WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.070
Date uploaded in London – — 7 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-3-2024 உலக மகளிர் தினம்த்தையொட்டி மாலைமலர் 6-3-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது,
பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 1
ச. நாகராஜன்
உலக மகளிர் தினம்
மார்ச் 8ம் நாள் உலக மகளிர் தினம்.
2024ஆம் ஆண்டின் கோஷமாக முன்னிலைப்படுத்தப்படுவது : பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை துரிதப் படுத்துங்கள்.(Invest in women; Accelerate progress)
உலக ஜனத்தொகை 810 கோடி என்ற எண்ணிக்கையை 2024இல் எட்டி விட்டது. இதில் மகளிரின் எண்ணிக்கை 49%
பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதாக அனைவரும் கூறி வந்த போதிலும் உலகில் சுமார் 8 சதவிகித பெண்கள் அன்றாட உணவிற்கே அல்லல் படும் நிலையில் இருக்கின்றனர்.
ஆகவே சுருக்கமாகச் சொல்லப் போனால், “போகுமிடம் வெகு தூரம் ; போக வேண்டும் நெடு நேரம்” என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் இன்றைய நிலை.
பெண்கள் இன்றிருக்கும் நிலையைக் கூடத் தாமாகப் பெறவில்லை. அதற்கென ஆங்காங்கே உரிமைப் போர்கள் நடைபெற்றே வந்தன.
பெண்கள் போராடிப் பெற்ற ஓட்டுரிமை
பெண்கள் சாதாரணமாகப் பெறவில்லை ஓட்டுரிமையை! மிகுந்த போராட்டம் அதற்காகவே பிரிட்டனில் வெடித்தது. பெண்கள் ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்ட போது “பைத்தியக்காரத்தனமான, சூழ்ச்சி நிறைந்த முட்டாள் பெண்கள் கேட்கும் உரிமை இது” என்று கூறிய விக்டோரியா மகாராணியார் ஒரு பெண்ணிற்கு சாட்டையால் அடித்து தண்டனை தர ஆணையிட்டார்.
ஆனால் பெண்கள் அசரவில்லை. 1901ஆம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் பட்டம் சூட்டிய போது எமிலின் பங்கர்ஸ்ட் என்ற பெண்மணியின் தலைமையில் கூட்டம் கூட்டமாகப் பெண்களின் அணி திரண்டது. ஆண்கள் கூட்டம் போடும் இடங்களிலெல்லாம் அவர்கள் திடீரென வந்து குதித்தனர். மேடை மீது ஏறி மெகா போன் வாயிலாக எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று கோஷமிட்டனர். உண்ணாவிரதம் இருந்தனர். சிறைக்கும் சென்றனர்.
இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் கர்ஸான் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பதினைந்து காரணங்களைப் பட்டியலிட்டார். ராயல் கமிஷனோ ‘ ஒரு பெண்ணின் மூளை எதையும் சமாளித்து ஈடு கொடுக்க வல்லதா” என்று ஆராய முற்பட்டது.
ஆனால் பெண்கள் அயர்ந்து போகவில்லை.
.
முதலாம் உலக மகாயுத்தம் 1914இல் ஆரம்பிக்கவே ஆண்கள் போர்க்களம் செல்லவே, அனைத்து வேலைகளையும் பெண்கள் மேற்கொண்டு தங்கள் திறனைக் காண்பித்தனர். டிராம் விடுவது, கார்களை ஓட்டுவது, மெகானிக்குகளாக அனைத்து வாகனங்களையும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்து காட்டவே உலகமே பிரமித்தது. 1918இல் யுத்தம் முடிந்தது. பிரதம மந்திரி ஜார்ஜ் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார்.
போராட்டம் உலகெங்கும் வலுக்கவே இன்னும் 28 நாடுகள் பெண்களுக்கு உரிமையை வழங்கின. 1952இல் களமிறங்கிய ஐ.நா. உலகெங்கும் ஆண்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்குக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
முன்னோடிகள்
பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஏராளமான அதிசயப் பெண்மணிகள் உள்ளனர். எடுத்துக்காட்டிற்கு எலினார் ரூஸ்வெல்டைச் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக நான்கு முறை பதவி வகித்து சாதனை புரிந்த ப்ராங்ளின் ரூஸ்வெல்டின் மனைவியான இவர், அவரது வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தவர்.
அத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறியவுடன் அவர் அடிக்கடி நிருபர்களைச் சந்திக்கப் போகிறேன் என்றார். அனைவரும் மகிழ்ந்த அந்த வேளையில் அற்புதமான அடுத்த வரியை அவர் கூறினார்: “ஆனால் அவர்கள் எல்லோரும் பெண்களாகவே இருக்க வேண்டும்!”
அனைவரும் பிரமித்தனர். எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின. பத்திரிகை உலகம் புதிய அழகைப் பெற்றது. செய்திகளின் தரமும் கூடியது.
அதே போல உலக அரங்கில் பெண்களின் தாக்கம் அதிகமானது. இதுவரை அறிவிக்கப்பட்ட 864 நோபல் பரிசுகளில் 64 பரிசுகளை பெண்மணிகள் இலக்கியம், மருத்துவம், அமைதி, இரசாயனம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெற்றுள்ளனர்.
பாரத ரத்னா
பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி, மதர் தெரஸா, அருணா ஆஸப் அலி, இசையரசி எம்.எஸ். சுப்பலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர் ஆகியோர் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளனர்.
விண்வெளி வீராங்கனைகள்
1963இல் முதல்முறையாக வாலெண்டினா தெரஷ்கோவா என்ற ரஷிய பெண்மணி தனது 26ம் வயதிலேயே விண்ணில் பறந்து சாதனை நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணிகளில் வீராங்கனைகள் ஏராளமானோரும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர். ஸ்வெட்லேனா சாவிட்ஸ்கி, சாலி ரைட், கிறிஸ்டா மக்லிப், மே ஜெமிஸன், ஐலீன் காலின்ஸ், இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா, பெக்கி விட்ஸன், கிறிஸ்டினா கோச், ரெஸிகா மெய்ர், கேட் ரூபின்ஸ் செய்த சாதனைகள் வியப்பூட்டுபவை; பிரமிக்க வைப்பவை.
உத்வேகமூட்டும் பெண்மணிகள்
உலகளாவிய விதத்தில் உத்வேகமூட்டும் பெண்மணிகள் பட்டியலைத் தயாரிக்கும் பத்திரிகைகளும், சர்வே நிபுணர்களும் தரும் தகவல்கள் சுமார் பத்தாயிரம் பேரைச் சுட்டிக் காட்டுகின்றன.
அரசியலில் நியூஜிலாந்து பிரதம மந்திரி, ஜேஸிந்தா ஆர்டன், அமெரிக்காவின் கமலா ஹாரிஸ் மற்றும் ஹில்லாரி க்ளிண்டன், இந்தியாவின் நிர்மலா சீதாராமன், அழகிகள் மற்றும் திரைப்படத் துறையில் ஐஸ்வர்யா ராய், சீன நடிகை யாங் மி, ப்ரியங்கா சோப்ரா, பாடகிகளில் டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்டோர் முன்னணியில் இடம் பெறுகின்றனர்.
இன்ஃபோஸிஸ் பவுண்டேஷனை நிறுவிய சுதா மூர்த்தி சிறந்த எழுத்தாளர். சேவை மனப்பான்மை கொண்டவர். கோவிட் காலத்தில் அவர் ஆற்றிய சேவையை அனைவரும் பாராட்டினர்.
உலகத்தில் மீடியா துறையில் ஒரு கலக்கு கலக்கி முன்னணியில் நிற்பவர் ஓப்ரா வின்ஃப்ரே. சிறு வயதில் பல கொடுமைகளுக்கு ஆளாகி சுயமாக முன்னுக்கு வந்த இவர் பெண்களுக்காக குரல் கொடுப்பது நியாயமானதே.
நீண்ட இந்த பட்டியலில் அன்றாடம் சேரத் துடிக்கும் பெண்மணிகளால், இது ஆயிரம் ஆயிரமாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை.
விளையாட்டுத் துறையிலும் அறிவியலிலும் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்மணிகள் எங்களுக்கு இங்கு சில இடைஞ்சல்கள் இருக்கின்றன என்று சொல்வது கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம்!
பிரபலம் வேண்டாம்; சாதனையே முக்கியம்!
எங்களுக்குப் பெயர் வேண்டாம், புகழ் வேண்டாம், காசுபணம் வேண்டாம் என்று சொல்லும் அபூர்வப் பெண்மணிகளும் இல்லாமல் இல்லை.
எடுத்துக்காட்டிற்கு திம்மக்காவைக் கூறலாம். இவருக்கு இப்போது வயது 112. கர்நாடகத்தில் பழைய மைசூர் ராஜ்யத்தில் குப்பி தாலுக்காவில் (இப்போது தும்கூர்) 1911, ஜூலை 8ஆம் நாள் பிறந்த இவர் ஏராளமான மரக்கன்றுகளை சிறு வயதிலிருந்தே நட்டு வந்திருக்கிறார். இவர் நட்டு வைத்த ஆலமரங்கள் மட்டும் 400. பத்ம ஶ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
** தொடரும்