
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,959
Date uploaded in London – – 27 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 24-1-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
டாட்டாவின் வெற்றி ரகசியம் – 2
ஜாம்ஷெட்ஜி டாட்டா – இந்திய தொழில்துறையின் தந்தை!
நேர்மையான வணிகக் கொள்கைகளுடன் பாடுபடுங்கள்!
ச.நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தருடன் சந்திப்பு!
ஆண்டு 1893. மே மாதம் 31ஆம் தேதி யோகோஹாமாவிலிருந்து வான்கூவருக்குச் சென்று கொண்டிருந்த கப்பலில் ஸ்வாமி விவேகானந்தரைச் சந்தித்தார் ஜாம்ஷெட்ஜி. சிகாகோவில் நடந்து கொண்டிருந்த தொழில் கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார் அவர். ஸ்வாமி விவேகானந்தர் தங்கி இருந்த அதே ஹோட்டலில் சில நாட்களுக்கு முன்பாகவே வந்து தங்கியிருந்தார் டாட்டா. ஸ்வாமிஜியுடன் பேசுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஸ்வாமிஜியின் பேச்சால் உத்வேகம் பெற்ற டாட்டா கல்வி நிறுவனங்களையும் ஆய்வு நிறுவனங்களையும் தொடங்க உத்வேகம் பெற்றார்.
ஸ்வாமிஜி பாரதம் நெடுக தான் சென்று வந்ததையும் சீனாவில் ஏராளமான சம்ஸ்கிருத நூல்கள் இருப்பதையும் ஆன்மீக எழுச்சி உருவாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். டாட்டாவோ தனது கனவுத் திட்டமான இரும்பு மற்றும் எஃகு உற்பத்திக்கான தொழிற்சாலை நிறுவும் திட்டத்தைக் கூறினார். அதை மிகவும் வரவேற்ற ஸ்வாமிஜி அவருக்குப் பலவேறு விதமாக ஊக்கமூட்டும் மொழிகளைக் கூறி கிராமாந்தரங்களில் இருக்கும் ஏழைகளுக்கும் அவரது உதவி சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டாட்டா 23-11-1898 தேதியிட்ட ஒரு கடிதத்தை எஸ்பிளேட் ஹவுஸ், பாம்பேயிலிருந்து எழுதி ஸ்வாமி விவேகானந்தருக்கு அனுப்பினார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
ஜப்பானிலிருந்து சிகாகோவிற்கு சென்ற கப்பலில் என்னை கூட வந்த பயணியாக நீங்கள் சந்தித்ததை நினவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்…. எனது அறிவியல் ஆய்வு இன்ஸ்டிடியூட்டை ஆரம்பிக்கும் திட்டத்தைப் பற்றிய கருத்துக்களை இப்போது நினைவு கூர்கிறேன்.

அறிவியலுக்கான ஒரு பெரும் இயக்கத்தைத் தொடங்க கடுமையான விரதம் கொண்ட ஆன்மிக துறவியான உங்களை விடத் தகுதியானவர் வேறொருவர் யாராக இருக்க முடியும்?இந்தத் திட்டத்திற்கான செலவு முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார்.
ஸ்வாமிஜி உடனடியாக சகோதரி நிவேதிதா தேவியை அவரிடம் அனுப்பி ஆய்வு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான விரிவான திட்டத்தை உருவாக்க வழி கோலினார். 1902இல் ஸ்வாமிஜி மறைய, அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து டாட்டா மறைந்தார். என்றாலும் அவர்கள் கனவு கண்டு உருவாக்க உழைத்த அறிவியல் நிறுவனம் 1909இல் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் என்ற பெயரில் உருவானது. அதுவே இன்று நாம் அறியும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் என்று 1911இல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கொடைவள்ளல்
தான் சம்பாதித்த பணத்தை கல்விக்காகவும் சுகாதார மேம்பாட்டிற்காகவும் தாராளமாக நன்கொடையாக 1892ஆம் ஆண்டிலிருந்து வழங்க ஆரம்பித்தார் டாட்டா.
ஒரு பிரமிக்க வைக்கும் செய்தியை 2021இல் உலக நன்கொடையாளர்கள் பட்டியலைத் தயார் செய்த ஹூருன் மற்றும் எடெல்கிவ் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி சென்ற நூற்றாண்டில் மிக அதிகம் வழங்கிய கொடைவள்ளல்கள் 50 பேரில் குறிப்பிடத்தகுந்த இடத்தை டாட்டா வகிக்கிறார். டாட்டா நன்கொடையாக வழங்கிய தொகை 7.6 லட்சம் கோடி ரூபாயாகும். இவருக்கு அடுத்தபடியாகத் தான் பில் கேட்ஸ், வாரன் பபெட், ராக்ஃபெல்லர் ஆகியோர் வருகின்றனர்.
டாட்டா ஒரு விளம்பரப்பிரியர் அல்லர். அவர் பொதுமேடைகளையும் ஆடம்பரங்களையும் தவிர்த்தார்.
கல்பனா சாவ்லா விண்வெளிக்குக் கொண்டு சென்ற போட்டோ
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா (பிறப்பு 1-7-1961 விண்வெளி விபத்தில் மறைவு 1-2-2003) விண்வெளிக்குச் செல்லும் போது தன்னுடன் டாட்டாவின் புகைப்படத்தையும் ஒரு புத்தகத்தையும் மட்டுமே கொண்டு சென்றிருந்தார். அந்த அளவு டாட்டாவிடமிருந்து தான் உத்வேகம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
மறைவு
பல்லாயிரம் பேர்களை உத்வேகப்படுத்திய டாட்டா 1904ஆம் வருடம் மே மாதம் 19ஆம் நாளன்று ஜெர்மனிக்குச் சென்ற போது நோய்வாய்ப்பட்டு நௌகீம் (Nauheim) என்ற இடத்தில் மறைந்தார். இங்கிலாந்தில் ஒர்கிங் (Working) என்ற இடத்தில் உள்ள பார்சியருக்கான ப்ரூக்வுட் இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நான்கு இலட்சியங்கள்
டாட்டா முக்கியமாக நான்கு லட்சியங்களைக் கொண்டிருந்தார்.
1) பிரம்மாண்டமான இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையை அமைப்பது 2)ஆகப் பெரும் கல்வி நிறுவனம் தொடங்குவது 3) மிகப் பிரமாதமான ஹோட்டல் ஒன்றைத் தொடங்குவது 4) ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ளாண்ட் ஒன்றை நிறுவுவது.
இவற்றில் தாஜ்மஹால் ஹோட்டலை அவர் 1903இல் ஆரம்பித்தார். இதர மூன்று கனவுகளையும் அவர் காட்டிய வழியில் அவரது குடும்பத்தினர் ஆரம்பித்து அவரது கனவை நனவக்கினர்.
டாட்ட அயர்ன் அண்ட் ஸ்டீல் இண்டஸ்ட்ரி துவங்கப்பட்டது. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயின்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. டாட்டா பவர் கம்பெனி 8000 மெகாவாட் மின்உற்பத்தியை செய்ய ஆரம்பித்தது.
இளைஞர்களுக்கு அவர் தந்த செய்தி இது:.
நேர்மையான,ஒளிவுமறைவற்ற வணிக கொள்கைகளுடன் சின்னச் சின்ன விஷயங்களின் மீதும் கூட தீவிரமான கவனத்தைக் கொண்டு, நமக்கு ஏற்ற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம்.
இதை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி நிரூபித்த அவர் நமது இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டி அல்லவா!
***