
Post No. 13.014
Date uploaded in London – — 17 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 14-2-2024இல் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.
ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 1
ச.நாகராஜன்
‘மேட் இன் ஜப்பான்’
ஹோண்டா – இந்தப் பெயரை அறியாதவரே இன்று இருக்க முடியாது. ஏனெனில் சாலையில் நாம் பார்க்கின்ற கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பெரும்பாலும் ஹோண்டாவாகவே இருக்கும். ஜப்பானுக்கு ஒரு தனி கௌரவத்தைத் தந்தது ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகள்.
ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ‘மேட் இன் ஜப்பான்’ என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை எந்த ஒரு பொருள் மீதும் பார்த்தாலும் அனைவரும் எள்ளி நகையாடுவர். அது தரமில்லாத உதவாக்கரை பொருள் என்று தூக்கி எறிவார்கள்.
இந்த அவமானத்தைத் தாங்க முடியாத ஜப்பானியர்கள் ஒரு உறுதிமொழியை எடுத்தனர். தரமில்லாத எதையும் விற்பனைக்கு அனுப்பாதே என்று.
நாளடைவில் தரக் கட்டுபாடுகள் அதிகமானது. உற்பத்தி உத்திகள், கடுமையான மேற்பார்வை சோதனைகள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தரத்தில் நம்பர் ஒன்
என்ற பெயரைப் பெற ஆரம்பித்தன.
இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல, ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சொல்லலாம்.
ஹோண்டா உற்பத்தி செய்யும் கார், மோட்டார் சைக்கிளைப் பார்ப்பவர்கள் அந்த நிறுவனத்தின் நிறுவனரான ஹோண்டாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பிறப்பும் இளமையும்
சோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda) 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாளன்று ஜப்பானில் உள்ள கோம்யா என்ற கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஜிஹெய் ஒரு கொல்லர். தாய் மைகா ஒரு நெசவாளி. ஏழ்மையான குடும்பம் என்றாலும் மனதிருப்தியுடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்த குடும்பம் அது.
ஹோண்டாவின் இளமைப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் சைக்கிள் மயம். ஆகவே சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் சைக்கிளை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் ரிப்பேர் செய்யவும் ஹோண்டாவின் தந்தையிடம் வருவது வழக்கம். அங்கு ஆரம்பித்தது ஹோண்டாவின் மெஷின்கள் மீதான ஆர்வம். தானே சொந்தமாக ஒரு ரிப்பேர் கடையை ஆரம்பித்தார்.
1922இல் பள்ளியை விட்டு வெளி வந்த ஹோண்டா டோக்கியோ சென்று கார்கள், மோட்டார்சைக்கிள்கள் பற்றி அறிய ஆர்வம் கொண்டார்.
ஆகவே வீட்டை விட்டு வெளியேறி டோக்கியோவில் ஹோங்கோ என்ற இடத்தில் யூஜோ சகாகிபாரா என்பவரிடம் கத்துக்குட்டி வேலையாளாகச் சேர்ந்தார். ஹோண்டாவின் ஆர்வத்தைப் பார்த்த யூஜோ அசந்து போனார். ஹோண்டாவிற்கு எல்லாவற்றையும் சொல்லித் தர ஆரம்பித்தார்.
1928இல் வீடு திரும்பிய ஹோண்டா தன் சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். அவருக்கு வயது 22 தான்! இரண்டே வருடங்களில் அவரது நிறுவனத்தில் 30 பேர் வேலை செய்தனர். ஹோண்டாவிற்கு திருமணம் ஆனது. அவரது மனைவி சசியும் (Sachi) நிறுவனத்தில் சேர்ந்து தொழிலைக் கவனிக்க ஆரம்பித்தார்.
உழைப்பதில் இன்பம்
உழைப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் பசி, தாகத்தையே மறந்தார்.
அவரே பின்னால் கூறியது இது: “நான் கத்துக்குட்டி பயிற்சியாளராக உழைத்துக் கொண்டிருந்த போது எனது கவனத்தைத் திசை திருப்ப விடமாட்டேன். எனது நண்பர்கள் என்னை விரும்பி அழைத்தாலும் போக மாட்டேன். ‘உணவுக்கான நேரம் வந்து விட்டது. சாப்பிட வா’ என்று என் தாயார் என்னை அழைத்தாலும் போக மாட்டேன். என்னை இழுத்துக் கொண்டு போய் எனக்கு உணவைப் பரிமாறுவார் அம்மா. என் காதுகள் இப்படி ‘செயலிழப்பதைக்’ கண்ட எனது தாயார் நாளடைவில் எனது கவனத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார். ‘வேலையை முடித்து விட்டு சாப்பிட வா’ என்று கூறும் அளவுக்கு அவருக்கு மனப்பக்குவம் வந்து விட்டது. பசி தாகம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை
ரேஸ், ரேஸ், ரேஸ்
ரேஸில் பங்கு எடுப்பது ஹோண்டாவிற்கு மிகவும் பிடிக்கும் ஆனால் 1936இல் ஒரு பெரிய விபத்தில் அவர் சிக்க அவர் மனைவி அழ ஆரம்பிக்க, ரேஸில் பங்கு பெறுவதை அவர் விட்டு விட்டார்.
அப்போது நடந்த ஒரு ரேஸ் போட்டியில் மணிக்கு 78 மைல் வேகத்தில் காரை ஓட்டி அனைவரையும் அவர் பிரமிக்க வைத்தார்.
உலகப் போர்
காலம் மாறத் தொடங்கியது. 1937இல் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போர்.
பின்னர் வந்தது இரண்டாம் உலகப் பெரும்போர். ரிப்பேர் செய்வதை விட்டு விட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஹோண்டா. சிசிரோ கதோ என்ற நண்பருடன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
பிஸ்டன் ரிங்குகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினார் ஹோண்டா. ஆனால் அவை தரத்துடன் இல்லை. ஒரே தோல்வி மயம். ஆகவே உலோக இயல் பற்றிய தனது அறிவு போதுமானதாக இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹோண்டா அதில் கவனம் செலுத்தி தரமான படைப்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.
நிறுவன வளர்ச்சி
1939ஆம் ஆண்டு அவர் ஒரு தேர்ந்த நிபுணராக ஆக முடிந்தது. மெல்ல மெல்ல ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. தரமோ சூப்பர். 2000 பேர்கள் உள்ள பெரிய நிறுவனமாக அவரது நிறுவனம் வளர்ந்தது.
1948இல் மோட்டார் பொருத்தப்பட்ட முதல் சைக்கிளை அவர் அறிமுகப்படுத்தினார். அவரது தயாரிப்பின் பெயர் ட்ரீம் (கனவு).
1959இல் அவர் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.
தனது முதல் ஸ்போர்ட்ஸ் காரில் அவர் பழைய விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட எஞ்சினைப் பொருத்தி ஓட்டினார்.
மெல்ல மெல்ல வளர்ந்த அவரது நிறுவனம் 1959இல் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியது. தனது மாடலை மாற்றும் போதெல்லாம் அந்த மாடலின் முதல் காரை அவரே ஒட்டிப் பார்ப்பது வழக்கமானது. இந்தப் பழக்கத்தை தனது 65 வயது முடிய அவர் விடவில்லை.
To be contined…………………………