ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 2 (Post No.13,053)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.053

Date uploaded in London – — 1 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 2

ச. நாகராஜன் 

1960ல் எடுக்கப்பட்ட சைக்கோ படத்தின் முடிவை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அந்த நாவலின் பிரதிகள் முழுவதையும் இவர் வாங்கி விட்டார். அத்தோடு படம் ஆரம்பித்த பின்னர் யாரும் தியேட்டருக்குள் வரக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். அதை தியேட்டர் உரிமையாளர்களும் அப்படியே கடைப்பிடித்தனர். 109 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் இவருக்கு 320 லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. இவரது தயாரிப்பு செலவு எட்டுலட்சத்து ஏழாயிரம் டாலர்கள்.

குளியலறைக் காட்சி 78 காமராக்களை வைத்து 45 வினாடிகளில் 52 “கட்’ களுடன் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜேனட் லீயின் கண் பார்வையை மட்டும் 26 முறை படமாக்கினார் ஹிட்ச்காக்!

இதில் நடிப்பவர்கள் எந்தக் காட்சியைப் பற்றியும் முடிவைப் பற்றியும் யாருக்கும் சொல்லக் கூடாது என்று உறுதிமொழியையும் எடுக்கச் சொன்னார் ஹிட்ச்காக். அத்தோடு தொலைக்காட்சியில் தனக்காகப் பணியாற்றிய குழுவினரையே படம் பிடிக்க அழைத்தார்.

1963இல் எடுக்கப்பட்ட தி பேர்ட் படத்திற்கு 3000 நிஜப் பறவைகளும் இன்னும் இரண்டு லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் மெகானிக் பறவைகளும் பயன்படுத்தப்பட்டன.

பறவைகள் காமராவைப் பார்த்து வர வேண்டும் என்பதற்காக ஒரு இறைச்சித் துண்டு காமராவின் லென்ஸ்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பறவைகள் தாக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் பார்ப்பவர் கதிகலக்கம் அடைவது இயல்பே. இதில் கதாநாயகியாக நடித்தவர் டிப்பி ஹெட்ரன். 119 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஹெட்ரனைப் பறவைகள் தாக்கும் காட்சி மட்டும் 7 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் நடித்த அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – அந்த ஷாக்கிலிருந்து விடுபட!

லண்டனில் பேர்ட் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிய ரசிகர்கள் அலறி விட்டார்கள் – தாங்கள் திரைப்படத்தில் பார்த்து விட்டு வந்த பறவைகள் நிஜமாகவே அலறும் சத்தத்தைக் கேட்டு! ஆம், வெளியே யாருக்கும் தெரியாதபடி மரக்கிளைகளில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் பறவைகள் அலறும் ஒலி ஒலிபரப்பப்பட்டது!

இசையை ஹிட்ச்காக் பயன்படுத்திய விதம் அனைவராலும் பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்தது. ஒரு காட்சி முடியும்போது அடுத்த காட்சி ஆரம்பிக்கும் சில விநாடிகளில் அவர் இசையைப் பயன்படுத்திய விதம் அனைவரையும் வியப்படைய வைத்தது!

இப்படி ஹிட்ச்காக்கைப் பற்றிய ஏராளமான செய்திகள் உண்டு.

முக்கியமான காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த இணையதள யுகத்தில் இந்த மூன்று நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ( நிச்சயம் பார்க்கப்பட வேண்டியவை டு கேட்ச் எ தீஃப் – கார் ரேஸ், சைக்கோ -குளியலறைக் காட்சி, தி பேர்ட்  – பறவைகள் தாக்கும் ஃபைனல் அட்டாக் காட்சி)

அவரை வருத்திய ஒரே விஷயம்

தனது உடலைப் பற்றி அவர் வெகுவாக அதிருப்தி கொண்டிருந்தார். அப்படி ஒரு பருமன்! வாழ்நாள் முழுவதும் அவரை வருந்தச் செய்த விஷயம் இது தான்!

மறைவு

1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் ஹிட்ச்காக சிறுநீரகக் கோளாறால் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. அவரது உடல் எரிக்கப்பட்டு, அஸ்தி பசிபிக் மகா சமுத்திரத்தில் தூவப்பட்டது.

அறுபது ஆண்டுகளில் அவர் எடுத்த படங்கள் 50.

46 முறை அகாடமி விருதுக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டாலும் ஒரு முறை கூட அவர் அந்த விருதைப் பெறவில்லை.

என்றாலும் கூட லட்சோபலட்சம் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் இடம் அந்த விருதை விடப் பெரியதே!

2018இல் அமெரிக்க நேஷனல் பிலிம் பதிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படங்களில் அவரது எட்டுப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

அவருக்கு க்னைட் விருது 1980இல் அவர் மறைவதற்கு நான்கு மாதங்கள் முன்பாக பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.

வெற்றிக்குக் காரணம்

ஏராளமான நகைச்சுவை கலந்த பொன்மொழிகளை அவர் உதிர்த்துள்ளார். அவற்றில் அவர் கண்ட அனுபவ உண்மைகள் பொதிந்திருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு இரண்டு இதோ:

ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள். 1. ஸ்க்ரிப்ட் 2. ஸ்கிரிப்ட் 3.ஸ்கிரிப்ட் (கதையின் எழுத்து வடிவம்)

ஒரு படத்தின் நீளம் பார்ப்பவர் டாய்லெட்டுக்குப் போக வேண்டும் என்ற தாக்குப் பிடிக்கும் நேரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும்.

தனது வெற்றிக்கான காரணத்தைப் பற்றி அவரே கூறி இருக்கிறார் இப்படி:

தர்க்கத்தை விட முக்கியமானது கற்பனை வளம்.

இமாஜினேஷன் (IMAGINATION) என்ற இதே காரணத்தை தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறிய இன்னொருவர் – உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

நகல் எடுப்பவரை லட்சோபலட்சம் மக்களின் மனதில் ஏற்றி வைத்த  கற்பனை வளம் வெற்றிக்கு வழி காட்டும் அஸ்திவாரம் அல்லவா!

***

Leave a comment

Leave a comment