சங்க இலக்கியத்தில் தேனீக்கள்;  தேனீக்கள் தேவி பிரமராம்பா- 4 (Post No.13,062)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,062

Date uploaded in London – –   4 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

சங்க இலக்கியத்தில் தேனீக்கள்;  தேனீக்கள் தேவி பிரமராம்பா- 4

கடந்த மூன்று கட்டுரைகளில் இந்து மதத்தில் தேனீக்கள், காளிதாசன் காவியங்களில்  தேனீக்கள் முதலிய விஷ்யங்களைக் கண்டோம் ; இந்துக்கள் இமயம் முதல் குமரி  வரை  தேனீக்கள் பற்றி ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதையும் பார்த்தோம் ; யானையின் மதத்தைச் சுற்றி வட்டமிடும் தேனீக்கள், தூது போகும்  தேனீக்கள், பூக்களை சுற்றி வட்டமிடும் தேனீக்களின் ரீங்காரம் யாழ் இசை போன்றது , தேனீக்கள் பறப்பது பெண்களின் புருவத்தை ஒத்தது , மன்மதனின் வில்லின் நாண், தேனீக்களால் ஆனது, தேனீக்களையும்  வண்டுகளையும்  ஆறு கால் பறவை அல்லது ஆறு காலி (சம்ஸ்க்ருதத்தில் ஷட்  பத ) என்று  அழைப்பது  போன்ற பல ஒப்புவமைகளைக் கண்டோம் . அதற்கு இணையான சங்க இலக்கியப் பாடல்களைப் படியுங்கள் :–

குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,

நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த    10

தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,

மணி நா யாத்த மாண் வினைத் தேரன்,– அகம் 4

தேனீக்கள் மீதுள்ள அன்பின் காரணமாக மணி ஓசை கேட்டு அவைகள் விழித்துவிடக்கூடாது என்று மணியின் நாக்கு போன்ற பகுதியை இழுத்துக் கட்டிவிட்டான் தலைவன்!!

xxxxx

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!

காமம் செப்பாது, கண்டது மொழிமோ:

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,

செறி எயிற்று, அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

குறுந்தொகை -2

தேனைத் தேர்ந்தெடுத்து உண்ணும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளைக் கொண்ட தும்பி இனத்து வண்டே!

காம உணர்வு இல்லாமல்   நீ உணர்ந்த உண்மைமையைச் சொல். தேன் உண்ணும் பழக்கத்தால் நீயும் நானும் நண்பர்கள். இந்த நட்பு உரிமையால் கேட்கிறேன். இந்த அரிவையின் கூந்தலில் உள்ள மலரில் நீ உண்ட தேனைக் காட்டிலும் நறுமணம் கொண்ட தேனை நீ அறிந்தது உண்டா?

xxxxx

தூது போகும் தேனீ

அம்ம வாழியோ மணிச் சிறைத் தும்பி!

நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு

அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,

கடவை மிடைந்த துடவை அம் சிறு தினைத்

துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ அரசர்

நிரை செலல் நுண் தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோற்கே!- குறுந்தொகை 392

இதை இயற்றிய புலவர் பெயர்கூட தும்பிசேர் கீரனார்

மணிச்சிறகு கொண்ட தும்பியே! அம்ம! வாழி! நல்ல சொல் சொல்வதற்கு அச்சம் தேவையில்லை. நீ அவர் நாட்டுக்கு மலைக்குச் செல்வாயானால் அங்குக் கடவையும் துடவையுமாகக் கிடக்கும் நிலத்தில் விளைந்த தினையைக் குண்டாந்தடியால் அடித்துக் கோதுகளைப் போக்கிக்கொண்டிருப்பவர்களின் தங்கை அவர்களுக்கு உரியவள் அல்லள். அரசனின் தோல்படை போல ஈ பறக்கும் தேன்கூடுகள் நிறைந்த மலைகிழவனுக்கே உரியவள் என்று சொல்லிவை. 

xxxx

தூது போகும் தேனீ

கொடியைவாழி தும்பி!  இந் நோய்

படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;

மெய்யே கருமை அன்றியும், செவ்வன்

அறிவும் கரிதோ அறனிலோய்! நினக்கே?

மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை    5

நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய

தாறு படு பீரம் ஊதி, வேறுபட

நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:

சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்

நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர்,      10

வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு

என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.

நற்றிணை  277

தும்பியே, நீ கொடுமை செய்கிறாய். என்னைப் போலவே காம-நோயில் துன்புறுவாயாக! நான் உன்னை இப்படித்தான் திட்டுவேன். உன் உடம்புதான் கறுப்பாக இருக்கிறது என்று எண்ணினேன். அறிவும் முழுதும் கருமையாகி இருண்டு கிடக்கிறதே! அறநெறி உன்னிடம் இல்லை. என் வீட்டைக் காக்கும் முள் வேலியில் மகரந்தத் தாது மண்டிக் கிடக்கும் பீர்க்கம் பூவை ஊதி அதில் உள்ள தேனை உண்ணுகிறாய். பூ மணம் இல்லாத பசலையை ஊத மறுக்கிறாய். முன்பு உன்னைப் பிடிக்க ஓடினேன். அதன் பயன் போலும்; இப்போது என் காதலர் அன்பு இல்லாதவராக என்னை விட்டுவிட்டு மலைக்காட்டு வழியில் சென்றுவிட்டார். நான் அவரை நினைத்து வருந்துகிறேன் என்று அவரிடம் சென்று நீ சொல்வாயாக. இப்படித் தலைவி தும்பியிடம் பேசுகிறாள்.

xxxxx

சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்

ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,

கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,

நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய

அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை  5

வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!– அகம் 46

xxxx

அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,

என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,

இன்றே இவணம் ஆகி, நாளை,

2

புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற    5

அகலா அம் துளை, கோடை முகத்தலின்,

நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல்

ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், —அகம் 225

புதராக முளைத்து ஆடிக்கொண்டிருக்கும் மூங்கிலில், வண்டு துளைத்த ஓட்டை வழியே கோடைக்காற்று பாயும்போது, தண்ணீர்ப் பருகச் செல்லும் பசுக்கூட்டத்தின் பின்னே செல்லும் ஆயன் தன் நீண்ட புல்லாங்குழலை ஊதும்போது எழும் இசை போல, காட்டுமூங்கில் துளையில் மெதுவாக இசைக்கும் ஒலியைக் கேட்பேனோ?

மூங்கில் துளை வழியாக வரும் காற்று புல்லாங்குழல் போல ஊதுகிறது என்ற கருத்து காளிதாஸனிலும் உளது.

xxxx

முளை வளர் முதல மூங்கில் முருக்கி,

கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,

நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய,

பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்

குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,           5

கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,

செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்

யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,

வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்– அகம் 332

முளைத்து வளரும் மூங்கில் முளையை முருக்கி, தன் சுற்றத்துடன் மேய்ந்த கருகரு ஆண்யானையானது, தண்ணீர் இருக்குமிடத்தில், நீர் பருக வரும் விலங்கை இரையாக்கிக்கொள்ளக் காத்திருக்கும் போராற்றல் உழுவையைக் குத்தித் தொலைத்துவிட்டு, குருதி படிந்திருந்த தன் கொம்புகளை பொழியும் மழைநீரில் கழுவிக்கொண்டு, மலையடுக்கத்தில் உள்ள கல்லுக் குகைக்கு மெல்ல மெல்ல நடந்து சென்று, தன்னோடு போராடும் புலியை அடக்கிய செம்மாப்போடு, காம உணர்வு கண்ணில் மதமாக ஒழுக, அதனை வண்டுகள் யாழிசையுடன் மொய்த்துக்கொண்டிருக்கையில், தன் பெண்யானையோடு உடலுறவு கொண்டுவிட்டு வழை மரம் வளர்ந்திருக்கும் மலைச்சோலையில் உறங்கும் நாட்டின் தலைவன் என் நாடன்.

xxxxxx

கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை 10

வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்

தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை

இருங் கவுட் கடாஅம் கனவும்,

பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.– அகம் 132

  • உன் ஊர் – மழை பொழியும் மலைச்சாரல். அங்கே குளுமையான நீர்ச் சுனை. தேன் உன்னும் சிறிய சிறகினை உடைய பறவை சுனையிலுள்ள மொட்டுகளின் வாயைத் திறக்கும். பின்னர் வேங்கை மரத்தில் உள்ள மலரில் அமர்ந்து ஊதும் (ஒலிக்கும்). பின் காந்தள் மலருக்கு வந்து உறங்கும். உறங்கிக்கொண்டே யானையின் மதநீரை மொய்க்கக் கனவு காணும். இப்படிப்பட்ட மலைநாட்டில் உன் ஊர் உள்ளது. அந்த ஊருக்கு இவளைக் கொண்டுசெல்க.

xxxxxx

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்

பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்

நயன் இல் மாக்கள் போலவண்டினம்

சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,

மை இல் மான் இனம் மருள, பையென    5

வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,

ஐயறிவு அகற்றும் கையறு படரோடு

அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,

பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,– அகம் 71

பகல்  பொழுதை  வழியனுப்பி வைத்துவிட்டுத் துன்பம் தரும் மாலை வந்துவிட்டது. சுனையில் பூத்திருந்த பூக்களில் தேன் தீர்ந்துவிட்டதால் வண்டினம் மரத்தில் பூத்திருக்கும் மலர்களை நாடுகின்றன. செல்வம் குறைந்து போனதும் அவரை விட்டுவிட்டுச் செல்வம் நிறைந்திருப்பவரை நாடிச் செல்லும் நயனில்லாத மக்களைப் போல, வண்டினம் வேறு பூக்களை நாடுகின்றன. மான் கூட்டம் மருளும்படி வானமானது பொன் உலைக்களத்தில் வேவது போல அந்தி வானமாகப் பூத்துக் கிடக்கிறது. ஐம்புல அறிவும் கைவிட்டு அகன்று துன்புறும்படி வானத்தில் மழைத்துளி இல்லாத மஞ்சு மேகங்கள் உலவுகின்றன.

xxxxx

ஓங்கு மலை நாட! ஒழிக, நின் வாய்மை

காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி,

உறு பகை பேணாது, இரவின் வந்து, இவள்

பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு

அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்,           

கண் கோள் ஆக நோக்கி, ”பண்டும்

இனையையோ?” என வினவினள், யாயே;—நற்றிணை 55

வண்டுகள் அவள் தோளை மொய்த்தன. அதனைப் பார்த்த தாய் முன்பெல்லாம் இப்படி மொய்ப்பதில்லையே என்றாள். திகைத்துப்போன இவள் என்னைப் பார்த்தாள். நான், எரியும் சந்தனக்கட்டை மணம் இவள் பட்டிருப்பதால் வண்டுகள் மொய்க்கின்றன என்று சொல்லி மழுப்பிவிட்டேன் – இவ்வாறு தோழி தலைவனிடம் சொல்லி, களவு நீடிப்பதை விட்டு, மணந்துகொள்ளும்படி, குறிப்பால் உணர்த்துகிறாள். 

Xxxxx

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்

தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்

கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!         5

நீயே பெரு நலத்தையே; அவனே,

நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,

தண் கமழ் புது மலர் ஊதும்

வண்டு” என மொழிப; ”மகன்” என்னாரே.நற்றிணை  290

ஆண்கள் மலர் /பெண்களை மேயும் வண்டுகள் போன்றவர்கள்

அவன், நீர் நிறைந்த பொய்கையில் அன்றாடம் மலரும் புது மலர்களை

ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன் என்று கூறுகின்றனர்.

அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை.

xxxx

ஐங்குறுநூறு 90, ஓரம்போகியார், மருதத் திணை – பரத்தை, தலைவியின் தோழியர் கேட்குமாறு தலைவனிடம் சொன்னது

மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல்?

வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான் கொல்?

அன்னது ஆகலும் அறியாள்,

எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே.—ஐங்குறுநூறு 90

பொருளுரை:   தலைவனின் தன்மையை வண்டுகள் பெற்றுக் கொண்டனவா? அல்லது வண்டுகளின் தன்மையைத் தலைவன் பெற்றுக் கொண்டானா?  இதை அவள் அறியவில்லை.  அறியாது, என்னை வெறுத்துப் பேசுகின்றாள், அவனுடைய மனைவி.

—subham—

Tags – சங்க இலக்கியத்தில்,  தேனீக்கள்,  தேனீக்கள் தேவி , பிரமராம்பா 4

Leave a comment

Leave a comment