
Post No. 13.016
Date uploaded in London – — 18 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 14-2-2024இல் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு தரப்படுகிறது.
ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் – 2
ச.நாகராஜன்
தோல்விகளில் துவளாதே
வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் பல. தடைகளும் பற்பல.
இரண்டாம் உலகப் போரில் இடாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை மீது குண்டு போடப்பட்டு அது முற்றிலுமாக சேதம் அடைந்தது.
1945இல் மிகாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை பெரிய பூகம்பம் ஒன்றினால் சேதமடைந்தது.
ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்ததில்லை.
உலகப்போர் முடிந்த பிறகு கார் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகவே அனைவரும் சைக்கிளுக்குத் திரும்பி வர ஆரம்பித்தனர். ஹோண்டா ஒரு சிறிய எஞ்சினை சைக்கிளுடன் இணைத்தார். அனைவரும் அதை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். ஆனால் தேவைக்குத் தகுந்தபடி அவரால் உற்பத்தி செய்ய முடியவில்லை.
ஜப்பானை வலிமையுள்ளதாக்க தனக்கு உதவி செய்யுமாறு 18000 சைக்கிள் விற்பனையாளர்களுக்கு அவர் உத்வேகமூட்டும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். 5000 பேர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். அதை வைத்து சிறிய எஞ்சின்கள் ஏராளமானவற்றை அவர் உருவாக்கி அனைவருக்கும் தந்தார்.
முதலில் அவர் உருவாக்கிய எஞ்சின்கள் சற்று பெரிதாக இருந்ததால் சந்தையில் விற்பனையாகவில்லை. ஹோண்டா விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து சிறிய மாடல் எஞ்சினை உருவாக்கினார். விற்பனை சக்கை போடு போட்டது. சூப்பர் கப் என்ற அந்த மாடலை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் வாங்க ஆரம்பித்தன.
இதே போல இன்னொரு முறை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கார் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட மறுபடியும் களத்தில் இறங்கினார் ஹோண்டா. இந்த முறை அவர் சிறிய காரைத் தயாரித்தார். எரிபொருள் சிக்கனத்தைக் கொண்ட அந்த காரை அனைவரும் வாங்க இந்த முறையும் பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்தது!
1973ஆம் ஆண்டு வரை தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்தார். பின்னர் ஆலோசகராக மாறினார். பீப்பிள் பத்திரிகை
1980ஆம் ஆண்டின் உலகின் ஆகப்பெரும் மனிதர்கள் 25 பேரில் ஒருவராக அவரை அறிவித்தது. அனைவரும் அவரை ‘ஜப்பானின் ஹென்றி போர்டு’ என்று புகழ ஆரம்பித்தனர்.
பழகுவதற்கு இனிமையானவர், தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது உடனடியாக அப்படியே ஏற்றுக் கொள்வார். அதைத் திருத்திக் கொண்டு முன்னேறுவார். இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அவர் அன்புடன் வளர்த்தார்; நற்பண்புகளை தன் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டினார்.
ஆனால் தனது மகன்களை அவர் வற்புறுத்தி தனது நிறுவனத்தை மேற்கொள்ளச் செய்ய அவர் விரும்பவில்லை. அவரது மகன் ஹிரோடோஷி ஹோண்டா தனக்கென ஒரு மோட்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
தனது தொழிலகத்தில் அவர் தரத்தைக் கண்டிப்பாக வற்புறுத்துவார். நேரம் தவறாமை அவரது முக்கியப் பண்பானது. தனது தொழிலாளர்கள் மத்தியில் அவர் மிஸ்டர் தண்டர்ஸ்டார்ம் – மிஸ்டர் இடிமின்னல் புயல்- என்று அறியப்பட்டார்.
ஹோண்டாவிற்கும் அவரது மனைவி சசிக்கும் விமானம் ஓட்டுவது பொழுது போக்கு. ஸ்கீயிங், பலூனில் பறப்பது உட்பட்ட பல பொழுதுபோக்குகளில் அவர் தனது 77ஆம் வயதிலும் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
மறைவு
ஹோண்டா 1991ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஈரல் கோளாறு காரணமாக மரணமடைந்தார். அவர் மரணமடையும் போது அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் 470. காப்புரிமைகள் 150. ஜப்பான் நாட்டின் உயரிய விருதான ‘ப்ளூ ரிப்பன்’ விருது அவருக்கு தரப்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளில் 3 கோடி வாகனங்களை அமெரிக்காவில் ஹோண்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3200 டாலருடன் ஆரம்பிக்கப்பட்ட அவரது நிறுவனம் 30 பில்லியன் டாலர் அதாவது 3000 கோடி டாலர் (ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய மதிப்பு ரூ 83) என்ற அளவுக்கு வளர்ந்திருந்தது.
ஹோண்டாவின் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா, பிரிடன் ஆகிய நாடுகளில் உள்ளன. அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும்ஹோண்டா அக்கார்ட் காரைப் பார்க்கலாம்.
ரேஸுக்கான ஹோண்டாவின் மோட்டார்சைக்கிள்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.
150 நாடுகளில் ஹோண்டாவின் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இன்று ஓடுகின்றன.
வெற்றிக்கு வழி
ஹோண்டாவின் கருத்துப்படி அவர் தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறியவை இரண்டு விஷயங்கள்
1) ட்ரையல் அண்ட் எர்ரர் வழிமுறை: ஒரு பொருளைத் தயாரித்து சோதனை செய்து அதில் உள்ள குறைகளைக் களைந்து கொண்டே இருந்தால் நல்ல பொருள், தரத்துடன் உற்பத்தியாகி விடும்.
2) தோல்விகளால் துவளாதீர்கள் ; ஒரு பொருளைக் கண்டுபிடித்து தயாரிக்கும் போது ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள்
Every Stumbling Block is a stepping stone – ஒவ்வொரு தடைக்கல்லும் வெற்றிக்கான படிக்கல் – என்று உணருங்கள்.
ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாது என்பது அவரது கொள்கை.
மூன்று கொள்கைகளைத் தனது கம்பெனி கொள்கைகளாக அவர் கொண்டிருந்தார். வாங்குவதில் சந்தோஷம், விற்பதில் சந்தோஷம், உருவாக்குவதில் சந்தோஷம் ஆகியவையே அந்த மூன்று.
அவர் ஒரு முறை கூறினார் இப்படி: பலரும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகின்றனர். வெற்றியானது பல தோல்விகளுக்கும் சுயபரிசோதனைகள் செய்த பின்னருமே அடையப்படும் என நான் நம்புகிறேன். வெற்றி பெற ஒரு சதவிகித உழைப்பே தேவை மற்ற 99 சதவிகிதம் தடைகளை மீறி முன்னேறுவது தான்! தடைகளைக் கண்டு பயப்படவில்லை என்றால் வெற்றி தானே உங்களை வந்து அடையும்!
அவரது வாழ்க்கை போதித்த போதனை :தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள் என்பது தான்.
****