date uploaded in London –  –   17 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தாமஸ் ஆல்வா எடிஸன் – உழைப்பால் உயர்ந்த மேதை!

இன்னும் ஒரு முறை முயற்சிக்க வேண்டும்! – 2

ச.நாகராஜன்

1093 கண்டுபிடிப்புகள்!

எடிஸன் தனது 84ஆம் வயதில் 1931ஆம் வருடம் அக்டோபர் மாதம் 18ஆம் தேதியன்று மறைந்தார். அப்போது அவர் பெயரில் அமெரிக்காவில் மட்டும் 1093 வடிவமைப்புக்கான உரிமையைப் பெற்றிருந்தார். இவற்றில் 389 மின்சக்திக்காக; 195 போனோகிராபுக்காக 150 டெலகிராபிற்காக; 141 ஸ்டோரேஜ் பேட்டரிகளுக்காக; 141 டெலிபோனுக்காக. இது தவிர இன்னும் 34 நாடுகளில் 1239 வடிவமைப்பு உரிமைகளையும் அவர் பெற்றிருந்தார்.

சில சுவையான சம்பவங்கள்

எடிஸனைப் பற்றிய ஏராளமான சுவையான செய்திகள் உண்டு. ஒவ்வொரு சம்பவமும் அவரது ஆளுமையின் ஒரு பரிமாணத்தைக் காண்பிக்கும்.

1914ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி அவரது தொழிலகம் ஒன்றில் தீப்பிடித்தது. உடனடியாக ‘காணற்கு அரிதான இந்தக் காட்சியைப்’ பார்க்க வருமாறு தன் மனைவியை அவர் உடனே அழைத்தார். எந்த விதமான சம்பவங்களினாலும் அவர் அதிர்ச்சி அடைவதில்லை. மீண்டும் தனது தொழிலகத்தைப் புதுப்பித்தார்.

மின்சார பல்பை அவர் கண்டுபிடித்தவுடன் உதவியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். எடிஸன் தனது ஆபீஸ் பையனைக் கூப்பிட்டு அதை சோதனை செய்யுமாறு கூறினார்.

ஆனால் மிக்க நடுக்கத்துடன் அதை ஏந்திச் சென்ற அவன் தவறுதலாக அதைக் கீழே போடவே அது உடைந்து விட்டது. கோபத்தினால் தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவார் என்று பயந்தான் அவன்.

ஆனால் எடிஸனோ இன்னுமொரு பல்பைச் செய்து அவனிடம் கொடுத்து சோதனை செய்யச் சொன்னார். உதவியாளர்கள் அவரிடம் ‘எதற்காக அவனிடம் இன்னொரு பல்பைக் கொடுக்கிறீர்கள், இதையும் அவன் உடைத்து விட்டால் என்ன செய்வது’ என்று கேட்ட போது எடிஸன் கூறினார்:

“இன்னொரு புதிய பல்பை 24  மணி நேரத்தில் நான் செய்து விட்டேன். ஒருவேளை அவன் இதையும் உடைத்து விட்டால் இன்னொரு 24 மணி நேரத்தில் இன்னொரு புதிய பல்பை என்னால் செய்ய முடியும். ஆனால் இதே வேலையை அவனிடம் நான் கொடுக்காவிட்டால் அவனுக்குத் தன் மீது இருக்கும் நம்பிக்கையே போய்விடும். அந்த தன்னம்பிக்கையை அவன் பெறவே முடியாமல் போய் விடும். அப்படி அவன் தனது தன்னம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அவனிடமே இதைக் கொடுத்தேன். இந்த முறை அவன் சோதனை செய்து விட்டான் என்றால் ஆயுள் முழுவதும் அவன் தன்னம்பிக்கையுடன் இருப்பான்” என்றார்.

‘இது தான் எடிஸன்’ என்று அனைவரும் அவரைப் பாராட்டினர்.

ஒருமுறை அவர் சிரித்தவாறே தன் அருகிலிருந்தோரிடம் கூறினார் இப்படி : “நான் இரண்டு முறை வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன்.

“முதலில் ஒரு அலுவலகத்தில் நான் டெலிபோன் ஆபரேட்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மெஷின் மீது எனக்கு அபாரமான ஈடுபாடு வந்து விடவே அதையே ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அதனால் வந்த செய்திகளை அனுப்புவதற்கு மறந்து விட்டேன். அவ்வளவு தான் என்னை வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.”

“இன்னொரு ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு எலிகள் செய்யும் அட்டகாசம் பொறுக்க முடியாதபடி இருந்தது. ஆகவே அவற்றைப் பிடித்துக் கொல்வதற்கு ஒரு கருவியைச் செய்தேன். அவ்வளவு தான், ஆபீஸ் முழுவதும் எலிகளின் சிதறுண்ட உடல்களாக இருந்தது. அறையைப் பார்த்தவர்கள் என்னை வேலையை விட்டுத் தூக்கி விட்டனர்”.

எதனாலும் மனம் தளராத அவர் ஏராளமான வழக்குகளையும் போட்டியாளர்களின் சவால்களையும் தனது வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. ஆனால் அனைத்தையும் எதிர்கொண்டார் அவர். கற்பாறையிலிருந்து அதன் தாதுவைப் பிரிக்க முயன்று பல்லாயிரம் டாலரை அவர் இழந்தார். எதிர்பாராத தோல்விகளினாலும் அவர் மனம் தளரவில்லை.

ஆனால் கடுமையான உழைப்புக்கும் சீரிய சிந்தனைக்கும் மாற்றாக ஒன்று உலகத்திலேயே இல்லை என்பதை அவர் நிரூபித்தவாறே வாழ்ந்து வந்தார்.

ஷேக்ஸ்பியர் கவிதைகளில் மிக்க ஆர்வம் கொண்டு நடிகராக விரும்பிய எடிஸன் அரங்கத்தில் இருந்து நடிக்க வெட்கப்பட்டு அந்த ஆசையை விட்டு ஆகப் பெரும் அறிவியல் கண்டுபிடிப்பாளராக மாறினார்.

எடிஸன் வாழ்க்கை தரும் பாடங்கள்!

எடிஸன் வாழ்க்கை கற்பிப்பது மிக முக்கியமான இரு பாடங்களை!

முதலாவது – : நமது மிகப்பெரிய பலஹீனம் ஒரு காரியத்தை பாதியில் விட்டு விடுவது தான். இன்னும் ஒரு முறை முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்.

இரண்டாவது – வெற்றி அடைய புத்திசாலித்தனம் என்பது ஒரு சதவிகிதம். 99 சதவிகிதம் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனுமான கடுமையான வியர்வை சிந்தும் உழைப்பே.

10-1-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

***

Leave a comment

Leave a comment