ஸ்டீவ் ஜாப்ஸ் : எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -1– 1 (Post No.13,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.030

Date uploaded in London – — 23 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 21-2-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -1 

ச. நாகராஜன்

ஆப்பிள் எப்படி இருக்கிறது?

ஆப்பிள் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அந்தக் காலத்தில் சுவையாக இருக்கிறது என்று பதில் வரும்!

அதே கேள்வியை இந்தக் காலத்தில் மாணவ மாணவியரிடம்  கேட்டுப் பாருங்கள்,  “பிரமாதமா இருக்கு, எல்லா வேலையையும் ஃபாஸ்டா செய்யுது” என்று சொல்வார்கள்.

ஆப்பிள் கணினி இல்லாத இடமே உலகில் இப்போது இல்லை.

அத்தோடு உங்கள் கையில் இருக்கும் ஐ பாட், ஐ போன் இவற்றையெல்லாம் உலகிற்கு அளித்து உலகின் போக்கையே மாற்றிய ஒருவர் யார் தெரியுமா? அவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்!

நவீன சாதனங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் நாளும் முன்னேறுபவர்கள், இசை கேட்டு அனுபவிப்பவர்கள், குடும்பம், உறவு, நண்பர்களிடம் பேசி மகிழ்பவர்கள் ஆகிய அனைவரும் நன்றி சொல்ல வேண்டியது இந்த அமெரிக்கருக்குத் தான்!

பிறப்பும் இளமையும்

ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி பிறந்தார்.

சிரியாவில் பிறந்த அப்துல்ஃபட்டா ஜான் ஜண்டலிக்கும், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த அமெரிக்கரான ஜோன் கரோல் ஷியபிளுக்கும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது, திருமணமாகாத நிலையில் பிறந்தவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். இருவரும் ஜாப்ஸை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர்.

அதன் படி பால் ரெய்ன்ஹோல்ட் ஜாப்ஸுக்கும் அவர் மனைவி க்ளாரா ஜாப்ஸுக்கும் குழந்தை தத்து கொடுக்கப்பட்டது. பால் ஒரு மெக்கானிக். தச்சு வேலை செய்ததால் அவர் ஒரு கார்பெண்டரும் கூட! தனது பையன் ஸ்டீவ்ஸுக்கு அவர் அடிப்படை எலக்ட்ரானிக்ஸைக் கற்றுத் தந்தார். ரேடியோ, டெலிவிஷன் பெட்டிகளிலிருந்து பாகங்களை எப்படிப் பிரிப்பது, அவற்றை எப்படி மீண்டும் இணைப்பது என்பதை அவர் சொல்லித் தரவே ஸ்டீவ்ஸுக்கு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது ஒரு அபாரமான ஈடுபாடு ஏற்பட்டது.

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஸ்டீவ்ஸ் ஆரேகானில் ரீட் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அங்கு கட்டணம் மிக அதிகம்; அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆறே மாதங்களில் அதை விட்டு வெளியேறினார். அடுத்த 18 மாதங்களில் தன் கையெழுத்து வன்மையைக் காட்டிப் பல்வேறு விதமாக எழுதுவதை க்ரியேடிவாகச் செய்ய ஆரம்பித்தார்.

இந்தியாவிற்கு வருகை

இந்த நிலையில் அவருக்கு ஆன்மீக தாகம் ஏற்பட்டது. ஆகவே இந்தியாவிற்கு 1974ஆம் ஆண்டு வந்தார். டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பஸ்ஸில் செல்வது அவரது வழக்கம்.

அவர் நாடி வந்த நீம் கரோலி பாபாவோ 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே மரணம் அடைந்திருந்தார். ஆகவே அவர் ஹைடகன் பாபாஜி என்ற இன்னொரு மகானைச் சந்தித்தார். ஏழு மாதங்கள் இந்தியாவில் இருந்து விட்டு தியான முறைகளைக் கற்ற பின்னர் அமெரிக்கா திரும்பினார் ஸ்டீவ்ஸ்.

புத்த மதத்தின் ஜென் பிரிவில் அவருக்கு அபார ஈடுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையின் இறுதி வரை ஜஜென் என்னும் தியான முறையில் அவர் ஈடுபட்டார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றம்

எலக்ட்ரானிக்ஸில் நிபுணரான அவர் வீடியோ கேம்களுக்கான சர்க்யூட் போர்டைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் அவருக்கு வோஜ்னியக் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து தொலைபேசி நெட் ஒர்க்கிற்கான ப்ளூ பாக்ஸ்களை செய்ய ஆரம்பித்தார். இதுவே ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவுவதற்கான அடிப்படையாக அமைந்தது. 1976அம் ஆண்டு ஸ்டீவ்ஸின் வீட்டிலிருந்த ஒரு காரேஜில் ஆப்பிள் கணினி நிறுவனம் வோஜ்னிக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.

மளமளவென்று உயர்ந்த நிறுவனத்தில் 1984ஆம் ஆண்டு அதிகாரப் போட்டி ஏற்பட்டது. ஸ்டீவ்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மனம் தளராத அவர் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றி நடை போட ஆரம்பித்தார். ஆப்பிள் நிறுவனம் நலிவடைந்து விடவே, 1997ஆம் ஆண்டு ஸ்டீவ்ஸ் மீண்டும் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதை உலகின் தலை சிறந்த நிறுவனமாக ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

ஐபாட், ஐபோன் என உலகமே அவரது அறிமுகப்படைப்புகளால் “ஆட்டம்” போட ஆரம்பித்தது.

அவரைப் பற்றிய நூற்றுக் கணக்கான அதிசய சம்பவங்கள் உண்டு.

எடுத்துக்காட்டிற்கு ஒன்றாக இதைச் சொல்லலாம்:

  கார் நம்பர் ப்ளேட் பொருத்துவதைப் பற்றி கலிபோர்னியாவில் ஒரு விசித்திரமான விதி உண்டு. நம்பர் வழங்கிய பின்னர் ஆறு மாதம் வரை புது காரில் நம்பர் ப்ளேட்டைப் பொருத்தாமல் ஓட்டலாம். இந்த விதியைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஒவ்வொரு மாதமும் புதுக் காரை அதே மாடலில் மாற்றிக் கொண்டே இருந்தார். ஆகவே அவரது மெர்ஸிடஸ் பென்ஸ் SL 55 AMG மாடல் காரில் ஒரு போதும் நம்பர் ப்ளேட்டை அவர் பொருத்தியதே இல்லை! இதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது! ஒருவேளை ‘வித்தியாசமாக யோசி’ என்ற அவரது வாழ்க்கை தாரக மந்திரமே இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்!!

*

TAGS- Apple, Steve Jobs, Part 1

Leave a comment

Leave a comment