நவீன ஞான மொழிகள் பாகம் – 1(Post No.13,022)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.022

Date uploaded in London – — 20 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

புத்தக அறிமுகம்  – ச.நாகராஜன்

திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள

வீன ஞான மொழிகள் பாகம் – 1 

10-12-2023 அன்று அமரரான திரு சந்தானம் சீனிவாசன் அவர்களை www.tamilandvedas.com  நேயர்கள் நன்கு அறிவர். இந்த ப்ளாக்கில் அவர் ஏராளமான கட்டுரைகளைப் படைத்துள்ளார். இப்போது அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவத்தைப் பெற்றுள்ளன.

ஞானமயம் ஒளிபரப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு கொண்டு உரையாற்றியுள்ளார். அதைப் பாராட்டாதவர்களே இல்லை.

பலரது வேண்டுகோளுக்கிணங்க, சுமார் 500 மொழிகள் அடங்கியுள்ள நவீன ஞான மொழிகள் பாகம் – 1 இப்போது புஸ்தகா நிறுவனத்தின் சார்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

**

திரு சீனிவாசன் ஒரு அறிமுகம்

திரு சீனிவாசன் மதுரையில் மதுரை மில்லில் பல்லாண்டுகள் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்று சுயமாக நிர்வாக இயல் மற்றும் சுயமுன்னேற்றத் துறையில் ஆகச் சிறந்த பயிற்சியாளராக ஆனார். இந்தியா முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ள தலையாய பெரும் நிறுவனங்கள்கல்லூரிகள் உள்ளிட்ட ஏராளமான இடங்களிலிருந்து அவருக்கு அழைப்புகள் குவிந்தன.

பற்பல ஆண்டுகள் தினந்தோறும் என்று சொல்லக் கூடிய அளவில் சிறிய குழுவினருக்கும்  பெரிய குழுவினருக்கும் பயிற்சிகள் தரப்பட்டன.

திரு சீனிவாசன் தனது ஜோக்குகளுக்குப் பெயர் பெற்றவர். அற்புதமான பெரும் எண்ணங்களை மனதில் விதைப்பதற்கு அவரது பேச்சாற்றலில் துணையாக நின்று உதவியது அவரது ஜோக்ஸ்.

கருத்துக்களை அவர் தேர்ந்தெடுத்த விதமே தனி.

தினமும் நூற்றுக் கணக்கில் பேப்பர்புத்தகங்கள்இணையதளம் ஆகியவற்றிலிருந்து துணுக்குகள்கட்டுரைகள்கார்ட்டூன்கள்பொன்மொழிகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்த வண்ணம் இருப்பார்.

இவை அனைத்தையும் அவர் தன்னிடம் ஆலோசனைக்கு வருவோரிடமும்தான் செல்லும் இடங்களில் ஆற்றிய உரைகளிலும் பயன்படுத்தலானார்.

ஒருவரின் முகத்தைப் பார்த்தவுடன் அவரைப் பற்றிய அனைத்தையும் அறிந்து அவரது பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடிய அபூர்வ ஆற்றல் படைத்தவர். ஆகவே ஏராளமானோர் பல வருடங்களாக அவரை அணுகி ஆலோசனை பெற்று வந்தனர்.

**

அவரது நவீன ஞான மொழிகள் முதல் பாகத்திற்கு அவர் தந்த முன்னுரை இது:

கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது.

இப்படி ஒரு தொகுப்பைச் செய்ய ஆரம்பித்ததற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரகர் திரு சிவராம்ஜி எனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவற்றில் சிலவற்றைக் காண்பித்த போது அவர் இதை நன்கு பெரிய அளவில் தொகுக்கலாமே என்று அன்புரை கூறினார்.

அவர் வார்த்தைகள் எப்போதுமே மந்திரச் சொற்களாகவே அமையும். அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட நான் இவற்றை முழு வீச்சில் தொகுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு பிரம்மாண்டமான பீரோக்கள் முழுவதும் பெரிய பைல்கள்!

இவற்றை அவ்வப்பொழுது படித்துப் பார்த்த அனைவரும் இந்தத் தொகுப்பையும் இதற்கான முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர்.

இந்த நூல் வெளிவரும் தருணத்தில் திரு சிவராம்ஜி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2020ஆம் ஆண்டு எனது சகோதரர் லண்டன் திரு ச.சுவாமிநாதன் நடத்திவரும் www.tamilandvedas.com இல் அவர் இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அனைவரின் கவனத்தையும் இந்த நவீன ஞான மொழிகள் ஈர்த்தன.

அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

இதைப் படித்து, தொகுத்து வெளியிட்டால் எல்லோரும் ரசித்து மகிழ்வார்களே என்று தொகுக்க உதவி செய்த எனது சகோதரன் திரு நாகராஜனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவற்றைத் தொகுக்கும் போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவி செய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

சென்னை                          சந்தானம் சீனிவாசன்

19-7-2023 

**

நூலுக்கு அணிந்துரை தந்துள்ள ச.நாகராஜன் தனது உரையில் கூறியிருப்பதன் ஒரு பகுதி :


காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே.

இவை அனைத்துமே கேட்பதற்கு அருமையாக இருக்கும்; சுவையான கருத்துக்களைத் தரும். அனுபவத்தின் எதிரொலியாக அவை விளங்கும்.

நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு.

அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.

இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும்.

இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

இப்படிப்பட்ட நவீன ஞான மொழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் போது அவற்றின் முழுப் பயனை நம்மால் பெறமுடியவில்லை.

ஆகவே இவற்றை ஊக்கமும் உத்வேகமும் கொண்டு இதற்காகவே நேரத்தையும் நுண்ணறிவையும் அர்ப்பணித்து ஒருவர் தொகுத்தாலேயே அவற்றை நாம் ஒரு சேர ஒரே இடத்தில் பெற முடியும்.

இப்படிப்பட்ட அரும் பணியில் தன்னை அர்ப்பணித்து இரவு பகல் பாராமல் ஆயிரக்கணக்கான இதழ்களைப் படித்து அவற்றில் தகுதியாக உள்ளனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படி தொகுத்தவர் திரு சந்தானம் சீனிவாசன்.

இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.

*

நூலில் உள்ள அத்தியாயங்கள் இதோ:

அத்தியாயங்கள்

   1. மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்!

 2. உலகில் தலை சிறந்த ஜோடி!

 3. ரேஷனும் பேஷனும்

 4. கடவுளும் மனைவியும்

 5. நம்ம பொண்ணுங்க! நம்ப பசங்க!

 6. வேதனையும் சாதனையும்

 7. ரேஷன் கார்டும், ஆதார் கார்டும்

 8. வாழ்க்கையும் வழுக்கையும்

 9. பொறுமையும் பொறாமையும்

10. பேச்சும் மௌனமும்

11. முடியும் ஆனா முடியாது

12. ‘அ’க்கு அடுத்து ‘ஆ’

13. வேண்டியதும் வேண்டாததும்

14. கல்லும் சொல்லும்

15. முட்டாளும் புத்திசாலியும்

16. பாவமும் பாசமும்

17. நட்பும் காதலும்

18. உண்மையும் பொய்யும்

19. பாரமும் தூரமும்

20. அன்பும் அந்தரங்கமும்

21. போரும் சமாதானமும்

22. பேனாவும் பென்சிலும்

23. பொறுமையும் எரிச்சலும்

24. நடிகையும் நடிகனும்

**

இதை வெளியிட்ட புஸ்தகா பதிப்பக உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் பாராட்டுக்குரியவர். நல்ல முறையில் நேர்த்தியாக புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது.

புத்தகம் பற்றி அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் போன் எண் : 9980387852

நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணையதளத்தில் பார்க்கலாம்.

Leave a comment

Leave a comment