சிதம்பரத் தலத்தின் மஹிமை! (Post No.13,025

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.025

Date uploaded in London – — 21 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சிதம்பரத் தலத்தின் மஹிமை! 

ச.நாகராஜன்

விஷ்ணுவிடம் சிவபிரான் கூறி அருளிய ஒரு அருளுரை சிதம்பரத்தின் மஹிமை பற்றித் தெளிவாக விளக்குகிறது.

இதை ஸ்கந்த புராணத்தில் சூர சம்ஹிதை, யக்ஞவைபவ காண்டம் 28வது அத்தியாயத்தில் காணலாம்.

அதன் சுருக்கம் வருமாறு:

சிவபிரான் விஷ்ணுவை நோக்கிக் கூறுவது:

புத்தியையும் முக்தியையும் கொடுக்கும் தலங்கள் ஆத்யாத்மிகம், ஆதி பௌதிகம் என இரு வகைப்படும்.

ஆத்யாத்மிகம் யோகிகளால் வணங்கப்படும் பிரமரந்திர ஸ்தானமும், கண், காது, மூக்கு, கபோலம், உதடு, தலை, சந்தியக்கிரங்களுடன் கூடிய் பாதம், கை, வயிறு, நாபி, இரு விலாப்பக்கங்கள், ஆதாரங்கள் ஆறும்,

கைலாய மலையும், காளத்தி, வாரணாவாசி, சோமநாதம், கேதாரம், ஶ்ரீசைலம்,விருத்தாசலம், கோபர்வதம், சீதர க்ஷேத்திரம், ஆதிபுரம், ஸ்வேதாரண்யம், திருதித்தானம், திரிகோடிகா, திருவிடைமருதூர், கும்பகோணம், தக்ஷிணாவர்த்தம், கச்சபேஸ்வரம், வன்மீகக்ஷேத்திரம், கஜாரண்யம், வேதாரண்யம், மதுரை, இராமேஸ்வரம், பண்டரீகபுரம் உள்ளிட்டவையும் இது போன்ற க்ஷேத்திரங்களுமாகும்.

இவைகளுள் சிதம்பரத் தலமானது பலவகை போகங்களைக் கொடுக்கும். பாவங்களை எல்லாம் அழிக்கும். சிவஞானத்தையும் கொடுக்கும்.

ஆதலால் சிதம்பரம் எல்லாவற்றுள்ளும் உத்தமமானது. சகல உயிர்களும்  வணங்கி கதி அடைவதற்காகவே அந்தத் தலம் நம்மால் நியமிக்கப்பட்டது.

அந்தத் தலத்தில் நாம் ஆனந்த தாண்டவம் செய்வோம். அந்த நடனத்தைத் தேவர்களும் கண்டு தரிசிப்பார்கள்.

நூல்களாலும், தர்க்கங்களினாலும்  மனம் மயங்கி இருப்போர்கள் அந்தத் தலத்தைத் தரிசிக்க முடியாது.  நம்மிடம் உண்மையான பக்தி உடையவர்களே அந்தத் தலத்திற்கு வந்து அந்த நடனத்தைக் கண்டுத் தரிசிக்கத் தக்கவர்களாவார்கள்.

அந்தத் தலத்தைத் தரிசிக்காதவன் வேள்விகள் செய்தாலும் சொர்க்கம் அடைய மாட்டான்.

ஞானம் பெற்றவனானாலும் சிதம்பரத்தைத் தரிசிக்காதவன் கதி பெற மாட்டான். அவன் செய்யும் தர்மமும் பாவமாகும். உயர்ந்த அந்தணனானாலும் அவன் இழிந்தவனே.

அந்தத் தலம் நமக்கு மிகவும் பிரியமானது. முக்தி அடைய வேண்டியவர்களுக்கு அந்தத் தலம் தரிசிக்கக் கிடைக்கும்.

இதை உணர்க!

என்று இவ்வாறு சிவபிரான் திருமாலுக்கு உபதேசித்தார்.

அடுத்து எது எதெல்லாம் சிவப்பிரீதிகரம் என்பதை 30ம் அத்தியாயம் விரிவாக எடுத்துரைக்கிறது.

வேதத்தினால் உண்டாகின்ற த்வைத ஞானம்,

வேதாந்த வாக்கியத்தால் உண்டாகும் எல்லாம் சிவமே என்கின்ற அத்வைத ஞானம்,

அர்த்த நாரீஸ்வரம், ஆனந்த தாண்டவம் முதலிய மூர்த்தங்களில் செய்யப்படும் தியானம்,

சம்பு, சங்கரன் என்ற நாமங்களை உச்சரித்தல்,

இடைவிடாமல் உண்டாகும் சிவபக்தி,

குரு பக்தி,

வேதாகமங்களிலும் புராணங்களிலும் விருப்பம்,

வேதம் ஓதுதல்,

வேதாகமங்களை ஓதுவித்தல்,

வேதாகமப் பொருளை நிச்சயித்தல்,

ஜாபாலம் கூறியபடி திருநீறு தரித்தல்,

ருத்ராட்சம் அணிதல்,

சிவலிங்க பூஜை,

சிவனடியாரை பூஜித்தல்,

காசி முதலான தலங்களுக்கு யாத்திரை செல்லுதல்,

சாந்தி முதலிய நற்குணங்களை விரும்பல்,

அழியும் பொருளைப் பற்றி அறியும் ஞானம்,

விராகமும், யாகம் தவம், தானம் முதலானவைகள்,

அறமும், பரிசுத்தமும், விதியை அனுசரித்தல்,

விலக்கை ஒழித்தல்,

துஷ்டருடன் சிநேகம் செய்யாமல் இருத்தல்,

பிறர் புகழைப் பேசுதல்,

நிந்தை கூறாதிருத்தல்,

ஆலயப் பணிவிடை செய்தல்,

பந்தத்தை ஒழிக்க முயலுதல்,

சிவ பிராமணர்களைத் தெய்வமாக பாவித்தல்,

ஆகிய இவை எல்லாம் சிவப்பிரீதிகரமாகும்.

சிவயோகிக்குப் பணிவிடை செய்வது இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது.

***

Leave a comment

Leave a comment