
Post No. 12,936
Date uploaded in London – – 20 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரை!
ராம நாம மஹிமை – 1
ச.நாகராஜன்
அயோத்தியில் 2024 ஜனவரி மாதம் 22ஆம் தேதி மாபெரும் உற்சவம் நடைபெற இருக்கிறது.
ராமர் கோவிலில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.
வரலாற்றில் மகோன்னத சிறப்பைக் கொண்டிருக்கும் இந்த தெய்வீகத் திருவிழா உலக மக்கள் அனைவருக்கும் நலத்தைத் தரும்.
500 ஆண்டுகளாக பக்தர்கள் கனவு கண்டு அதற்காகப் பாடுபட்ட இந்தக் கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படும் விழா ஹிந்துக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை.
ராமரே இதற்கென படைத்தது போல் இன்று பிரதமராக இருக்கும் திரு நரேந்திர மோடியின் அயராத உழைப்பும் ஈடுபாடும் அர்ப்பணிப்பு மனப்பான்மையும் போற்றுதற்குரியது.
மக்கள் இதற்கு உற்சாகத்துடனும், பக்தியுடனும், ஆவேசத்துடனும் தரும் ஒத்துழைப்பு வரலாறு காணாதது.
இது இந்த பாரத தேசத்தின் மக்களின் திருவிழாவாக ஆகி விட்டது.
இந்த நேரத்தில் ராமரின் உறுதிமொழியையும், ராம நாம மஹிமை பற்றி மகான்கள் அருளிய சில அருளுரைகளையும் காண்போம்.
ராமரின் உறுதி மொழி
सकृर्देव प्रपन्नाय थवास्मॆति च याचते
अभयं सर्वभूतेब्यो ढढाभ्येतत् व्रतं मम
Sakrud eva prapannaaya tavaasmeeti ca yaacate lAbhayam sarva bhootebhyo dadaamyetad vratam ma-ma ll
ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அப⁴யம்ʼ ஸர்வபூ⁴தேப்⁴யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||
(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 18.34)
“நான் உன்னைச் சேர்ந்தவன்” என்று ஒருமுறை கூறி விட்டால் என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும், அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் அபயம் அளிப்பேன். இதுவே எனது விரதம்”.
ராம நாம மஹிமை
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
கவிச் சக்கரவர்த்தி கம்பர் – கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14
நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே
– கவிச் சக்கரவர்த்தி கம்பர்
பொருள் :
பெரும் அரக்கர் சேனை சாம்பலாகி அழித்து வெற்றி பெற்ற வில்லைக் கொண்ட இராமன் தோளின் ஆற்றலைக் கூறுவோர்க்கு
நாடிய செல்வம் வந்து சேரும். ஞானம், புகழ் உண்டாகும். முக்திப் பேறு அடைய வழி வகுக்கும். தேன் நிறைந்த தாமரையில் இருக்கும் லக்ஷ்மி தேவி நோக்குவாள்.
***

ஆயிரம் திரு நாமங்களுக்குச் சமம்
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சிவபிரான் கூறுவது:
ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வரானனே
**
ராம நாம மணி தீப தரு : துளஸிதாஸரின் தோஹா
राम-नाम-मनि-दीप धरु, जीह देहरी द्वार।
‘तुलसी’ भीतर बाहिरौ, जौ चाहसि उजियार॥
Rama nama mani deepa dharu.
Jih dehri dwar
Tulsi Bhitar Bhararo,
Joo Chahasi Ujiyar
பொருள் : ராம நாமத்தை நாவில் வைத்து உச்சரித்தால் எப்படி வீட்டின் வாயிலில் வைத்திருக்கும் விளக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வெளிச்சத்தைத் தருமோ அது போல உடலின் உள்ளேயும் வெளியேயும் நன்மையை நல்கும்.
அதாவது இகலோக க்ஷேமமும் பரலோக க்ஷேமமும் கிடைக்கும் என்பது பொருள்.
**
சாகா வரம் அருள்வாய் : பாரதியார் வேண்டுதல்
பல்லவி
சாகாவர மருள்வாய், ராமா! சதுர்மறை நாதா! சரோஜ பாதா
சரணங்கள்
1. ஆகாசந் தீகால் நீர்மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய், ஏகாமிர்த மாகிய நின் தாள் இணைசர ணென்றால் இது முடியாதா?
2. வாகார்தோள் வீரா, தீரா, மன்மத ரூபா, வானவர் பூபா பாகார் மொழி சீதையின் மென்றோள் பழகிய மார்பா! பதமலர் சார்பா!
3. நித்யா, நிர்மலா, ராமா, நிஷ் களங்கா, சர்வா தாரா, சத்யா, சநாதநா, ராமா, சரணம், சரணம், சரண முதாரகா!
*** தொடரும்