
Date uploaded in London – – 12 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
மயில் பற்றி அவ்வையார் , கம்பன், அருணகிரிநாதர் , பாரதி, பாரதிதாசன், காளிதாசன் முதலிய பல புலவர்கள் பாடியுள்ளனர் . அவர்களில் குறிப்பாக கம்பனும் விவேக சிந்தாமணி இயற்றிய பெயர் தெரியாத புலவரும் அதிகம் அறியாத விஷயங்களைப் பேசுகின்றனர். ஏனையோர் முருகனின் வாகனம் என்ற முறையில் குறிப்பிடுகின்றனர். பாரதிதாசன் மயிலின் அழகினை வியந்து பாடுகிறார் ; உலகப் புகழ்பெற்ற காளிதாசன்தான் முருகனையும் மயிலையும் தொடர்பு படுத்திப் பாடிய முதல் கவிஞன் ; அவனுடைய காலம் கி.மு முதல் நூற்றாண்டு ; சங்கப் புலவர்கள் பலர் அவன் சொன்ன விஷயங்களை அப்படியே தமிழ்ப்படுத்தியுள்ளனர்.
XXXX

இதோ விவேகசிந்தாமணி நூலின், பெயர் தெரியாத புலவர், சொல்லும் கருத்து :
மயில் பற்றிய விவேகசிந்தாமணி பாடல்
நற்குணங்கள் பதின்மூன்று
மயில் குயில் செங்காலன்னம் வண்டு கண்ணாடி பன்றி, அயிலெயிற்றரவு, திங்கள் ஆதவன் ஆழி கொக்கோடு, உயரும்விண் கமலம் பன்மூன்றுருகுண முடையோர் தம்மை, இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.
மயில் (பொல்லாததை ஒதுக்கும் குணம்; அழகிய தோற்றம்), குயில் (இனிய பேச்சு), சிவந்த கால்களையுடைய அன்னம் (விவேகம்; பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் பாலைமட்டும் அருந்தும்)), வண்டு (தேன் போன்ற நல்லதை மட்டும் எடுத்தல்), கண்ணாடி (உள்ளதை உள்ளவாறு காட்டுதல் – உண்மை), பன்றி (உறவுகளோடு கூடி வாழ்தல்), கூர்மையான பற்கள் உள்ள பாம்பு (எதிரிகளுக்கு பயத்தைக் கொடுத்தல்), சந்திரன் (குளிர்ந்த பார்வை – கண்ணோட்டம்), சூரியன் (ஞானம்), கடல் (ஆழ்ந்த அறிவு), கொக்கு (ஒரு முகப்பட்ட மனம்),உயர்ந்த வானம் (பரந்த மனம், அகன்ற சிந்தனை), தாமரை (ஒட்டியும் ஒட்டாத பற்றற்ற வாழ்க்கை) ஆகிய இப்பதின்மூன்று குணங்களும் ஒருங்கே உடையவரை உலகத்தார் அனைவரும் போற்றும் ஈசன் என்று கருதலாம்.- விவேகசிந்தாமணி
xxxx

கம்பன் சொன்ன அதிசயச் செய்தி
1470. ‘வெயில் முறைக் குலக் கதிரவன்
முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும்,
உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை,
மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால்,
என் சொனாய்? – தீயோய்! (Kamba Ramayana, Ayodhya Kanda)
பாடலின் பொருள்
கொடியவளே! சூரியன்; முதலாகிய உயர்ந்தோர்கள், உயிரே
போவதாயினும் சத்தியத்தினின்றும் மாறுபடார்; மயிலினது முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையை உடைய,
மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள, அயோத்தியின் அரச பரம்பரையை கீழ்மைப் புத்தியால் யாது பேசினாய்?’
(தீய எண்ணம் கொண்ட மந்தரை என்னும் கூனியை நோக்கி கைகேயி சொன்ன சொற்கள் இவை.)
XXXXX
பாடலின் விளக்கம்
மயிலின் குஞ்சுகளுள், முதற் பார்ப்புக்கே (குஞ்சுக்கே) , தோகையின் பீலி பொன்னிறம் பெறும். ஏனைய குஞ்சுகளுக்கு அவ்வாறாகாது. அதுபோல் மூத்த மகன் அரசுரிமை பெறுதலும், ஏனையோர் பெறாதொழிதலும் நடக்கிறது . அவ்வுரிமையை உடைய மரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும், பரதன், இலக்குவன், சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் வழிப்படியே என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும்சொல் ‘யான் பிறந்த கேகய குலத்துக்கும் அதுவே விதி , மனு மரபுக்கு குற்றம் தரக்கூடிய என்ன வார்த்தை சொன்னாய்?’ என்று கூனியைக் கடிந்தாள் கைகேயி எனலாம்.
XXXX
பிற்காலத்தில் எழுதப்பட்ட தணிகைப் புராணமும் கம்பன் சொன்ன கருத்தையே மொழிகிறது.
ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும், கலாவம் புனைந்த களிமயில் மூத்தது எனக் கருத” என்ற பாடல் (தணிகைப். களவு. 244) பொருந்துவதாகும்.
xxxxx

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி என்ற அவ்வையாரின் பாடல் பெரும்பாலோருக்குத் தெரியும்; இலக்கணம் கல்லாத ஒருவன் கவி இயற்றி, அரசனுக்கு முன்னர் பாடுவது, அழகிய மயிலின் ஆட்டத்தைக் கண்ட வான்கோழி, மயில் போல ஆடுவதற்கு இணையானது என்று அவ்வைக்கிழவி கிண்டல் செய்கிறாள் . இதில் புதிய செய்தி என்னவென்றால் இதை ஈசாப் என்னும் கிரேக்க எழுத்தாளன் காப்பி copy அடித்திருக்கிறான். ஈசாப் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என்று கதைப்போர் உண்டு. நாம் சொல்லும் அவ்வையாரோ ஆறு அவ்வையார்களில் மத்திய கால அவ்வையார். அப்படி இருக்கையில் அவருக்கு மிகவும் முன் வாழ்ந்த ஈசாப் எப்படி காப்பி copy அடித்தார் என்று சொல்ல முடியும்? என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள்; ஈசாப் கிரேக்க நாட்டவர் ஆனாலும் எகிப்தில் அடிமை வேலை செய்தவன் என்பது பலர் கருத்து . ஈசாப் தனது கதையில் மயிலை இதே சூழ்நிலையில் காட்டிக் கதை எழுதியுள்ளான் ; ஒரு மயில், ஒவ்வொரு பறவையின் சிறப்பையும் பார்த்த பின்னர் அது போலவே நடிக்க ஆசைப்படுகிறது ; அது முடியாது என்று விளக்குவதே கதை; அவன் வாழ்ந்த எகிப்திலோ கிரேக்க நாட்டிலோ மயில் கிடையாது ; அப்படியே ஒன்றிரண்டு அரசவைத் தோட்டங்களில் இருந்திருந்தாலும் மயில் என்னும் பறவை பற்றி மக்களுக்குத் தெரிந்திருந்தால்தான் கதை புரியும்; விளங்கும். உண்மையில் ஈசாப் கதைகளை ஆராய்ந்தோமானால் அவன் பல நாட்டுக் கதைகளைத் தொகுத்தவனேயன்றி எழுதியவன் அல்ல என்பது விளங்கும். மயில் பற்றிய கதை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இந்தக் கருத்தும் கதையும் இந்தியா முழுதும் இருந்திருப்பதால்தான் அவ்வவையாரும் பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
My previous post
‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ (Post No.4742)
Turkey imitating Peacock (Aesop copied this Hindu folk tale)
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி –
மூதுரைப் பாடல்/வாக்குண்டாம்
(மூதுரை என்பதும் வாக்குண்டாம் என்பதும் ஒரே நூல்தான்)
xxxxx

வம்பு, தும்பு பேசும் பெண்களைச் சாடுகிறார் பாரதிதாசன்!
பாரதிதாசன். பாட்டில் மயில்
ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.
அழகிய மயிலே! அழகிய மயிலே!
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடுகின்றாய் அழகிய மயிலே!
உனது தோகை புனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!
உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!
ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல்உன் தனிச்சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
இவைகள் என்னை எடுத்துப் போயின!
இப்போது, “என்நினைவு” என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்:
நீயும் பெண்களும் “நிகர்” என்கின்றார்!
நிசம்அது! நிசம்!நிசம்! நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே,
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்
மனதிற் போட்டுவை; மகளிற் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக!
புவிக்கொன் றுரைப்பேன்: புருஷர் கூட்டம்,
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!
xxxx
._Kushan_imitative._3rd-4th_centuries_CE.jpg)
These are later Yaudheya coins. Their punch marked coins have six dots with god figure.
உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய மேக தூதத்தில் 46, 47-ஆவது பாடல்களில் மேகம் உறுமினால் மயில்கள் ஆடும் என்ற கருத்தையும் அது முருகனின் வாகனம் என்ற கருத்தையும் விளக்கியுள்ளார். அவர் வாழ்ந்தது 2100 ஆண்டுகளுக்கு முன்னர்; அதே காலத்தில் யாதேயா வம்ச மன்னர் YAUDHEYA COINS காசுகளில் ஆறுமுகம் காணப்படுகிறது ; முருகன் பிறப்பு பற்றி குமார சம்பவம் காவியம் இயற்றிய காளிதாசனின் செல்வாக்கு அந்தக் காசுகளில் தெரிகிறது .
Ref. Oriental Coins & Their Values : The Ancient and Classical World 600 B.C. – A.D. 650 Hardcover – January 1, 1978
by Michael Mitchiner (Author)
xxxx
மயிலுக்குப் போர்வை கொடுத்த வையாவிக்கோ பேகனை அறியாத தமிழர் இல்லை; கடையெழு வள்ளல்களில் ஒருவனான அவனை சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். ரிக்வேத கால மயூர முதல் பாரதிதாசன் காலம் வரை, மயிலின் புகழ் பரவியதற்குப் புலவர்களே காரணம் .
—-SUBHAM —-
Tags- மயில், மயூர, அவ்வையார், பேகன், விவேக சிந்தாமணி, காளிதாசன், மேகதூதம் பாரதிதாசன் , கான மயிலாட , வான்கோழி, ஈசாப்