இந்து மதத்தில் இருதலைப் பறவை (Post No.13,074)

Karnataka Govt. emblem

இந்து மதத்தில் இருதலைப் பறவை (Post No.13,074)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,074

Date uploaded in London – –   8 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இருதலைப் பறவை பற்றி 2011  டிசம்பரில் ஒரு கட்டுரை எழுதினேன். அது பற்றிய மேல் விவரங்களை அளிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம் .

கண்ட பேரண்ட பக்ஷி , பாரண்ட பட்சி (भारण्ड) (गण्डभेरुण्ड), என்று இதை சம்ஸ்க்ருதத்தில் அழைப்பர். சுமேரியா முதல் விஜய நகர பேரரசு வரை இருந்த இந்த சிற்பங்களை இன்றும் ரஷ்ய நாணயங்களிலும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கொடிகள் சின்னங்களிலும் பயன்படுத்துகின்றனர் . இந்தியாவைப் பொறுத்த மட்டில் கர்நாடக அரசு,  மைசூர் ராஜாங்க  சின்னங்களில் இன்றும் இருக்கிறது . சங்கத் தமிழ் நூல்களிலும் இந்தப் பறவை வருகிறது. ஆயினும் இன்றுவரை யாரும் இதை உயிருடன் பார்த்ததில்லை . பாமர மக்கள் இதை அண்டரண்ட பக்ஷி என்பர்

கண்ட பேரண்ட என்றால் சக்தி வாய்ந்த கழுத்து (கண்டம்) என்று பொருள்.

இந்து மத புராணங்களில் இது பற்றிய கதை ஒன்று உள்ளது .

Mysore Royal Emblem

புராணக் கதை

ஹிரண்ய கசிபு என்னும் அரக்கனைக் கொன்று அவனது மகன் பிரஹ்லாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த அவதாரம் நரசிம்மாவதாரம். இது தசாவதாரங்களில் ஒன்று. இந்தக் கதையில் ஒரு இடைச் சொருகலாக   வரும் கதைதான் கண்டபேரண்ட பட்சி கதை .

நரசிம்மத்தின் உக்கிரத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொண்டனர். உடனே அவர் சரபம் என்னும்  மிருகமாக வந்து நரசிம்மத்தை அடக்குவதற்கு முயன்றார்.  ஆனால் விஷ்ணு,  கண்ட பேரண்டப் பறவையாக மாறி சரபத்தை விரட்டினார். பின்னர் இருவரும் விஷ்ணு, சிவன் என்ற சுய ரூபத்தில் அவரவர் இருப்பிடத்தை அடைந்தனர் . இந்தக் கதையின் உட்கருத்து இருதலைப் பறவை  மிகவும் சக்தி  வாய்ந்தது ; வெல்லமுடியாதது என்பதாகும் . சக்திவாய்ந்த என்ற பொருளின் காரணத்தினாலேயே கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவும் இன்றும் இதைப் போற்றுகின்றன.

யோக வாசிஷ்ட நூலில் ஒரு ரிஷியின் பெயராகவும் பாராண்ட வருகிறது ; ஆனால் இதில் வியப்பு எதுவும் இல்லை ; கெளசிக பரத்வாஜ, சாண்டில்ய , ஜடாயு முதலிய பெயர்கள் பறவைகளின் பெயர்களே!

சமண மதத்தில் மூன்றுகால் பறவையாக இது வர்ணிக்கப்படுகிறது 2000 ஆண்டுப் பழமையான பஞ்ச தந்திரக் கதையிலும் தமிழ் சங்க நூல்களிலும் இது பற்றி காண்கிறோம்.

XXXXX

Double-Headed bird found in Alaja Huyuk, Turkey, 14th C BC

கீழ்கண்ட கட்டுரை (25-12-2011-ல் வெளியிடப்பட்டது)
சுமேரியாவில் தமிழ் பறவை
ச.சுவாமிநாதன்


சங்கத் தமிழ் இலக்கியமான அகநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. அது ஒரு இரண்டு தலைப் பறவை பற்றிய செய்தி. இந்தப் பறவை சுமேரியாவில் கி.மு 3800 சிலிண்டர் முத்திரை ஒன்றிலும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பஞ்ச தந்திரக் கதைகளிலும் அச்யுத ராயரின் தங்கக் காசுகளிலும் இதே இரு தலைப் புள் கண்டரண்ட பறவை என்ற பெயரில் உள்ளது. அல்பேனியாவின் தேசியக் கொடியிலும் ரஷ்யாவின் காசு, கரன்சி நோட்டுகளிலும் தமிழ்நாடு,ஆந்திர,கர்நாடக கோவில்களிலும் இந்தப் பறவையின் ஓவியங்களையும் சிலைகளையும் பார்க்கலாம். எப்படி ஒரு தமிழ் பறவை இப்படி உலகெங்கும் பறந்து சென்று வெற்றிக் கொடி நாட்டியது என்பது ஒரு சுவையான செய்தி.

இதோ அகநானூறு கூறுவதைக் கேளுங்கள்:
“யாமே,பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓர் உயிரம்மே”
–கபிலர் (பாடல் எண் 12)

இதன் பொருள்: இனி யாங்களோ ஒரு பொழுதும் பிரிதல் இல்லாது கூடிய வெறுத்தல் இல்லாத நட்பினால் இரண்டு தலைகளுடைய ஒரு பறவையின் உடம்பில் உள்ள ஓர் உயிர் போல் உள்ளோம்.
இரண்டு தலைப் பறவைக்கு தலைகள் மட்டுமே இரண்டு.ஆனால் வயிறு ஒன்றுதான். கபிலர் பாடிய பாடலில் இருவர் இருந்தாலும் உயிர் ஒன்றுதான் எனப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் இந்தியா முழுதும் இப்பறவை பற்றி தெரிந்திருக்கிறது. ஆகையால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட வடமொழி நூலான பஞ்ச தந்திரக் கதையிம் இப்பறவை வருகிறது. புறாக்கள் அனைத்தும் வேடனின் வலையில் சிக்கி அவை அனைத்தும் ஒன்றாகப் பறந்து சென்று வேடனை ஏமாற்றிய கதையை அனைவரும் அறிவோம். அந்தக் கதையில் ஒரு துணைக் கதையாக கண்ட பேரண்ட பட்சி கதை வருகிறது. இரு தலை பறவையின் இரண்டு தலைகளும் ஒன்றுக்கொன்று சண்டை யிடும் கதை. ஒரு தலை தனக்கு அம்ருதம் வேண்டும் என்றும் இன்னொரு தலை தனக்கு விஷம் வேண்டும் என்றும் சண்டை போடுகின்றன. இறுதியில் ஒரு தலை விஷம் அருந்தவே அப்பறவை இறக்கிறது. ஒற்றுமையின்மையால் இருதலைப் பறவை இறக்கும் கதை இது.

சங்கத் தமிழ் நூல்களான பரிபாடல் (8-72), கலித்தொகை (89), பிற்கால நூலான தகடூர் யாத்திரை ஆகியவற்றிலும் இருதலைப் பறவை உவமை வருகிறது.அந்த அளவுக்குப் பிரபலமான கதை. சேர மன்னனும் அதியமானும் ஒரே குலத்தவராயிருந்தும் சண்டை போட்டதற்கு உவமையாக தகடூர் யாத்திரை இதைக் காட்டுகிறது.

xxxx

துருக்கியில் இரு தலைப் புள்கி.மு 1400

சுமேரியாவில் இது லகாஷ் நகர தெய்வம் நினூர்தாவின் சின்னமாகக் கருதப் பட்டது.

துருக்கியில் ஹட்டுசா முதலிய நகர்களில் இது இரண்டு தலைகளாலும் இரண்டு முயல்களைத் தூக்குவது போல பெரிய உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இது கி. மு 1400ல் செதுக்கப் பட்டது. துருக்கியின் வரலாற்றில் பின்னிப் பிணைந்துவிட்ட இப்பறவைக்கு வானத்தில் விண்கலத்திலிருந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு வடிவத்தை எர்சூரும் மாகாணத்தில் இப்போது கட்டிவருகிறார்கள்.

நாயக்க மன்னர் காலத்தில் இப்பறவை மிகப் பலம் வாய்ந்த டினோசர் பறவை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அச்யுத ராயர் (1530-1542) வெளியிட்ட தங்க நாணயத்தில் இரண்டு யானைகளைத் தூக்குவது போல படம் உள்ளது. அவ்ருக்கு முந்திய மன்னன் நாகரி எழுத்தில் பெயரை மட்டும் பொறித்தான்.

தமிழ்நாட்டில் ஆவுடையார் கோவில் ஒவியத்தில் இது பல யானைகளைத் தூக்குவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்னாடகத்தில் கேலடி கோவில் சிற்பத்திலும்,தட்சசீலத்தில் சமணர் கோவில் சிற்பங்களிலும் இப்பறவை உண்டு. ஸ்ரீசைலம்,பேலுர்,கோரமங்கலா கோவில்களிலும் இதைக் காணலாம்.

மைசூர் மன்னர் உடையார், இதை 500 ஆண்டுக் காலமாக ராஜவம்ச சின்னமாக பயன்படுதுகின்றனர். இன்றும் அரண்மனையில் இதைக் காணலாம். கர்நாடக அரசும் இதை தனது சின்னத்தில் பொறித்துள்ளது.
இப்பறவை ரஷ்ய நாணயங்கள், கரன்சி நோடுக்கள், அல்பேனியா,பல்கேரியா தபால் தலைகள், தேசியக் கொடி எல்லாவற்றிலும் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இரு தலைப் பறவை இல்லாத இடமே இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் கபிலர் பாடிய இப்பறவை எங்கெல்லாம் பறந்து செண்றுவிட்டது!!

குறுந்தொகையில் இருதலைக் குழந்தை

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் ஒரு இரு தலைக் குழந்தை Siamese Twins பற்றிய சுவையான செய்தி வருகிறது. பாடல் எண் 324 ஐ எழுதியவர் பெயரே கவைமகன்.அதாவது இருதலை உடையோன். கவட்டை, ஆங்கிலச் சொல் gap ஆகியவை இதனுடன் தொடர்புடைய சொற்களாக இருக்கலாம்.

ரிக் வேதத்தில் பெயர் தெரியாத மிகப் பழைய புலவர்களுக்கு அவர்கள் பயன் படுத்தும் சொற்றொடர்களைக் கொண்டு பெயரிடப் பட்டதாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டில் தமில் இலக்கியத்தைப் பகுத்து வைத்தோரும் அதே நடை முறையைப் பயன் படுத்தி ஏறத்தாழ 20 புலவர்களுக்கு இப்படி காரணப் பெயர்களை இட்டுள்ளனர்.

கவைமகன் (twins or Siamese Twins) எழுதிய குறுந்தொகை 324 ல் இருதலைப் புள் போலவே கருத்து கூறியுள்ளார்.


கவை மக நஞ்சு உண்டா அங்கு,
அஞ்சுவல் பெரும! என் நெஞ்சத்தானே.
— கவை மகனார்

பொருள்: இத்தலைவியோ தன் அறியாமையினால் வருந்துகின்றாள். யான் என் மனத்தினுள்ளே இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்தும் ஒரு தாய் வருந்துவதைப் போல நீ அங்கனம் வருதலை எண்ணி அஞ்சுவேன்.

ஒட்டிப் பிறக்கும் இருதலை குழந்தை மிகவும் அபூர்வம்.ஒரு லட்சத்தில் ஒர்ன்றுதான் இப்படிப் பிறக்கும்.அக் குழந்தைகளை ஆபரேஷன் செய்து தனியே பிரிக்க 18 மணி நேரம் கூட ஆகும்.இப்படிப் பட்ட நீண்ட நேர அறுவைச் சிகிச்சைகள் அண்மையில் நடந்தன.
மேற்கூறிய கவை மகன் உவமையில் ஒரு தலை விஷம் உண்டால் மறு தலையும் இறக்கும் என்பது விளக்கப் பட்டுள்ளது.

XXXXX

Russian Coin, Year 2009

சுமேரியாவில் கருடன் கதை

சுமேரியாவில் கிஷ் என்னும் நகரத்துக்கு முதல் மன்னன் ஏதனன். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. ஷாமாஷ் என்னும் சூரியக் கடவுளிடம் முறை இடுகிறான். குழந்தை பிறப்பதற்கான மர்ம மூலிகையின் பெயரைச் சொல்லுமாறு வேண்டுகிறான். மலைக்குச் செல்லும் படி சூரியதேவன் உத்தரவிடுகிறான். இதற்கிடையில் மலையில் பாம்புகளுக்கும் கருடன்களுக்கும் இடையில் சண்டை. எல்லா பாம்புகளையும் கருடன் பிடித்துத் தின்பதாக புகார். உடனே பாம்புகள் கடவுளிடம் முறையிட்டன. கருடனைப் பிடிக்க கடவுள் ஒரு திட்டம் தருகிறார். கருடனும் அகப்பட்டுக் கொள்கிறான். அந்த நேரத்தில்தான் ஏதனன் அங்கு செல்கிறான்.

கருடனை ஏதனன் காப்பாற்றுகிறான். நன்றிக்கடனாக அவனை தேவலோகத்துக்கு அது அழைத்துச் செல்கிறது. ஏதனன் உயரத்தைக் கண்டு பயப்படவே திரும்பிவிடுகின்றனர். பின்னர் பூவுகத்துக்கு வந்தவுடன் ஒரு கனவு வருகிறது. .மீண்டும் தேவ லோகம் செல்லுகின்றனர். இந்த
இடத்தில் களிமண் பலகை உடைந்திருக்கிறது.

அச்யுத ராயரின் தங்கக் காசு

இருந்தபோதிலும் பிற்கால களிமண் பலகைகளில் ஏதனனின் மகன் பலி அரசாண்டதாக வருவதால் தேவ லோக மூலிகை பெற்று குழந்தை பெற்றிருப்பான் என்றே ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். இந்தக் கதையிலும் இந்துமத கருடன் கதையிலும் கருடன்- நாகர் சண்டை வருவதும், அமிர்தம் அல்லது அற்புதக் குளிகை கொண்டுவர தேவலோகம் செல்லுவதும் ஒரே மாதிரியாக உள்ளன.

ஏதனன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததால் அவனை யத்னன் என்று அழைத்திருக்கலாம். யத்ன என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு விடாமுயற்சி என்று பொருள். யத்னன் உடன் சென்றவன் பெயர் சுமுகன். அவனுடைய மக்ன் பெயர் பலி. அதுவும் சம்ஸ்கிருத சொல். சுமுகன், சுமேரு மற்றும் அதர்வ வேதத்தில் வரும் தியமத், அலிகி, விலிகி ஆகிய சம்ஸ்கிருத சொற்கள் சுமேரியாவில் காணப்படுகின்றன. இவை எதற்கும் மேலை நாட்டினர் விளக்கம் சொல்ல முடியவில்லை.


ரிக்வேதத்தில் கருடனை சுபர்ணன், ஸ்யேனன் என்று அழைக்கின்றனர்.
சுமுகன், சுமேரு. அலிகி, விலிகி பற்றி தனியாகக் காண்போம்.

–SUBHAM—

இருதலைப் பறவை , கண்டபேரண்ட பட்சி, பாராண்ட பட்சி, சங்கத் தமிழ் நூல்கள் , ரஷ்ய நாணயம், சுமேரியா, இந்து மதத்தில் ,

Leave a comment

Leave a comment