WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.073
Date uploaded in London – — 8 March 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-3-2024 உலக மகளிர் தினம்த்தையொட்டி மாலைமலர் 6-3-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது,
பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்! – 2
ச. நாகராஜன்
இதிஹாஸத்திலும் இலக்கியத்திலும் பெண்கள்
ராமாயண மஹாபாரத இதிஹாஸங்களில் வரும் அறிவு சால் பெண்மணிகளைப் பற்றி எழுதப் புகுந்தால் ஒரு கலைக்களஞ்சியமே உருவாகும்.
திரௌபதி தினமும் பத்தாயிரம் பேர்களுக்கு பெயரைக் குறிப்பிட்டு அன்றாடப் பணிகளைத் தானே நேரில் தருவது வழக்கம்.. மெமரி க்வீன் – நினவாற்றல் ராணி என்றே அவருக்குப் பெயர்.
தமயந்தியோ காதலன் நளனைப் போலவே அதே உருவில் வந்த தேவர்களை தன் கூரிய அறிவு கூர்மையால் இனம் கண்டாள். கண் இமைத்தலால் (தேவர்களுக்கு கண் இமைக்காது; மனிதனான நளனுக்கு இமைக்கும்). அடிகள் காசினியில் தோய்தலால் – தேவர்களுக்கு கால் பூமியில் படாது. நளனுக்கு (பூமியில் கால் ஊன்றி நிற்கும்) வண்ண மலர் மாலை வாடுதலால் (தேவர்களுக்கு சூட்டப்பட்ட மாலை வாடவே வாடாது. மனிதனான நளனுக்கு சூட்டப்பட்ட மாலை வாடி இருக்கும்). இத்தகைய அறிவு கூர்மையால் நளனை இனம் கண்டு அவனுக்கு மாலை சூடிய அற்புத அறிவு சால் பெண் தமயந்தி.
சாவித்திரியோ யமனிடம் வாதாடி சத்தியவானின் உயிரை மீட்டாள்.
இப்படி அறத்தின் அடிப்படையிலான நூற்றுக் கணக்கான பெண்மணிகளை நமது இதிஹாஸங்களும் இலக்கியமும் சுட்டிக் காட்டுகின்றன.
தமிழ் இலக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் சங்க இலக்கியத்தில் நாம் காணும் பெண் புலவர்கள் ஏராளமானோர்.
அஞ்சில் ஆந்தைமகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கழார்க் கீரனெயிற்றியார், குமிழிஞாழார் நப்பசலையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப் பூதியார், வெள்ளிவீதியார் என்று இந்தப் பட்டியல் நீளும். ஔவையாரைப் போல இன்னொரு பெண் புலவர் இலக்கிய உலகில் உண்டா, என்ன?
பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகள்
“ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று மகாகவி பாரதியாரின் முழக்கம் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. என்றாலும் நம் நாட்டைப் பொறுத்த வரையில்
1) அரசியலுக்குத் தேவையான அளவு தலைமைப் பண்புள்ள பெண்மணிகள் இன்னும் தேவை.
2) வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள, கல்வியறிவில்லாப் பெண்மணிகள் ஏற்றம் பெற உரிய நடவடிக்கை தேவை.
3) பாலியல் கொடுமைகளும், இல்லத்தில் ஏற்படும் வன்கொடுமைகளும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.
4) நீதித் துறை, விளையாட்டு, அறிவியல், கல்வி, விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.
ஆணுக்கு அறிவு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி என்று மகாகவி பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் எண் 65.
தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்த போது அவருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.
அறிவில் சிறந்த அவரது மனைவி பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார்.
திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர்.
வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.
ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:
அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்
அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ
தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்
தான் கொண்ட சூல் அறியார் தான்
இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து கொண்ட கவிராயர் தன் மனைவியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார்.
ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், “நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன். ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கர்பமுற்று சிசு பிறக்கிறது. ஆகவே தங்கள் கர்ப்பத்தைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்” என்றார்.
மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும் போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.
சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.
அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.
விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.
விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!
சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.
குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப
அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட
சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்
மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே
பொருள்: தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!
தமிழ் மங்கையர் பொறுப்பு
இப்படி உலகிற்கே அரிய உண்மையை உணர்த்திய பெருமை தமிழ் மங்கையையே சாரும். பெண்களின் சம உரிமையை நிலை நாட்டி உலகெங்கும் அவர்களை மேல் நிலைக்குக் கொண்டு செல்ல தமிழ் மங்கையரை விட தகுதி வேறு யாருக்கு உண்டு. உலக மகளிர் தினத்தில் சிந்திப்போம். செய்வார்களா?
***