Quiz ஆந்தை பத்து Quiz (Post No.13,031)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,031

Date uploaded in London – –   23 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Quiz Serial Number- 115

Greek Coin with Owl

1.வேதத்தில் ஆந்தைகள் பற்றிய குறிப்பு உண்டா?

ஆந்தை யார்யாருக்கு வாகனம் ?

xxxx

2.ஆந்தைக்கும் இசைக்கும் என்ன தொடர்பு ?

xxxx

3.ஆந்தை அலறினால் கேட்ட சகுனம்மரணம் சம்பவிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன ?

xxxx

4.தேவர்களில் மற்றும் யாருக்கு  யாருக்கு ஆந்தை என்று பெயர் ?

xxxx

5.வெளிநாட்டு ஆந்தைக்கும்தமிழ்நாட்டு ஆந்தைக்கும் தொடர்பு உண்டா?

xxxx

6.வள்ளுவர் ஆந்தை பற்றி என்ன சொல்கிறார் ?

xxxx

7.அஸ்வத்தாமன் செய்த பாண்டவர் படுகொலைக்கு ஆந்தை எப்படி உதவியது? ?

xxxx

8.பஞ்சாங்கத்தில் ஆந்தை ஏன் வருகிறது?

xxxx

9.ஆந்தைக்கு தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் வேறு என்ன பெயர்கள் இருக்கின்றன ?

xxxx

10.ஆந்தை பற்றி 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்

xxxx

10.ஆந்தை அலறல் …….. சகுனம் .

ஆந்தை …….  ……… பெரிது .

ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் …………….. பஞ்சையில்லை .

ஆந்தை ………….     …………… விழிக்கிறான்.

xxxxxxxxxxx

Barn Owl

ANSWERS

1.இந்துக்களின் தெய்வங்களான சாமுண்டிக்கும் லெட்சுமிக்கும் ஆந்தை வாஹனம்; இதேபோல,  கிரேக்க நாட்டின் தேவதை அதீனாவுக்கு ஆந்தை வாகனம் அல்லது பிரியமான பறவை.

வேதத்தில் ஆந்தை

உலகின் மிகப் பழமையான மத நூல் ரிக் வேதம். இதிலும் ஆந்தை இடம் பெறுகிறது. உலூக (10-165-4; 7-104-17) என்ற பெயரில் ஆந்தையைக் குறித்தனர். தீய சகுனமாகவே வருணிக்கிறது (அதர்வ வேதம் 6-19-2)வாஜசனேய சம்ஹிதையில், அஸ்வமேத யாகத்தில் அக்னியில் போடப்பட்ட பட்டியலில் ஆந்தையை வனதேவதைகளுக்கு என சொல்லி இருக்கிறது.

xxxx

2.ஆந்தையும் இசையும்

“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து

அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை

பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப”– (நற்றிணை 394, அவ்வையார்)

பொருள்:–மரங்கள் உள்ள அகன்ற காட்டில் வாடிய ஞெமை மரத்தில் பேராந்தை இருந்தது. அது பொற்கொல்லன் தொழில் செய்யும்போது ஏற்படும் ஒலி போல இனிய ஒலியை எழுப்பியது.

“உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்

கடுங்குரல் குடிஞை” –(அகம் 19)

பொருள்: உருளும் இழுகு பறையின் ஓசையினைப் போல பொருள் தெரிய ஒலிக்கும் கடுமையான குரலை உடைய ஆந்தைகள் உள்ள பெரிய மலை.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ஆந்தையின் பாட்டு நல்ல நிமித்தம் எனப் பாடப்பட்டுள்ளது. இதற்கு உரை எழுதிய ‘’உச்சிமேற் புலவர் கொள்’’ நச்சினார்க்கினியர், “மணம் பரப்பும் கோங்கின் உச்சியிலே குவிந்த அரும்பின் முகட்டிலே தேன் போல இனிமை பொருந்திய ஒலியையுடைய யாழினைப் போல ஆந்தை அமர்ந்து பாடும்” – என்று கூறுகிறார். அதன் குரல் யாழின் ஒலிக்கு உவமையாக்கப் பட்டுள்ளது.

இதையே சம்ஸ்கிருதத்தில் உள்ள லிங்க புராணமும் கூறுகிறது.

ஆந்தைகள் எழுப்பும் ஒலி, சங்கீத ஸ்வரம் போல இருப்பதாக இந்துமத நூல்கள் சில கூறும். (Brown Wood Owl is said to consist of four deep musical syllables, who—hoo—hoo—hoo) மர ஆந்தையின் குரல் 4 ஸ்வரங்களை உடையது. லிங்க புராணத்தில் நாரத முனிவரை இமய மலையில் மானசரோவர் ஏரிக்கரையில் வசிக்கும் ஆந்தையிடம் சங்கீதம் கற்கச் சொன்னதாக எழுதி இருக்கிறது. ஆகவே ஆந்தையில் ஒருவகை எழுப்பும் இசை ஒலியை இந்துக்கள் போற்றினர் என்று இந்தக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

xxxx

3.சாவுக்கும் ஆந்தைக்கும் தொடர்பு

புறநானூற்றுப் பாடல்கள் ஆந்தையை மரணத்துடனும் இடுகாடு–சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. தமிழர்களுக்கு சகுன சாத்திரத்தில், அதாவது புள் நிமித்தத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆந்தையின் கூக்குரல் பற்றி அவர்கள் பயப்படுகின்றனர். மரணத்தோடு தொடர்பு படுத்தும் மூன்று புறநானூற்றுப் பாடல்களே இதற்குச் சான்று கூறும்.

“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்

இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை

கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)

பொருள்: நிலவானது மேற்குத் திசையில் மறைந்து இருளைப் பரப்பும் நேரத்தில் வீட்டில் வாழும் எலிகளை இரையாக உண்ணும் கூகை— பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்.

“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை

சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்

கள்ளியம் பறந்தவை” – (புறம்.240)

பொருள்: ஆயண்டிரன் இறந்தவுடன் அவனது உரிமை மகளிரும் தீப்பாய்ந்து மாய்ந்தனர். பிளவுபட்ட வாயுடைய பேராந்தைகள், ‘சுட்டுக்குவி’ என்று செத்தோரை அழைப்பது போலக்கூவும். கள்ளிச் செடிகளை உடைய சுடுகாட்டில்,,,,,,,,,,,,,,,

பல் ஆ தழீஇய கல்லா வல்வில்

உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி–(புறம்.261)

இப்போது பல பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிய கல்லாத வன்மையான வில்வீரனை கூகையானது தன் இனத்தாரை அழைப்பது போல அலைத்து துரத்தும்

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்

கூகைக் கோழி ஆனாத்

தாழிய பெருங்காடெய்திய ஞான்றே (புறம்.364, கூகைக் கோழியார்)

பொருள்:

முதிய மரத்தின் பொந்துகளில் இருந்து கதும் எனக்கூவும் பேராந்தைகள் நீங்காத தாழிகளை உடைய இடுகாட்டை………………………..

பொருள்: வலிமைமிகு கூகையே! ஊர்வாசலில் நீர்த்துறையில் நிற்கும், கடவுள் இருப்பதாகக் கருதப்படும் மரத்தில் இருப்பாய். வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூரிய நகங்கள் உடைய நீ, உன் வாயால் பிறரை வருத்துகிறாய்.. உனக்கு ஆட்டு மாமிசத்தோடு நெய் கலந்த சோறு தருவோம். வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் தருவோம். என் காதலர் வரும் இரவு நேரத்தில் பயமுறுத்தும் சப்தத்தைப் போடாமல் இரு.( நற்றிணை 83 )

குடும்பங்கள் வாழும் கூடாரத்தின் மேல் கோட்டான்கள் உட்கார்ந்தால் பழங்குடி மக்கள் சில பரிகாரங்களைச் செய்வர். சிலநேரங்களில் புதுக் கூரையே வேய்ந்துவிடுவர் என்று பிலோ இருதயநாத் கூறுவார். இவர் பழங்குடி இனங்களை ஆராய்பவர்.

xxxx

4.இந்திரனுக்கு உலூக  என்றும் விச்வாமித்திரருக்கு கெளசிக /ஆந்தை என்றும் பெயர் .

xxxx

Greek Goddess Athena with Owl

London Birkbeck College Logo

5.உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது . மேலை  நாடுகள்  முழுதும் ஆந்தையை ஞானத்தின் சின்னமாகக் கருதி பல கல்வி நிறுவனங்களின் சின்னங்களில் ஆந்தையை சித்ததரித்து இருக்கிறார்கள் தமிழ்நாட்டிலும் பல புலவர்கள் பெயர்கள் ஆந்தை என்று முடிகிறது ; அவர்கள் ஆந்தையூர் என்ற ஊர்க்காரர்கள் என்று ஆதாரமில்லாமல் பலரும் எழுதி இருக்கிறார்கள் ; நான் நினைக்கிறேன் எப்படி விச்வாமித்திரனையும் இந்திரனையும் ஆந்தை என்று அழைத்தனரோ அப்படி அந்தப் புலவர்களையும் அழைத்திருப்பார்கள் என்று.  தமிழில் பிசிர் ஆந்தையார்ஓதல் ஆந்தையார்கூகைக் கோழியார் என்பன ஆந்தையின் பெயர்கள் உடையன. கௌசிகன் பெருங் கௌசிகன்,  என்ற புலவரும் சங்க காலத்தில் இருந்தனர்.

Xxxx

6.பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

பொருள் :-காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

xxxx

7.பஞ்ச தந்திரக் கதைகளில் ‘காகோலூகீயம்’ (காகம்+ உலூகம்) என்ற ஐந்தாவது தந்திரத்தில் எப்படிப் பகைவர்களைக் காலம் அறிந்து தீர்த்து க்கட்டலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை வள்ளுவரும் (குறள் 481) அப்படியே சொல்கிறார்.அஸ்வத்தாமனும் இதைக் கடைப்பிடித்து இரவு நேரத்தில் பாண்டவர்  கூடாரங்களை தீ வைத்து அழிக்கிறான் . பாண்டவர் ஐவர் மட்டும் தப்பிவிடுகின்றனர் .

xxxx

8.பஞ்சாங்கத்தில் ஆந்தை

பஞ்சாங்கத்தில் ஐந்து பறவைகளின் படங்களைப் போட்டு அதற்கான பலன்களை எழுதி இருப்பர். இதை பஞ்ச பக்ஷி சாஸ்திரம் என்பர்; அவைகளில் ஆந்தையும் ஒன்று. இது தவிர அவை பறக்கும் திசை, எழுப்பும் ஒலி, எத்தனை முறை ஒலி எழுப்பின என்பனவற்றின் அடிப்படையிலும் ஆரூடம் கூறுவர். மயில் வல்லூறு, சேவல்,காகம் ஆகிய நான்குடன் ஆந்தையையும் சேர்த்துக்கொண்டது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நேரத்தையும் பறவைகளின் அடிப்படையில் பிரிப்பர்..

xxxx

9.ஆந்தைக்கு தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் உள்ள பெயர்கள் :

ஆந்தை -இகுடி, பிங்கலை, கின்னரம்

சகோரம்- பேராந்தை

கோட்டான்- கூகை, உலோகம் குட்டிஞை , குரால்

ஆந்தையின் பல பெயர்கள்

ஆண்டலை, ஆந்தை, இருடி, உலூக, ஊமன், கின்னரம், கின்னரி, குரால், குடிஞை, கௌசிக, கூகை,கூன், கோட்டான், பிங்கலை,

ஆந்தையின் வடமொழிப் பெயாரான உலூக என்பதில் இருந்தே ஆங்கிலச் சொல்லான ‘அவுல்’’OWL வந்தது. உலூக, கௌசிக, இருடி என்பதெல்லாம் ரிஷிகளின் பெயர்கள். இந்தப் பெயரில் பழங்காலத்தில் ரிஷிகள் இருந்தனர்.

xxxx

10.ஆந்தை அலறல் கெட்ட சகுனம் .

ஆந்தை சிறிது கீச்சு பெரிது .

ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் சகுனத்தில் பஞ்சையில்லை .

ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்.

—-subham—

Tags–ஆந்தை, கெட்ட சகுனம், உலூக, கௌசிக, OWL, Quiz,கூகை,கூன், கோட்டான்

Leave a comment

Leave a comment