
Post No. 12,997
Date uploaded in London – — 10 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -2
ச.நாகராஜன்
ஃப்ராங்க்ளின் எபெக்ட்
அரசியல் வாழ்வில் அவர் தன் கொள்கைகளை எதிர்க்கும் பலரையும் அன்றாடம் சந்திக்க வேண்டியிருந்தது.
எதிராளிகளைத் தன் பக்கம் ஈர்ப்பதிலும் அவர்கள் தன்னைத் தாக்குவதைக் குறைப்பதிலும் அவர் ஒரு புதுவழியைக் கையாண்டார்.
ஒரு முறை தன்னை வெகுவாக எதிர்த்து வந்த சட்ட மன்ற உறுப்பினரை தானும் தீவிரமாக எதிர்க்காமல் அவரிடம் சென்று அவரது நூலகத்தில் உள்ள ஒரு நூலைப் படிக்கத் தர முடியுமா என்று வேண்டினார். இந்த வேண்டுகோளினால் புளகாங்கிதம் அடைந்த எதிராளி தனது நூலை அவரிடம் படிக்கக் கொடுத்தார். பிராங்க்ளின் அந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஒரு குறிப்புடன் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். அன்றிலிருந்து பிராங்க்ளினை ஆக்ரோஷமாக விமரிசிப்பதைக் அவர் குறைக்க ஆரம்பித்தார். இதிலிருந்து அவர் கற்ற பாடம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் போது அவரைப் பற்றிய நல்லபிப்ராயம் அதிகமாவதோடு அவரை விரும்பவும் ஆரம்பிக்கிறார் என்பது தான்.
இந்த உத்தியை அறிவியல் அறிஞர்கள் ‘பிராங்க்ளின் எபெக்ட்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
இது சரிதானா என்பதைக் கண்டுபிடிக்க பின்னால் அறிவியல் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1969, 2004, 2012, 2014ஆம் ஆண்டுகளில் நடந்த ஆய்வுகள் இது அதிசயிக்கத்தக்க விதத்தில் பலனைத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
இது மட்டுமல்ல, பிறர் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதில் அவர் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டிருந்தால் அதை நேரடியாக எதிர்த்துப் பேசுவதை கை விட்டார். ‘சந்தேகமின்றி’, நிச்சயமாக’ என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, ‘நான் நினைப்பது என்னவென்றால்’, ‘எனக்கு இப்போது இப்படித் தோன்றுகிறது’ என்ற வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார். இது நல்ல பலனைக் கொடுத்தது. விவாதங்களை இதன் மூலமாக நிறுத்திய அவர் அனைவராலும் போற்றப்படும் உயரிய நிலையை அடைந்தார்.

குழந்தைகளிடம் அன்பு
அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது குழந்தைகள் அவரது கையைப் பிடித்து முத்தமிடுவது வழக்கம். ஒருநாள் வழியிலே அவரைச் சந்தித்த குழந்தை ,”ஐயா! கடவுளை எங்கே காண முடியும்? நீங்கள் தான் பெரிய மேதை ஆயிற்றே! எனக்கு வழியைச் சொல்லுங்கள்” என்று கேட்டது. பிராங்க்ளின் புன்னகை புரிந்தார். ஒளிவெள்ளம் பாய்ச்சும் ஆகாயத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பிரகாசிக்கிறதே, அந்த சூரியனைக் கொஞ்சம் பாரேன்” என்றார். அந்தக் குழந்தை பார்க்க முயன்றது. ஆனால் உடனே கையால் கண்களை மூடிக் கொண்டு, “சூரிய வெளிச்சத்தை என்னால் தாங்க முடியவில்லை’ என்று கூறியது. பிராங்க்ளின், “என் அருமைச் செல்வமே! இறைவனைக் கண்ணால் பார்க்க முடியாது. சூரியன் எப்படி வெப்பம். ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ அது போல முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு தான் இறைவன். எல்லையற்ற பேரறிவே இறைவன். நன்றாக ஆராயத் துவங்கு. உனது ஒவ்வொரு நாளும் நல்ல தன்மையால் மெருகு பெறும். அப்போது இறைவனின் சாந்நியத்தை உணர்வதோடு உனது ஆத்மாவே இறைவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்வாய்” என்றார்.
இப்படி அவர் வாழ்க்கை முழுவதும் சிறியவர் முதல் பெரியவர் வரை அவரிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
விஞ்ஞானி ப்ராங்க்ளின்
இயல்பாகவே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட ப்ராங்க்ளின் அச்சகத்தில் நிறைய மாற்றங்களைச் செய்தார். உலோகத்தினால் செய்யப்படும் நாணயங்களில் போலி நாணயங்கள் அதிகரிப்பதை எண்ணி, பேப்பரில் நோட்டுகளை அடிக்கும் புதிய வழியை அவர் ஆதரித்தார். இதற்காக புதிய பேப்பரையும் புதிய மையையும் தயாரித்தார். 1729ஆம் ஆண்டு பேப்பர் கரன்ஸியைத் தயாரித்தார்.
ஒரு பட்டத்தை இரும்புத்தடி ஒன்றுடன் பறக்க விட்டு மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டறிந்தார். மின்சாரத்தில் பாஸிடிவ், நெகடிவ் என்ற வார்த்தைகளை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவரே.
. ஜனத்தொகை கணக்கெடுப்பை முதலில் ஆரம்பித்தவர் அவரே. அதே போல கடல் சம்பந்தமான பல ஆய்வுகளை ஆரம்பித்தவரும் அவரே.
C, J, Q,W,X, Y ஆகிய ஆறு எழுத்துக்கள் ஆங்கிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறி அதற்கு பதிலாக ஆறு புது எழுத்துக்களை அவர் அறிமுகப்படுத்த விழைந்தார். இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் அதை கை விட்டார்.
மறைவு
நடு வயதிலிருந்தே பிராங்க்ளினுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சனையாக இருந்தது. கீல் வாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் 1787இல் அமெரிக்க சட்டம் கையெழுத்திடப்படும் போது உடல் நிலைமை மோசமாக ஆகவே வெளியுலகில் வருவதைத் தவிர்த்தார்.
1790, ஏப்ரல் 17ஆம் நாளன்று நுரையீரல் உறை வீக்கத்தால் மரணமடைந்தார். இறக்கும்போது அவரது மகள் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறிய போது “இறக்கும் ஒரு மனிதனுக்கு எதுவும் சுலபமில்லை” என்று கூறியவாறே உயிர் துறந்தார். பிலடெல்பியாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது 20000 பேர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
நமக்கென ஒரு வெற்றித் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அதை வகுத்து, கடைப்பிடித்து வெற்றி கண்ட ப்ராங்க்ளின் வெற்றிக்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமே இல்லை!
*** மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
முற்றும்