
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,956
Date uploaded in London – – 26 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 24-1-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
டாட்டாவின் வெற்றி ரகசியம் – 1
ஜாம்ஷெட்ஜி டாட்டா – இந்திய தொழில்துறையின் தந்தை!
நேர்மையான வணிகக் கொள்கைகளுடன் பாடுபடுங்கள்!
ச.நாகராஜன்
.
7-1-1965 அன்று ஜாம்ஷெட்ஜி டாட்டாவைப் போற்றும் விதமாக இந்தியா வெளியிட்ட தபால்தலை
ஒரு கோப்பை பாலில் சர்க்கரை போல!
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம்.
கி.பி.பத்தாம் நூற்றாண்டில் குஜராத்தை ஆண்டு வந்தார் மாமன்னர் ஜடி ராணா. அப்போது பெர்சியாவிலிருந்து முகலாயர் தாக்குதலிலிருந்து தப்பி வந்த பார்சிக்கள் குஜராத்தின் சஞ்ஜன் துறைமுகத்தை வந்தடைந்தனர். பார்சிக்களின் தலைவர், நாட்டில் உள்ளே வந்து குடியேற அனுமதி தருமாறு கேட்டு ஒரு தூதுவரை மன்னர் ராணாவிடம் அனுப்பினார். சற்று யோசித்த மன்னர் ஒரு கோப்பையில் பாலை நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து தலைவரிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.
தலைவர் அந்தக் கோப்பையை வாங்கி ஒரு கணம் யோசித்தார். பின்னர் சிறிது சர்க்கரையை அள்ளி அதில் போட்டு மன்னரிடம் கொண்டு சென்று தருமாறு தூதுவரிடம் கூறினார்.
நடந்ததைக் கேட்டார் மன்னர். பிறகு புன்முறுவல் பூத்தார். அனைவரையும் நாட்டிற்குள்ளே வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.
அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோப்பையில் பாலை மன்னர் நிரப்பினார்,, அதற்குள் எதற்கு சர்க்கரையை பார்சிக்களின் தலைவர் போட்டார் என்று.
மன்னரே விளக்கினார். நாட்டில் குடியேற அனுமதி கேட்ட போது எங்கள் நாடே முழுவதுமாக மக்களால் நிரம்பி இருக்கிறது என்பதைக் குறிக்க கோப்பையில் பாலைத் தளும்பத் தளும்ப விட்டு நிரப்பி அனுப்பினேன். அதற்கு அந்தத் தலைவர் பாலில் சிறிது சர்க்கரையைப் போட்டார். சர்க்கரை எப்படி பாலில் கரைந்து விடுகிறதோ அது போல உங்கள் மக்களுடன் மக்களாக நாங்கள் கலந்து கரைந்து விடுவோம். அதுமட்டுமல்ல, சர்க்கரை எப்படி இனிப்புடன் சுவையைக் கூட்டுகிறதோ அது போல உங்கள் நாட்டில் வாழும்போது அனைவரது வாழ்க்கையையும் மேம்படுத்த உழைப்போம் என்றார் அவர்.
இதுபோன்ற சிறந்த மனிதர்களை இங்கு வரவழைப்பது நமது பெரும் பாக்கியமன்றோ என்றார் மன்னர்.
அன்று பெர்சியாவிலிருந்து (இன்றைய இரான், ஈராக்) இந்தியாவிற்கு வந்த பார்சிகள் சொன்ன சொல் தவறாமல் இந்திய நாட்டின் வளப்பத்தையும் பண்பாட்டையும் மேம்படுத்திக் கொண்டே வருகின்றனர்.
இங்குள்ள மக்களோடு மக்களாக கலந்து, தங்களுக்கு மட்டும் பெருமை தேடாமல் இந்த நாட்டிற்கும் அதன் மேன்மைக்கும் தியாகம் செய்யும் திருக்கூட்டமாக இன்றளவும் திகழ்ந்து வருகின்றனர் பார்சிக்கள்!
இதற்கு மிகப் பெரும் சான்றாக விளங்குபவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா.
பிறப்பும் இளமையும்
ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (Jamshedji Nusserwanji Tata) குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி என்ற இடத்தில் 1839ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி நுசர்வாஞ்சி மற்றும் ஜீவன்பாய் டாட்டாவிற்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் மிக்க ஏழ்மையான ஒரு புரோகிதர் குடும்பம்.
இளமையிலேயே படிப்பதில் ஆர்வமும் அனைத்தையும் உடனே அறியும் கூர்மையான அறிவுத்திறனையும் கொண்டிருந்தார் டாட்டா. அவர் மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தின்படி கல்வியைக் கற்றார்.
வழக்கமான குடும்பம் செய்து வந்த புரோகிதத்தை ஏற்காமல் முதன் முதலாக வணிகத்தில் குடும்பம் ஈடுபட அவர் காரணமானார்.
படிக்கும் போதே ஹீராபாய் டாபூவை அவர் மணந்தார், அவரது தந்தையார் ஓபியம் வணிகத்திற்காக சீனாவிற்கு அடிக்கடி சென்று வந்தார். தனது மகனை அதில் ஈடுபடுத்த நினைத்த அவர் டாட்டாவை சீனாவிற்கு அனுப்பினார். ஆனால் சீனா சென்ற டாட்டா ஓபியத்தை விட பருத்தி வாணிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். அதில் தேர்ச்சியும் பெற்றார்.
தொழிற்சாலைகளின் வளர்ச்சி
29 வயது முடிய தந்தையுடன் வணிகம் செய்து வந்த டாட்டா 1868இல் தனியாக தனது நிறுவனத்தை ஆரம்பித்தார். 1869இல் சிஞ்ச்போக்லி என்ற இடத்தில் திவாலாகி இருந்த ஒரு பஞ்சாலையை வாங்கிய அவர் அதை அலெக்ஸாண்டிரியா மில் என்று பெயர் மாற்றம் செய்தார். இரண்டே வருடங்களில் அதை லாபம் கொழிக்குமாறு செய்து, பின்னர் விற்றார்.
1874இல் பெரிய அளவில் ஒரு பஞ்சாலையைத் தொடங்கினார். நாக்பூரை சரியான இடமாக அவர் தேர்ந்தெடுத்ததை மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் உற்பத்திச் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை வெகுவாகக் குறைத்து லாபத்தை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் அவர்.
பின்னர் அவர் மனதில் இரும்பு எஃகு தொழிற்சாலையை உருவாக்கும் எண்ணம் தோன்றியது..
டாட்டா அயர்ன் அண்ட் ஸ்டீல் ப்ளாண்ட் ஜார்கண்டில் சாக்க்ஷி கிராமத்தில் தொடங்கியது. பிரம்மாண்டமான அளவில் அது வளர்ந்தது கிராமம் பின்னர் பெரிய நகராக மாறி டாட்டா நகர் என்ற ரயில் நிலையம் உருவாகும் அளவு வளர்ந்தது.
இப்போது பெரும் நகரமாக ஜாம்ஷெட்பூர் என்ற பெயரில் விளங்குகிறது.
இதைத் தொடர்ந்து டாட்டா குடும்பம் பெரிதாக வளர்ந்தது. பல்வேறு துறைகளில் இந்தக் குடும்பம் முத்திரை பதித்து விட்டது. இன்று சுமார் 29 பொது நிறுவனங்களைக் கொண்டுள்ளது டாட்டா குடும்பம். இதன் வருடாந்தர மொத்த வருமானம் 1245000 கோடி ரூபாய். பத்து லட்சம் பேர்கள் இந்த நிறுவனங்களில் இப்போது வேலை பார்த்து வருகின்றனர்.
பாரதத்தின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவரை ஒன் மேன் ப்ளானிங் கமிஷன் – ONE MAN PLANNING COMMISSION -என்று பாராட்டினார். இந்திய தொழில்துறையின் தந்தை என்று பொருத்தமான பெயரால் இவர் இன்று அறியப்படுகிறார்.
***