தேனீக்கள் தேவி பிரமராம்பா -2 (Post No.13,054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,054

Date uploaded in London – –   1 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கட்டுரையின் முதல் பகுதியில் ஆந்திரத்திலுள்ள ஸ்ரீ சைலம் கோவில் பிரமராம்பாவையும் மேற்கு வங்கத்தில் ஜலப்பைக்குரி அருகிலுள்ள பிரமராம்பாவையும் தரிசித்தோம்.

மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம் :

இந்து மதத்தில் மன்மதனைப் பற்றி புராணங்களும் காளிதாசனும் என்ன சொல்கின்றனரோ அதையே தமிழ்ப் புலவர்களும் செப்பினர். மன்மதனுக்கு கரும்பு வில். தேனீக்களான நாண்; அவன் ஐந்து மலர் அம்புகளை விட்டால் யாரும் காதல் வசப்படுவர். அவனுக்கும் மனைவி ரதி தேவிக்கும் கிளி வாகனம் ; இந்தச் சிலைகளை பல கோவில்களில் காணலாம். இதிலும் மலரும் தேனீயும் முக்கிய இடத்தைப் பெறுகிறது .

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபுதனத்தில் வாழ்ந்த இளவரசி மீராபாய்  , தமிழ்நாட்டு ஆண்டாள் போலவே கிருஷ்ணன் மீது அபார பக்தி கொண்டவள் ; அவள் பல பாடல்களில் தன்னை தேனீயாகவே உருவகித்துப் பாடியிருக்கிறாள் ; இறைவன் திருவடியில் கிடக்கும் தாமரைப்பூக்களில் உறையும் தேனீ போல இருங்கள் என்கிறார். மீரா பஜனை பாடாத  பஜனைகள் இல்லை; ஹிந்துஸ்தானி இன்னிசைக் கச்சேரிகள் இல்லை .

இதே போல கோபிகளின் தலைவி ராதாராணியும் கண்ணன் மீது அபார காதல் கொண்டவள்; அது தெய்வீக காதல் ; தோல் மீதான காதல் அல்ல  என்று சுவாமி விவேகானந்தர் உரைகளில் விளக்கியுள்ளார். மேலும் கோபிகளின் சேலைகளை கிருஷ்ணன் ஒளித்துவைத்த செய்தி 2000  ஆண்டு பழமையான சங்க இலக்கியத்திலும் உள்ளது . தொழுனை என்னும் யமுனை நதி   பற்றி சங்க நூல்களும் சிலப்பதிகாரமும் பாடுகிறது . அவ்வளவு பழமையான ராதா ராணியும் தேனீ மூலம் செய்தி அனுப்புகிறாள் காதலன் கண்ணனுக்கு . அது மட்டுமல்ல ஏ தேனீயே! நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே. உன் மீசையில் ஓட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம் நீ எத்தனை மலர்களை மேய்ந்திருக்கிறாய் என்பதை காட்டுகிறது. கண்ணனும் அப்படித்தான் போலும்; வெவ்வேறு மலர்களை / பெண்களை நாடுகிறான் போலும் என்று பாடுகிறாள் ; இதுவும் சங்க இலக்கியத்தில் உள்ளது ; ஆண்களை மலர் மேயும் வண்டுகள் என்று நற்றிணைப் புலவர் சாடுகிறார் .

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்

தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்

கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!         5

நீயே பெரு நலத்தையே; அவனே,

நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,

தண் கமழ் புது மலர் ஊதும்

வண்டு” என மொழிப; ”மகன்” என்னாரே.

—-மதுரை மருதன் இளநாகனார் பாடல், நற்றிணை 290

அவன் (காதலன்),

நீர் நிறைந்த பொய்கையில்

அன்றாடம் மலரும் புது மலர்களை

ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன்

என்று கூறுகின்றனர்.

அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை.”

xxxx

ஆதி சங்கரரும் நாராயண தீர்த்தரும்

சில நூறு ஆண்டுகளுக்கு  முன்னர் வாழ்ந்த நாராயண தீர்த்தர் (1700 CE) என்ற மஹான் பாடிய க்ஷேமம் குரு கோபால என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது. இதைக் கேட்டாலே வீட்டில் சகல செளபாக்கியமும், நித்திய க்ஷேமமும் உண்டாகும் என்பது நம் பிக்கை.  அவரும் அப்பாடலில் இறைவனின் பாத கமலம் என்னும்  தாமரையில் மொய்க்கும் தேனீயாக இருக்க வேண்டும் என்று பாடுகிறார் :-

“க்ஷேமம் குரு கோபால-

க்ஷேமம் குரு கோபால.. ஸந்ததம் மம

க்ஷேமம் குரு கோபால

காமம் தவ பாத……………….கமலப்ரமரீபவது

ஸ்ரீமந்மம மானஸ………… மதுஸூதன

………………

பாத கமல- பாத தாமரைகள்

ப்ரமரீ பவது – தேனீயாக வேண்டும்

xxxx 

ஆதி சங்கரரின் செளந்தரிய லஹரி

செளந்தர்யா லஹரி 6

धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाः

वसन्तः सामन्तो मलयमरु-दायोधन-रथः ।

तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपां

अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते-6

த⁴னு꞉ பௌஷ்பம்ʼ மௌர்வீ மது⁴கரமயீ பஞ்ச விஶிகா²꞉

வஸந்த꞉ ஸாமந்தோ மலயமருதா³யோத⁴னரத²꞉ .

ததா²ப்யேக꞉ ஸர்வம்ʼ ஹிமகி³ரிஸுதே காமபி க்ருʼபாம்

அபாங்கா³த்தே லப்³த்⁴வா ஜக³தி³த³-மனங்கோ³ விஜயதே .. 6..

******

भ्रुवौ भुग्ने किञ्चिद्भुवन-भय-भङ्गव्यसनिनि

त्वदीये नेत्राभ्यां मधुकर-रुचिभ्यां धृतगुणम् ।

धनु र्मन्ये सव्येतरकर गृहीतं रतिपतेः

प्रकोष्टे मुष्टौ च स्थगयते निगूढान्तर-मुमे-47

ப்⁴ருவௌ பு⁴க்³னே கிஞ்சித்³பு⁴வனப⁴யப⁴ங்க³வ்யஸனினி

த்வதீ³யே நேத்ராப்⁴யாம்ʼ மது⁴கரருசிப்⁴யாம்ʼ த்⁴ருʼதகு³ணம் .

த⁴னுர்மன்யே ஸவ்யேதரகரக்³ருʼஹீதம்ʼ ரதிபதே꞉

ப்ரகோஷ்டே² முஷ்டௌ ச ஸ்த²க³யதி நிகூ³டா⁴ந்தரமுமே .. 47..

மதுகர = தேனீ

Xxxx

மஹாபாரதத்தில் தேனீ / வண்டு

மஹாபாரதத்தில், கர்ணன் பொய் சொல்லி பிராமண பரசுராமரிடம் வில்வித்தை கற்கப்போன கதை எல்லோருக்கும் தெரியும் (இந்தப் பரசுராமர் வேறு ; ராமாயண பரசுராமர் வேறு). கர்ணன் மடி மீது குருநாதர் உறங்கும் பொழுது ஒரு வண்டு /தேனீ , கர்ணனின் தொடையில் உட்கார்ந்து குடைய, ரத்தம் வெளியேறியது ; ரத்தத்தால் உடல் நனைந்த பரசுராமர் எழுந்து நீ பிராமணனாக இருந்தால் அலறி ஒடியிருப்பாய்; உண்மையைச் சொல்; யார் நீ? என்று அதட்டிக் கேட்க கர்ணன் பிராமணன் இல்லை க்ஷத்திரியன் என்பதை ஒப்புக்கொண்டான்  இங்கும் அறுகால் பறவை  முக்கியம் பெறுவதோடு கதையின் போக்கையே மாற்றும் ஒரு அம்சமாகத் திகழ்கிறது .

xxxxx

இந்தியா ஒரே நாடு ; இமயம் முதல் குமரிவரை அவர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள் ; இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியது காளிதாசனும் ஆதி சங்கரரும், கம்பரும்தான் ; வெள்ளைக்காரன் இல்லை என்பதற்கு தேனீ ஆராய்ச்சி மிகவும் உதவுகிறது

வடக்கு தெற்கு  ஆகிய இரு திசைப்  புலவர்களும் தேனீயை அறுகாலி  என்றே அழைத்தனர் .

இரு மொழிப்புலவர்களும் யானையின் மதத்தைச் சுற்றி வரும் வண்டுகள், தேனீக்கள் செய்யும் ரீங்காரம் இசைபோல தொனிக்கிறது என்று பாடியுள்ளனர் .

மேலும் மன்மதன் பற்றியும் ஒரே கருத்தை தெரிவித்துள்ளனர் .

தேனீக்களிடம் பேசுவது தூது அனுப்புவது ஆகியவற்றிலும் ஒரே நடை முறையைப் பின்பற்றியுள்ளனர் .

To be continued……………………………………………

Tags- தேனீ, மஹாபாரதத்தில், ஆதி சங்கரர் நாராயண தீர்த்தர், கர்ணன், ராதாராணி, மீராபாய்

Leave a comment

Leave a comment