
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,929
Date uploaded in London – – 18 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் நாளிதழில் 17-1-2024 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
கனவு காணுங்கள்; கனவை நனவாக்குங்கள் – இளைஞர்களின் வழிகாட்டி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் – 1
ச.நாகராஜன்
அதிசய மனிதர் அப்துல்கலாம்

இந்தியாவின் தலைசிறந்த மாமனிதருள் ஒருவராகத் திகழ்ந்ததோடு இளைஞர்களுக்கு ‘கனவு காணுங்கள், அதை மெய்ப்பிக்க உழையுங்கள்’ என்ற தாரக மந்திரத்தைத் தந்தவர் மக்கள் தலைவராகத் திகழ்ந்த பெரும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வதே இளைஞர்கள் வெற்றியின் முதல் படியில் காலடி வைத்தது போலாகும்.
பிறப்பும் இளமையும்
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A.P.J. Abdul Kalam) தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் படகு ஒன்றின் சொந்தக்காரராகத் திகழ்ந்த ஜைனுலாப்தீன் மற்றும் அவரது மனைவி ஆஷியம்மாவிற்கு ஐந்தாவது மகனாக 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார்.
மிக வறுமையான பின்னணி. ஆகவே குடும்பத்திற்கு வருமானம் சேர்க்கும் வகையில் பள்ளி நேரம் போக மற்ற நேரத்தில் வேலைக்குச் சென்றார். செய்தித்தாள்களை அன்றாடம் விநியோகம் செய்யத் தொடங்கினார்.
இராமேஸ்வரத்தில் தொடக்கப்பள்ளியில் தன் கல்வியை ஆரம்பித்த கலாம் திருச்சிக்குச் சென்று 1954ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். 1955இல் சென்னை எம்.ஐ.டி.-யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்து முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
படைப்பாற்றல் திறனுடன் கூடிய அதிக உழைப்பு, இன்னும் அதிக உழைப்பு – இதற்கு இலக்கணமாக இளமையிலிருந்தே திகழ்ந்தார் கலாம். முடிக்கவே முடியாத ஒரு திட்டத்தைக் கொடுத்த ஒரு முதல்வர் அதை இரண்டு நாளில் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை விதித்தார். இராப்பகலாக உழைத்து இரண்டே நாட்களில் அதை முடித்து சாதனையை நிகழ்த்தினார் கலாம்.
விஞ்ஞானி கலாம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (Defence Research and Development Organisation எனப்படும் டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானியாகச் சேர்ந்த கலாம் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட கலாம் இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை ஏவும் ஊர்தியைச் செய்யும் திட்டத்தின் இயக்குநர் ஆனார். சாடலைட் லாஞ்ச் வெஹிகிள் எனப்படும் இந்த ஊர்தி உருவாக்கப்பட்டு, ரோஹினி என்ற செயற்கைக் கோளை புவி ஓடுபாதையில் 1980இல் வெற்றிகரமாக ஏவியது.

மெழுகுவர்த்தியில் பிறந்த அக்னி ஏவுகணை
கலாம் சுற்றுப்புறச்சூழலின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் உழைத்தார். டிஆர்டிஓவின் தலைவராகத் திகழ்ந்த கலாம் அக்னி ஏவுகணையை வடிவமைப்பதில் ஈடுபட்டார். 20 மீட்டர் நீளமுள்ள இந்த சாலிட் ப்ரொபல்ட் பாலிஸ்டிக் மிஸைல் (Solid-propelled ballistic missile) 16 டன் எடையைக் கொண்டது. இதன் பே- லோட் 1000 கிலோ ஆகும்.
இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
வீலர் (Wheeler) என்ற தீவு ஒரிஸாவின் தெற்குக் கடற்கரையில் பிதர்கணிகா காடுகளுக்கு அருகில் உள்ளது. இதுவே அக்னி – || ஏவுகணையைச் சோதனை செய்ய வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தக் கடற்கரை பிரதேசத்திற்கு அருகில் உள்ள கடலில் மிகவும் அரிதாகக் காணப்படும் ஒருவகை ஆமைகள் ஏராளமாக உள்ளன.
இவற்றை ஆலிவ் ரிட்லி டர்டில் (Olive Ridely turtles) என்பர். நம்ப முடியாத தூரத்திலிருந்து பயணப்பட்டு அவை இங்கு வருவது வழக்கம். ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் குஞ்சு பொறிக்கும் ஒரு வகை விசேஷமான ஆமைகள் இவை.
நவம்பரில் வரும் இவை மார்ச் முடிய இங்கே தங்கும். குஞ்சுகள் பொறிக்கப்பட்டவுடன் திரும்பித் தமது இடம் நோக்கிச் செல்லும்.
ஆகவே சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அப்துல்கலாம் அவர்களிடம் மார்ச்சுக்கு பிறகு அக்னி ஏவுகணை சோதனையை வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை கூறினர்.
சுற்றுப்புறச் சூழலில் பெரிதும் ஆர்வம் கொண்ட அப்துல்கலாம் உடனே இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
உடனடியாக ஒரு ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி இந்தத் தளத்தில் இருந்த அனைத்து விஞ்ஞானிகளும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தனர்.
ஒருவிதமான மின் விளக்கும் எரியவிடப்படவில்லை. ஏனெனில் அவை ஆமைகளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று.
சுமார் ஐந்து மாதங்கள் இப்படி மெழுகுவர்த்திப் பணி தொடர்ந்தது.
விசேஷ விருந்தாளிகளான இந்த ஆமைகள் தமது சந்ததி விருத்திப் பணி முடித்து மீண்டும் சொந்த இடம் நோக்கிப் பயணப்பட்டபின் ஆய்வு வேலைகள் முழு வீச்சில் நடைபெற ஆரம்பித்தன.
1999ஆம் ஆண்டு ஏப்ரல் 11 – நிர்ணயிக்கப்பட்ட தேதியில் சோதனை நடந்தது; வெற்றி பெற்றது. இது 2004ஆம் ஆண்டு உரிய முறையில் நமது ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
அடுத்து ப்ரித்வி ஏவுகணைத் திட்டத்தையும் அவர் வெற்றிகர மாக்கினார்.
மக்கள் அவரை ஏவுகணை மனிதர் என்று செல்லமாகப் போற்றி அழைக்கலாயினர்.
*** தொடரும்